Published : 11 Jan 2018 10:02 AM
Last Updated : 11 Jan 2018 10:02 AM
உ
ழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதெல்லாம் திருவலஞ்சுழி ‘காய்’ சேகர் கிட்ட செல்லாது. ஏன்னா, அவர் வழி, தனி வழி என்கிறார்கள் திருவலஞ்சுழி சுற்றுவட்டாரத்தினர்.
“ரெண்டு ஏக்கர்ல சம்பா சாகுபடி செஞ்சேங்க, முட்டுவுலி செலவு அம்பதாயிரம் ரூவா ஆச்சு, பருவத்துக்கு மழயும் பெய்யல, ஆத்துல தண்ணியும் இல்லை. காலேல எழுந்திருச்சு வயலைப் போய்ப் பாத்தா பச்சப் பசேல்னு இருக்க வேண்டிய பயிரெல்லாம் அறுவட காலத்துல இருக்கிறமாதிரி மஞ்ச கலருக்கு மாறிப்போயிக் கெடந்தா மனசு வலிக்குதுய்யா” என மனம் வெம்பித் தவிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில், மாற்றுப் பயிர் சாகுபடி- மகத்தான ஒன்றுதான் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் திருவலஞ்சுழி சேகர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 3 ஏக்கர் நிலத்தில் 21 வகையான காய்கறிகளை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, அறுவடை செய்த இடத்திலேயே அவற்றை விற்பனையும் செய்து அசத்தி வருகிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியைச் சேர்ந்த விவசாயி சேகர்(50). இவர் தன்னுடைய வயலில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதுமையான காய்கறிகளை பயிரிட்டு அதில் மகசூலும் பெற்று வருகிறார்.
3 ஏக்கர் நிலமும் வண்டல் மண். மலைப் பிரதேசங்களில் விளையும் காய்கறிகளான காலி ஃப்ளவர், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல், தரணிபூ, பீன்ஸ், புரோகோலி, பச்சைப் பட்டாணி, சிகப்பு முள்ளங்கி மற்றும் நாட்டு காய்களான தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், அவரை, கொத்தவரை, வெண்டை, புடலை, பீர்க்கங்காய், சுண்டைக்காய், பாகற்காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார். போர்வெல் மூலம்தான் நீர்ப்பாசனம்.
திருவலஞ்சுழியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, “சேகர் வயல்ல விளையிற காய்கறி எல்லாமும் அவரோட வயலை ஒட்டிய சாலையோர பகுதியிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டு, அன்றாடம் விற்று முதலாகிவிடுகிறது. பச்சைப் பசேல்னு காய்கறிகள வாங்குவதற்காக தினமும் அக்கம் பக்கத்து ஊர்கள்ல இருந்தும் சேகர் வயலுக்கு மோட்டார் சைக்கிள்ல வாராங்கன்னா பாத்துக்குங்களேன்” என்கின்றனர் ஆச்சரியத் துடன்.
ஊரெல்லாம் ஒரே பேச்சுங்கிற மாதிரி, யாரைக் கேட்டாலும் உங்களைப் பற்றி பெருமையா சொல்கிறார்களே என சேகரிடம் நாம் கேட்டோம். அப்போது அவர் கூறியது:
நான் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். குறைந்த நாட்களில் அதாவது 70 முதல் 110 நாட்களுக்குள் விளையக்கூடிய காய்கறிகளை மட்டும் பயிரிட்டு வருகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக மலைப் பிரதேச காய்கறிகளையும் பயிரிட்டேன். கடந்தாண்டு காலி ஃப்ளவர் பயிரிட்டேன், இந்தாண்டு புரோக்கோலியை பயிரிட்டுள்ளேன். மலைப் பிரதேச காய்கறிகள், காவிரி டெல்டாவில் உள்ள மண்ணிலும் நல்லபடியாகவே விளைகின்றன. 3 ஏக்கரில் 21 வகையான காய்கறிகளையும் 5 வகையான கீரைகளையும் பயிரிட்டுள்ளேன்.
எந்த உரமும் போடாமல், பூச்சிக் கொல்லி மருந்தும் தெளிக்காமல் இயற்கை முறையில் அதிக அளவில் மகசூலும் பெற்று வருகிறேன். பசுமையான காய்கறிகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமானவை என பலரும் ஆங்காங்கே சொல்வதைக் கேட்டு தினமும் ஏராளமானோர் என்னுடைய வயலுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாததால் இடுபொருள் செலவு குறைவு. பாதிப்பு அதிகம் இல்லாததால் அதிக மகசூல், அதிக வருவாய் கிடைக்கிறது என்றார்.
இன்றைக்கு நெல்லைத் தவிர்த்து இதர மாற்றுப் பயிர் சாகுபடியைச் செய்ய டெல்டா விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தை விட்டுவிட்டால், விவசாயத்தில் அனைவரும் நல்ல வெற்றியைப் பெறலாம் என்ற சேகர், “ஆரம்பத்தில் நானும் நெல்லும், வாழையும்தான் பயிரிட்டேன். காய்கறி சாகுபடியில் கிடைக்கும் அதிக வருவாய், மன நிறைவை அடுத்து தற்போது முழுவதும் காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு வருகிறேன்” என கூறுகிறார் இந்த இயற்கை காய்கனி சாகுபடி விவசாயியான காய் சேகர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT