Published : 03 Feb 2018 11:07 AM
Last Updated : 03 Feb 2018 11:07 AM
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகள், ஆயகலைகள் மீதான விழிப்புணர்வு இளம் தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. இவற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் பெற்றோரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி ஆங்காங்கே பயிற்சி மையங்களைத் தொடங்கி ‘காசு’ பார்க்கும் பலருக்கு மத்தியில், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சியளித்து, அவர்களை சர்வதேச சாதனையாளர்களாக உயர்த்திக் கொண்டிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ரா.அரவிந்த்.
உலக விளையாட்டு மற்றும் கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நேபாளத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தனது மாணவர்களுடன் பங்கேற்று, 4 தங்கப் பதக்கங்களை வென்ற வெற்றிக்களிப்பில் இருந்த அரவிந்த்திடம் பேசினோம்.
“திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பக்கத்துல இருக்க கூத்தைப்பார் கிராமம்தான் என்னோட சொந்த ஊரு. இப்போ, திருவெறும்பூர்ல வசிக்கிறோம். பள்ளிக் கூடத்தில படிக்கிறபோதே, சிலம்பம் கத்துக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமா முடியாம போயிடுச்சு.
அதுக்கப்புறம் பள்ளி, கல்லூரின்னு பல வருஷங்கள் ஓடினாலும், சிலம்பம் கத்துக்கனுங்கிற ஆசை மட்டும் அப்படியே இருந்தது. முதலியார்சத்திரத்துல இலவசமா சிலம் பம் கத்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி, மா.ஜெயக்குமார் என் ஆசான்கள். அப்போது போலீஸ்ல வேலை கிடைச்சு, திருச்சி மாநகர ஆயுதப்படையில சேர்ந்தாச்சு.
நம்மள மாதிரி ஆசையோட இருக்கிற, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா பயிற்சி கொடுத்து சாதனையாளர்களாக உருவாக்கனும்னு முடிவு பண்ணி பணியை ஆரம்பிச்சேன். இப்போ 150-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பயிற்சிக்கு வர்றாங்க. சிலம்பம் மட்டுமில்லாம, உட லை வலுவாக வைச்சுக்கிறதுக்கான உடற்பயிற்சிகள், வர்மம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள், வாள் சண் டை, தீப்பந்த விளையாட்டுன்னு சொல்லித் தர்றோம்.
குறிப்பாக, கம்பு சுத்துறதுல கில் லாடி நாங்க. 2017-ம் ஆண்டுல மட்டும் மாநில, மாவட்ட அளவில 214 பதக்கங்களைப் பெற்றிருக்கோம். அதேபோல 71 மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக 30 நிமிடம் ஐஸ் கட்டியில் நின்னு சிலம்பம் செய்து, லிம்கா சாதனைக்கு அனுப்பியிருக்கோம். அதோட, எவரெஸ்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்லயும் பல சாதனைகள் பண்ணியாச்சு.
இப்போகூட, நேபாளத்துல நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில சீனியர் பிரிவுல எனக்கும், சப் ஜூனியர் பிரிவுல கவின் அமுதனுக்கும், கேடட் பிரிவுல மதுமித்ரன், ரவிதேவ் ஆகிய என்னோட மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் கிடைச்சிருக்கு. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சாரும், ஆயுதப்படையில இருக்கிற அதிகாரிகளும் எங்களை ஊக்கப்படுத்தி, பயிற்சிக்கு முழு ஒத்துழைப்புத் தர்றாங்க. அதனால அடுத்தடுத்த நாட்களில், இன்னும் ஏராளமான ஏழைக் குழந்தைகளை, சர்வதேச சாதனையாளர்களாக மாத்த முடியுங்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு. இது நடக்கும்” என்கிறார் அரவிந்த் குறையாத உற்சாகத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT