Last Updated : 02 Jan, 2018 12:12 PM

 

Published : 02 Jan 2018 12:12 PM
Last Updated : 02 Jan 2018 12:12 PM

அகப்பைக்கு மரியாதை

நா

கரிகத்தின் ஓட்டத்தில், நாம் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்த பல பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அகப்பையும் அப்படித் தொலைந்து கொண்டிருக்கும் பட்டியலில்தான் இருக்கிறது. கிராமங்களிலும் எவர்சில்வர், பித்தளைக் கரண்டிகள் பிரதானமாகிவிட்ட இந்தக் காலத்தில், வேங்கராயன்குடிக்காட்டில் பொங்கலுக்குப் பொங்கல் அகப்பை யைக் கொண்டாடுகிறார்கள்.

அகப்பைகளுக்கும் ஆபத்து

அகப்பைக்கும் தைப் பொங்கலுக்கும் பந்தம் உண்டு. அந்தக் காலத்தில் புதுப் பானை பொங்கல் வைக்கும்போது, புதிய அகப்பைகளையே பயன்படுத்தினார்கள். உலோகக் கரண்டிகளைப் பயன்படுத்தினால் பானையின் அடிப்பகுதியில் பட்டு அழுந்திவிடும் என்பதால் அப்போது அகப் பைகளே பிரதானமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மண் பானைகளின் இடத்தை உலோகப் பானைகள் ஆக்கிர மித்துக் கொண்டதால் அகப்பைகளுக்கும் வந்தது ஆபத்து!

எனினும் இன்னமும் சில கிராமப்புரத்துச் சந்தைகளுக்கு அகப்பைகள் வருகின்றன. அதுகூட கோயில்களில் பொங்கல் வைக்கும்போது பயன்படுத்துவதற்காகத்தான் இருக்கமுடியும். ஆனால், தஞ்சை அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்து மக்கள் இன்னமும் அகப்பையை கொண்டாடுகிறார்கள். மற்ற நாட்களில் இல்லாவிட்டாலும் பொங்கலின் போது இங்கு அனைத்து வீடுகளிலும் அகப்பை வாசம் அடிக்கிறது.

இந்த கிராமத்திலுள்ள தச்சுத் தொழிலாளர்கள் பொங்கலுக்குப் பொங்கல் ஏராளமான அகப்பைகளை தயார் செய்கிறார்கள். பொங்கலன்று அதிகாலையில் அந்த அகப்பைகளை அவர்களே எடுத்துவந்து வீட்டுக்கு வீடு வழங்குகிறார்கள். இதற்காக அவர்கள் பணம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை. மாறாக, தங்களுக்கு அகப்பை செய்து கொண்டு வந்த தச்சுத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தட்டில் தேங்காய், பழம் வெற்றிலை, பாக்குடன் ஒரு படி நெல்லும் கொடுத்து மரியாதை செய்கிறார்கள் கிராம மக்கள்.

அந்த கிராமத்தில் அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தச்சுத் தொழிலாளி மு.கணபதி இதுபற்றி நம்மிடம் பேசினார். “மூதாதையர் காலந்தொட்டு பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்க தச்சுத் தொழில்ல இருக்கோம். மற்ற நாட்கள்ல ஏதாச்சும் மர வேலைகளைப் பார்த்துப் பொழச்சுக்குவோம். ஆனா, பொங்கல் வருதுன்னாலே எல்லா வேலைகளையும் ஒதுக்கிவெச்சுட்டு அகப்பை செய்ய இறங்கிருவோம்.

பரம்பரை பரம்பரையாக..

இதுக்காகவே, வீடுகள்ல வருசம் முழுக்க விழும் கொட்டாங்குச்சிகளை தேடிச் சேகரிச்சு வைப்போம். பொங்கல் பண்டிகை சமயத்துல அந்தக் கொட்டாங்குச்சிகளை எல்லாம் நாலஞ்சு நாளைக்கு தண்ணியில ஊறப்போடுவோம். நல்லா ஊறுனதும் வெளியில் எடுத்து பக்குவமா மேல் பட்டையைச் செதுக்குவோம். அப்புறமா மூங்கில் குச்சிகளை இரண்டு அடி நீளத் துண்டுகளா நறுக்கி, கைப்பிடிகளைத் தயாரிச்சு அதை கொட்டாங்குச்சியோட சேர்த்து அகப்பையா செஞ்சுருவோம்.

பொங்கலுக்காக நாங்க குடுக்கும் அகப்பைகளுக்கு காசு வாங்கமாட்டோம். அதுக்குப் பதிலா, பொங்கல் அன்னைக்கி மதியம் நாங்க அவங்க வீடுகளுக்குப் போறப்ப தேங்காய் பழ தட்டும் நெல்லும் குடுத்து எங்களை அவங்க கவுரவிப்பாங்க. இன்னைக்கி நேற்றில்லை.. பரம்பரை பரம்பரையா இந்த ஊருக்குள்ள இந்த வழக்கம் தொடருது” உவகையுடன் சொன்னார் கணபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x