Last Updated : 15 Feb, 2018 10:18 AM

 

Published : 15 Feb 2018 10:18 AM
Last Updated : 15 Feb 2018 10:18 AM

குருவிக்கும் இலவச ‘வீடு’

னிதர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த சிட்டுக்குருவி, தற்போது அழிந்துவரும் பறவையினங்களில் ஒன்றாகிவிட்டது. இதனால், சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இயற்கையின் மீதான ஆர்வத்தால் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க இலவச கூண்டுகளை விநியோகித்து வருகிறார் புதுச்சேரி அருண். இதுவரை தனது சொந்த செலவில் 800 கூண்டுகள் வரை பலருக்கு கொடுத்திருக்கிறார்.

புதுச்சேரியில் சில பகுதிகளில் நடிகர் சந்தானத்தின் படத்துடன் கூடிய சிட்டுக்குருவி கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விசாரித்தபோது, சந்தானம் மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் இதை விநியோகிப்பதாக தெரிவித்தனர். இந்தப் பணியை செய்து வரும் அருணிடம் பேசினோம்.

தனியார் கிளினிக்கில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். சிறு வயதில் இருந்தே பறவைகள், இயற்கையின் மீது எனக்கு தீராத ஆர்வம் உண்டு. வீட்டில் பறவைகளுக்கு தானியமும், தண்ணீரும் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். கொசப்பாளையம் பகுதியில் நிறைய மரங்கள் இருந்ததால் சிட்டுக்குருவிகள் அதிகம் வந்து செல்வதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் சிட்டுக்குருவியை பார்ப்பது அரிதாகிவிட்டது. செல்போன் டவர், சுற்றுச்சூழல் என பல காரணங்களைச் சொல்கின்றனர்.

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்காக சிறிய கூண்டுகளை தயாரித்து விநியோகிக்கத் தொடங்கினேன். கடந்த 2014 முதல் கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். வீடுகளில், கடைகளில் சிட்டுக்குருவிக்காக கூண்டு வைக்க விரும்பியவர்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றனர்.

நடிகர் சந்தானத்தின் ரசிகர் மன்றத்தில் புதுச்சேரி மாநில தலைவராக உள்ளேன். அதனால் ரசிகர் மன்றம் பெயரிலேயே கூண்டை விநியோகித்து வருகிறேன். இதுவரை 800 கூண்டுகளைத் தந்திருப்பேன். ஒரு கூண்டு செய்ய ரூ.130 வரை செலவாகும். எனது சொந்த பணத்தில் சேமித்துதான் கூண்டுகளை மொத்தமாக தயாரித்து வைத்து விநியோகித்து வருகிறேன்.

அத்துடன் நகரப்பகுதி, கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு போஸ்டர்களையும் ஒட்டி வருகிறோம். குறிப்பாக டீக்கடை, பெட்டிக்கடைகள் இருக்கும் பகுதியில், ‘பறவைகள் வாழும் இடம் என்பதால் புகை பிடிப்பதை தவிருங்கள்’ என்ற விழிப்புணர்வு வாசகம் கொண்ட போஸ்டரை ஒட்டி வருகிறோம். இயற்கை வளமாக இருந்தால்தானே நாமும், எதிர்கால சந்ததியும் நலமாக முடியும். இயற்கை அதன் இயல்பில் இருக்க பறவையினங்கள் ரொம்ப முக்கியம் என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x