Published : 11 Jan 2018 10:04 AM
Last Updated : 11 Jan 2018 10:04 AM
ஜ
ல்லிக்கட்டுக்கு பேர்போன அலங்காநல்லூரில் 14 கன்றுகளை ஈன்று 5 தலைமுறைகள் கண்ட ‘பெத்தனாட்சி’ பசு மாட்டுக்கு வருகிற 15-ம் தேதி 22-வது பிறந்த நாள். ரத்த சொ்ந்தம் போல பாசம் காட்டும் விவசாயி பார்த்திபன், பெத்தனாட்சியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
‘கேக்’ வெட்டி, காளான் பிரியாணி போட்டு திருவிழாபோல் கொண்டாட முடிவு செய்த அவர் அதற்காக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும் ஊராருக்கும் கொடுத்து “வீட்டு விஷேசத்துக்கு அவசியம் வந்திருங்க” என்று அழைப்பதைப் பார்த்து ஒட்டு மொத்த அலங்காநல்லூரும் நெகிழ்ந்து போயிருக்கிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல் லூரில், முதன்முதலாக கன்று குட்டியாக வாங்கிய பசுமாட்டுக்கு பெத்தனாட்சி என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தார் விவசாயி பார்த்திபன். 22 வயதை கடந்த பெத்தனாட்சி, 14 கன்றுக்குட்டிகளை ஈன்று பேத்தி, எள்ளு, கொள்ளுப் பேத்திகள் என ஐந்து தலைமுறைகளைக் கண்டது. தோற்றத்தைப் பார்த்தால் 90 வயது மூதாட்டியைபார்க்கும் உணர்வு நமக்கு. தோல் சுருங்கி கால் வளைந்து எழுந்து நடக்க முடியவில்லை. யாராவது கைத்தாங்கலா தூக்கிவிட்டால்தான் நிற்கவே முடியகிறது. புருவ முடி உதிர்ந்துவிட்டது. பற்கள் கொட்டிவிட்டன. தீவனத்தை மெல்ல முடியாததால் புல், பருத்திக் கொட்டைகளை அரைத்து தண்ணீருடன் கலந்து தினமும் ஊட்டி விடுகிறார் பாசக்கார பார்த்திபன்.
வருகிற 15-ம் தேதி, இதற்கு பிறந்த நாள். இதை கொண்டாட முடிவு செய்த அவர், அழைப்பிதழ் அச்சடித்து ஊரைக் கூட்டி விழா எடுக்கிறார். ‘கேக்’ வெட்டுவதுடன், அன்று விழாவுக்கு வருகிறவர்களுக்கு காளான் பிரியாணி விருந்து படைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதுபோக குறிப்பிட்ட அந்த பசுவின் சந்ததியினரையும், அதன் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
கன்றுப்போட்டு பால் தராத மாடுகளையும் சரியாக சினைப்பிடிக்காத மாடுகளையும் பராமரிக்க முடியாமல் அந்த மாட்டை அடிமாட்டுக்கு விற்றுவிடுவார்கள். அந்த விஷயத்தில் பார்த்திபன் வித்தியாசப்பட்டு தெரிகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் என மதுரை மாவட்ட ஆட்சியர் பார்த்திபனுக்கு விருது வழங்கி பாராட்டினார். தற்போது ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தில் மத்திய அரசின் விருது பெறவும் பார்த்திபன் விண்ணப்பித்துள்ளார்.
அலங்காநல்லூரில் அவரைச் சந்தித்தோம். “1996-ல் நான் வாங்கிய முதல் பசு மாடுதான் இந்த பெத்தனாட்சி. இன்று ஒரு மாட்டுப்பண்ணையே வைத்துள்ளேன். இதோட மகள் 10 கன்றுக்குட்டிகளும் பேத்தி 5 கன்று குட்டிகளும், கொள்ளுப்பேத்தி 2 கன்றுக்குட்டிகளும் ஈன்றுள்ளது. 5 தலைமுறைப்பார்த்துவிட்டது. பெத்தானட்சி வந்தபிறகுதான் வாழ்க்கையில் எனக்கு எல்லாமே கிடைத்தது. இதன் வாரிசுகள் கொடுத்த பாலை விற்றுதான் மகனை இன்ஜினிரிங் படிக்க வைத்தேன். இன்னொரு பையன் கல்லூரியில் படிக்கிறான். ஒன்றரை ஏக்கர் வயல் வாங்கியுள்ளேன். கடன் இல்லை. ராசியான இந்த மாட்டை விற்க மனதில்லை. கடந்த 3 வருடமாக கன்று ஈனவில்லை, பாலும் இல்லை. இருந்தாலும் என்னை வாழ வைத்த எங்கள் அம்மாவாக நினைத்து பாதுகாக்கிறேன் ’’ என்றார்.
அரசு கால்நடை மருத்துவர் மெரில் ராஜிடம் கேட்டபோது, ‘‘மாட்டின் சராசரி ஆயுட்காலம் 16 முதல் 26 ஆண்டுகள். ஒரு மாடு சராசரியாக 6 முதல் 8 குட்டிகள் ஈனும். பசு மாட்டில் 4 வயது முதல் 6 வயது வரை பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். 6 வயதுக்கு மேல் பால் குறைய ஆரம்பிக்கும். சரியாக சினையும் பிடிக்காது. அதற்கு மேல் அதை வைத்து பராமரிக்க முடியாமல் விவசாயிகள் விற்றுவிடுவார்கள். இவர் 22 வயது வரை வைத்திருப்பது அபூர்வம்தான்’’ என்கிறார்.
மாடுதான் என்றாலும் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவிப்பதால் மாடுகளுக்கும் மனிதர்களுக்குமான பந்தம் உணர்வுமயமானது என்பதை உணரச் செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT