Published : 22 Feb 2018 07:52 AM
Last Updated : 22 Feb 2018 07:52 AM
நான் சினிமா நட்சத்திரம் அல்ல; இனி உங்கள் வீட்டு விளக்கு. என்னை அரவணைத்து பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என ராமநாதபுரத்தில் நடிகர் கமல் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
ராமேசுவரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல் நேற்று பகல் 1 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தார். அங்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனது 60 ஆண்டுகால நண்பர் அண்ணாதுரை என்பவரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் அண்ணாதுரையை மட்டும் சில நிமிடங்கள் பேச அனுமதித்தனர்.
அண்ணாதுரை பேசும்போது, ‘கமலும் நானும் 60 ஆண்டுகால நண்பர்கள். எல்லோரும் கமலுக்கு ரசிகர்கள். ஆனால், கமல் எனது நடிப்புக்கு ரசிகர். கமல் மனிதநேய மிக்க மனிதர். காந்திய வழியில் கமல் வெற்றிபெற வேண்டும்’ என்றார்.
பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது: நான் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரை பார்த்தேன். தற்போது ஊர் மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் மாறவில்லை. ராமநாதபுரத்தில் எனது சித்தப்பா ஆராவமுதன் வீடு ஒன்று இருக்கிறது என நினைத்துக் கொள்வேன். இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது ஒரு வீடு இல்லை, ஊரே எனது வீடுதான். நானும் அண்ணாதுரையும், டிகேஎஸ் நாடக கம்பெனியில் நடிகர்கள். அண்ணாதுரை வந்தாலே மேடை ஆரவாரமாகும்.
இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, மதுரையில் சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாகத்தான் பார்த்திருப்பீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னை அரவணைத்து பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. கூட்டத்தை பார்க்கும்போது, இந்த வாய்ப்பை நழுவ விடலாமா? எனத் தோன்றுகிறது. இந்த அன்பு வெள்ளம் தொடர வேண்டும்.
இந்த விளக்கை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ராமநாதபுரம் மேடையில் கமல் 5 நிமிடங்கள் மட்டும் பேசினார். பின்னர், அரண்மனையில் ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி வீட்டில் மதிய உணவை முடித்துவிட்டு. பரமக்குடிக்கு பிற்பகல் 2.45 மணிக்கு வந்தார்.
பரமக்குடியில் மேடை தவிர்ப்பு
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கமல் மேடையில் ஏறாமல் காரில் இருந்தபடியே பேசியதாவது: உங்கள் அன்புக்கு நான் அடிமை. நான் மீண்டும் திரும்ப வருவேன். உங்களுடன் நிறைய பேசவேண்டும். அதிக முறை இங்கு வரவேண்டும். எனது நண்பரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வருகிறார். அவரை வரவேற்கச் செல்கிறேன் என்றார். அப்போது ரசிகர்கள், ‘மேடையில் ஏறி கமல் தரிசனம் தர வேண்டும்’ என ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவித்தனர். ‘வருகிறேன்’ என்ற பதிலோடு அங்கிருந்து கமல் புறப்பட்டார். 2 நிமிடம் பேசிய கமல் மொத்தம் 7 நிமிடங்களில் அப்பகுதியை கடந்தார்.
கலாமின் இறுதி ஊர்வலம்
மானாமதுரையில் ராமேசுவரம் செல்லும் பிரதான சாலையில் திரண்டிருந்த ரசிகர்களிடம் கமல் பேசும்போது, “45 ஆண்டுகளுக்குப் பின் உங்களை சந்திக்க வந்துள்ளேன். மதுரையில் கூட்டம் இருக்கிறது. உத்தரவு கொடுங்கள். உங்கள் உத்தரவை பெற்று அங்கு செல்கிறேன். திரும்ப வந்து உங்களை சந்திக்கிறேன்” என்றார்.
முன்னதாக ராமேசுவரத்தில் பேசிய கமல்ஹாசனிடம், ‘கலாம் இறுதி ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லை’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘இறுதி ஊர்வலங்களில் நான் பங்கேற்பதில்லை. எனது நம்பிக்கை அப்படி’ என்றார்.
மேலும், ‘இன்றைய தினம் அரசியல் கட்சி தொடங்க காரணம், இன்று உலக தாய்மொழி தினம். இதுவும் ஒரு காரணம். எனக்கு சிறு வயதில் இருந்து சுமாராக பேசத் தெரிந்த மொழியும் என் தாய்மொழியான தமிழ் மட்டும்தான்’ என்றார்.
சந்திரபாபு நாயுடு வாழ்த்து
மேலும் கமல் பேசும்போது, ‘ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு நேற்று முன்தினம் இரவு (20-ம் தேதி) தொலைபேசியில் வாழ்த்து கூறினார். அப்போது அவர், ‘கொள்கைகள் தொடர்பாக பேசினார். என்னைப் பொருத்தவரை மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம்.
மக்களுக்கு புரியும் விதத்தில் எனது கொள்கைகளைத் தெரிவிப்பேன். இதுவரை தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் இனி அவர்களது இல்லத்தில் வாழ விரும்புகிறேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT