Published : 23 Aug 2014 01:00 PM
Last Updated : 23 Aug 2014 01:00 PM
கொடைக்கானல் மலைக்கிரா மத்தில் பிளஸ் 2 முடித்து படிக்க வசதியில்லாமல் கல்லூரியில் `சீட்' கிடைக்காமல் தவித்த பழங்குடியின மாணவியை `தி இந்து' செய்தி எதிரொலியால் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தத்தெடுத்து சென்னை தனியார் கல்லூரியில் சேர்த்து முழுக் கல்விச் செலவுக்கும் பொறுப்பேற்றுள்ளது.
கொடைக்கானல் அருகே நடந்து கூட செல்ல முடியாத பள்ளத் தாக்கு மலைப்பகுதியில் பள்ளங்கி கோம்பை பெருங்காடு மலைக் கிராமத்தில் பளியர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை குகை, கூடாரங்கள் அமைத்து பெருங்காடு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நாடோடி யாக வாழ்ந்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து இந்த மக்களை நிரந்தரமாக ஒரே பகுதியில் வசிக்க வைத்தது. ஆனாலும், குடிக்க தண்ணீர், படிக்க பள்ளிக்கூடம், மருத்துவ வசதியில்லாமல் நிரந்தர பிழைப்புக்கு வேலையில்லாமல் தனித் தீவுபோல், முன்பிருந்த நாடோடி வாழ்க்கையையும் இழந்து இந்த கிராம மக்கள் தவித்தனர்.
படிக்க 10 கி.மீ. காட்டுப் பாதையில் நடந்து செல்லவேண்டி இருந்ததால் இந்த கிராம குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுற்றித் திரிகின்றனர். இந்த கிராமத்தில்தான் சின்னவன் என்பவரின் மகள் ரேவதி (17) மட்டும், இந்த ஆண்டு கொடைக்கானல் ஒருங்கிணைந்த ஆதிவாசிகள் மேம்பாட்டு சங்கத்தின் உதவியுடன் பண்ணைக்காடு மலைச்சாரல் விடுதியில் தங்கி, அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து 734 மதிப்பெண் பெற்றார். இவர்தான், கொடைக்கானல் பளியர் பழங்குடி யின மலைக்கிராமங்களில் முதல் முறையாக பிளஸ் 2 முடித்தவர்.
கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார்
தொடர்ந்து கல்லூரி சென்று படிக்க ரேவதி ஆசைப்பட்டார். தன்னை பிளஸ் 2 வரை படிக்க வைத்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சில அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பித்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். பழங்குடியின மாணவியாக இருந் தும் ரேவதிக்கு அக்கல்லூரிகள் ஏனோ `சீட்' கொடுக்க மறுத்தன. அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் பெற்றோரால் பஸ் செலவுக்குக்கூட காசு கொடுத்து அனுப்ப முடியவில்லை. இனி, தனது கல்லூரிப் படிப்பு கனவுதான் என நினைத்த ரேவதி பெற்றோருடன் கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
இதுகுறித்து `தி இந்து' நாளிதழில் ஆக. 7-ம் தேதி ‘கல்லூரியில் சீட் கிடைக்காமல் தவிக்கும் பழங்குடியின மாணவி’ எனச் செய்தி வெளியானது. அதன்பின், சில அரசுக் கல்லூரிகள் ரேவதிக்கு ஓடோடி வந்து `சீட்' ஒதுக்க முன்வந்தன.
பி.சி.ஏ. படிப்பில் சேர்க்கை
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் நிறுவனம் `தி இந்து' நாளிதழில் வெளியான இந்த செய்தியைப் பார்த்து மாணவியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி ரேவதியை சென்னைக்கு அழைத்து, சென்னை அப்போலோ கல்லூரியில் பி.சி.ஏ. படிப்பில் சேர்த்துள்ளது. பி.சி.ஏ. முடித்ததும் சி.ஏ. படிக்க நினைக்கும் ரேவதி இப்போது அகரம் பவுண்டேஷன் உதவியால் நகர்ப்புற மாணவி களைப்போல டிப்டாப்பாக அப்போலோ கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறார். ரேவதி பி.சி.ஏ. முடித்தால் கொடைக்கானல் பளியர் இன மக்கள் வசிக்கும் மலைக்கிராமங்களுடைய முதல் பட்டதாரி ஆவார்.
இதுகுறித்து மாணவி ரேவதி கூறும்போது, ‘‘படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியும். படித்து முடித்து என்னைப் போன்ற படிக்க முடியாமல் கஷ்டப்படுவோரை அடையாளம் கண்டு அவர்கள் படிக்க உதவ வேண்டும். அதுதான் என் முதல் நோக்கம்’’ என்றார் தீர்க்கமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT