Last Updated : 27 Feb, 2018 09:31 AM

 

Published : 27 Feb 2018 09:31 AM
Last Updated : 27 Feb 2018 09:31 AM

மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பில்லாததால் வாகன நிறுத்தும் இடமாக மாறிய மதுரை சாலைகள்: கை விரித்தது காவல்துறை

மதுரை நகரில் வாகனப் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் போதுமான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தாததாலும் பெரும்பாலான சாலைகள் வாகன நிறுத்தும் இடங்களாகி, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் மதுரை. இங்குள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற மாவட்டங்கள், வட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் பழமையான கோயில்கள் அதிகம் உள்ள ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. மேலும் வர்த்தக ரீதியாக தென் தமிழகத்தில் முக்கிய கேந்திரமாக மதுரை உள்ளது. மதுரை மாநகராட்சியில் புறநகர் வார்டுகள் இணைப்புக்குப் பின் 100 வார்டுகள் உள்ளன. ஆனால், அதற்கேற்ப நகரில் சாலைகள், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது.

விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

நகரில் பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்பால் குறுகலாகி விட்டதால் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் தீராத தொல்லையாக நீடிக்கிறது. மேலும் நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த போதுமான வசதிகளை செய்யவில்லை. நகரில் புதிதாக வர்த்தக நிறுவனங்களை கட்டுபவர்களும் பார்க்கிங் வசதியுடன் கட்டுகிறார்களா என மாநகராட்சி நிர்வாகமும் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் மாசி வீதிகள், வெளி வீதிகள், அண்ணாநகர், கேகே. நகர், காமராஜர் சாலை, காளவாசல் பைபாஸ் சாலை , நேதாஜி சாலை, புதூர் சாலை, தல்லாகுளம், கோரிப்பாளையம், உட்பட நகரின் முக்கிய சாலைகளில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் சாலைகளில் நடந்துசெல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். நகரில் வாகன நெரிசல் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கயிறு, தடுப்பு வேலிகளை கட்டி தற்காலிக ஏற்பாடு செய்தாலும் பொதுமக்கள் விதிமீறி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். சில நேரங்களில் விதிமீறும் பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் முறையான வாகன நிறுத்தும் வசதியின்றி பாதிப்பு தொடர்கிறது. மற்றொருபுறம் முக்கிய சாலை சிக்னல்களில் நெருக்கடி தொடர் கதையாக உள்ளது.

தீர்வாகுமா மையத்தடுப்புச் சுவர்?

சேதுபதி மேல்நிலைப்பள்ளி முதல் யானைக்கல் பாலம், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம் சாலை, அழகர்கோவில் சாலை, காமராசர் சாலை, தேனி மெயின் சாலை,, பழங்காநத்தம் பகுதி உட்பட நகரில் மையப்பகுதியை விட்டு வெளியேறும் அனைத்து பிரதான சாலைகளிலும் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாகி விட்டது.

முக்கியச் சாலைகளில் உள்ள பிளாட்பாரங்களில் வாகனங்களை நிறுத்துவதால்தான் போக்குவரத்து நெரிசல் உருவாவதாக கூறுகின்றனர். நகரில் நெரிசலை தவிர்க்க இருவழி சாலைகள் அனைத்திலும் மையத் தடுப்புச் சுவரை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தினமும் 800 புதிய பைக்குகள் பதிவு

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரை நகரில் மக்கள், வர்த்தகர்கள், ஒத்துழைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். நகரில் புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இளைஞர்களிடம் நவீன் பைக் மோகம் கூடியுள்ளது.

நான்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் தினமும் 800-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவாகின்றன. இதற்கு இணையாக கார், வேன் உட்பட பிற வாகனங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற சூழலில் ‘பீக் அவரில்’ ஒரு சிக்னலில் இருந்து மற்றொரு சிக்னலுக்கு நகர குறைந்தது 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இணைப்புச் சாலைகளில் இருந்து பிரதான சாலைக்கு அனைத்து வாகனங்களும் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அகலமான இருவழி சாலைகளில் தடுப்புச் சுவர் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

அதன்படி, கோரிப்பாளையம் தேவர் சிலை- பனகல் சாலை, அண்ணா பஸ்நிலையம், அழகர்கோவில் சாலை பாண்டியன் ஓட்டல்- ஐடிஐ, அல்அமீன் பள்ளி- சர்வேயர் காலனி சந்திப்பு, சிம்மக்கல் சாலையில் பிள்ளையர் கோயில்- யானைக்கல், வில்லாபுரம் பகுதியில் ஜெயவிலாஸ்- எம்எம்பி நகர்- பெரியார் சிலை, திருப்பரங்குன்றம் சாலையில் சீரடி சாய்பாபா கோயில்- பசுமலை, மேலவெளி வீதியில் ரயில் நிலையம் மெயின் நுழைவு வாயில்- ஸ்கார்ட் ரோடு, காமராசர் சாலையில் கீழவாசல்-தெப்பக்குளம் 16 கால் மண்டபம் வரை என நகரில் உள்ள இருவழிச் சாலைகளில் மைய தடுப்புச் சுவர்களை அமைக்க மாநகராட்சிக்கு பரிந்துரைத்துள்ளோம்.

வர்த்தக நிறுவனங்கள் ஆட்சேபம்

தடுப்புச் சுவர் மற்றும் அவற்றில் பொருத்தப்படும் ஒளிரும் மின் விளக்குகளால் இரவில் விபத்துகளை தடுக்கலாம். இருவழி சாலைகளில் சில இடங்களில் தடுப்புச்சுவர் எழுப்ப வர்த்தக நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஒருவழிப் பாதையில் ஒரு பகுதியில் வாகனங்களை நிறுத்த கடைக்காரர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகம் பாதிப்பதாகக் கூறி குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை மாற்றி பார்க்கிங் ஏற்படுத்த கோருகின்றனர். இதுபோன்ற சூழலில் மதுரை நகரில் பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x