Published : 25 Jan 2018 10:31 AM
Last Updated : 25 Jan 2018 10:31 AM

ஒரே ஒருகுருக்கள் ஜாஹிர் ஹுசைன்

தி

ருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரிலிருந்து பழூர் செல்லும் சாலையில் இருக்கிறது போத்துராஜா எல்லையம்மன் கோயில். நெற்றியில் திருநீறு, குங்குமம், இடுப்பில் காவிவேட்டி, ஒரு கையில் கற்பூரத் தட்டு, மற்றொரு கையால் மணி அடித்தபடி ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார் பூசாரி.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இருக்கிறது. இந்தக் கோயிலின் பூசாரி ஒரு இஸ்லாமியர். எல்லையம்மனுக்கு தனது சொந்த செலவில் அவரே கோயில் கட்டி அவரே அர்ச்சகராக இருந்து அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்த பூசாரியின் பெயர் ஜாஹிர் ஹுசைன். முத்தரசநல்லூரில் இறைச்சி கடை வைத்திருக்கிறார். எல்லையம்மன் சிலை, நவக்கிரக சிலைகள், பரிகார தெய்வங்களின் சிலைகள் என கோயிலில் இடம்பெற்றுள்ள சிலைகளை ஒவ் வொரு ஊராக தேடிக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஜாஹிர் ஹுசைன், 1971-ல் முத்தரசநல்லூர் அருகேயுள்ள பழூரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடன் சேர்த்து இவரது பெற்றோருக்கு 16 பிள்ளைகள். சாப்பாட்டுக்கே வழியில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை. சிறுவயதிலேயே வறுமை காரணமாக ஆடு, மாடு மேய்ப்பது, குதிரைகளை பராமரித்தல், மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்தல், மாட்டு வண்டி ஓட்டுதல் என கிடைக்கிற வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார். ஒருகட்டத்தில் கள்ளச்சாரயம் விற்கும் நிலைக்குப்போய், சிறைக்கும் சென்றிருக்கிறார். இந்தச்சூழலில் 1996-ல் நடந்த திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையின் போக்கு மாறி யது.

அதுகுறித்து அவர் சொன்னபோது, “வீட்டுக்கு எதிரே ஆலமரத்தடியில் எல்லையம்மன் சிலை இருந்தது. 2014-ல் ஒரு நாள் அம்மன் சிலையை காணவில்லை. யாரோ பெயர்த்தெடுத்து முத்தரசநல்லூர் பிள்ளையார் கோயில் அருகே போட்டுவிட்டுவிட்டது தெரிந்தது. நம்பிக்கையுடன் வழிபட்ட அம்மன் சிலை இல்லாதது ஊர் மக்களை வேதனையடையச் செய்தது. நானும் அம்மனின் பக்தன் என்பதால், எனக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் எல்லையம்மன் சிலையை எடுத்து வந்து மீண்டும் பிரதிஷ்டை செய்தேன். 2017 மார்ச்சில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் முடிந்தது” என்கிறார்.

கோயிலில் தினமும் ஒருகால பூஜையும் மார்கழி மாதத்தில் 2 கால பூஜையும் நடக்கிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி என அனைத்தும் முறைப்படி நடக்கின்றன. அர்ச்சனை முறைகளை கற்றபின் ஹுசைனே அம்மனுக்கு பூஜை, அபிஷேகங்களை செய்து வரு கிறார்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் கோயில் திருவிழா. பக்தர்கள் தங்கள் கோரிக்கையை சீட்டு எழுதி சாமியின் கையில் கட்டிவிட்டுச் சென்றால் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகம் இங்கு நிலவுகிறது.

“நான் முஸ்லிமாக இருப்பதால் நான் கோயில் கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் எனது சொந்த செலவில், சொந்த விருப்பத்தில் செய்யும் மத சடங்குகளை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்துவிட்டேன்” என்றார் ஹுசைன்.

இஸ்லாமிய குடும்ப பின்னணியைக் கொண்டிருந்தாலும் பக்தர்களைப் பொறுத்தவரை ஜா ஹிர் ஹுசைன் எல்லையம்மன் கோயிலின் ஒரே ஒரு குருக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x