Published : 27 Jan 2018 10:48 AM
Last Updated : 27 Jan 2018 10:48 AM

வகுப்பறை கட்டித் தந்த ‘வாட்ஸ்அப்’ பசங்க

ல்லிக்கட்டு மாணவர் போராட்டம் வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதன் நினைவாக, அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நவீன வகுப்பறை கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள் 200 பேர்.

கடந்த ஆண்டில் சென்னை மெரினா முதல் கன்னியாகுமரி வரை ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் ஒற்றுமையுடன் பங்கேற்ற போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு போட்டியை தடையின்றி நடக்க வைத்த இப்போராட்டம் வரலாற்றில் இடம் பிடித்தது.

அலங்காநல்லூர் வாடிவாசல் போராட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு குழுக்களில் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் குழுவும் ஒன்று. இவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை வெறும் கொண்டாட்டத்துடன் கடந்து செல்லாமல், தாங்கள் படித்த அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ‘ஹைடெக்’ வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர்.

அந்த வகுப்பறை 1,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. பளபளக்கும் டைல்ஸ் கற்கள், புரொஜெக்டர், ஏசி வசதிகள் என தனியார் குளோபல் பள்ளிகளை நினைவூட்டுகிறது இந்த வகுப்பறை.

‘‘போராட்டத்துக்கு முன்னுதாரணமாக அமைந்தது ஜல்லிக்கட்டு போராட்டம். அதன் ஓராண்டு நிறைவை, நாங்கள் படித்த பள்ளிக்கு நல்லது செய்து கொண்டாடியிருக்கிறோம்’’ என பெருமை பொங்க கூறுகிறார் முன்னாள் மாணவர் பொன்குமார்.

‘‘நாங்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் என்ற வாட்ஸ்அப் குரூப் வைத்திருக்கிறோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக, நாம் படித்த பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுக்க முடிவு செய்தோம். ஒரு மக்கள் புரட்சியில் பங்கேற்ற பெருமிதத்துடன் இந்த வகுப்பறையை அர்ப் பணித்துள்ளோம்.

வெறும் பணத்தால் மட்டும் இந்த வகுப்பறைக் கட்டிடம் உருவாகிவிடவில்லை. செங்கல் எடுத்துக் கொடுத்த சித்தாள் முதல் கட்டிய கொத்தனார், பெயின்ட்டிங், எலெக்ட்ரீஷியன் என ஒவ்வொரு வேலையையும் வெளியே கான்ட்ராக்ட் விடாமல் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே சேர்ந்து செய்து கொடுத்தோம். பழைய மாணவர் வாட்ஸ்அப் குரூப்பில் 200 பேர் இருக்கிறார்கள். அனைவரும் தங்களால் முடிந்த தொகையை வழங்கினர். பணம் தர முடியாதவர்கள் கட்டிட வேலைக்கு வந்தனர். அதனால், இரண்டே மாதத்தில் திட்டமிட்டு இந்த வகுப்பறையை ரூ.6 லட்சத்தில் கட்டி முடித்தோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அன்று திறப்பு விழா நடத்தவிருந்தோம். அது முடியவில்லை. விரைவில் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, இந்தப் பள்ளியில் படித்த ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன் ஆகியோரைக் கொண்டு திறக்க உள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகள் இருக்க வேண்டும் என்கிறார் பொன்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x