Published : 31 Jan 2018 11:27 AM
Last Updated : 31 Jan 2018 11:27 AM

திருப்பூரில் அறிவுக் கொண்டாட்டம்!

பி

ன்னலாடை நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரானது ஈரோடு புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே புத்தகத் திருவிழாக்களை நடத்திவருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 60 கடைகள், 25 ஆயிரம் பார்வையாளர்களுடன் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா தற்போது, 145 அரங்குகள் 1 லட்சம் பார்வையாளர்கள் என்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது. திருப்பூர், காங்கயம் சாலை, பத்மினி கார்டனில் 25-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது திருப்பூரின் 15-வது புத்தகத் திருவிழா.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழாவில், பகலெல்லாம் பள்ளிக் குழந்தைகள் மொய்க்கிறார்கள் என்றால், மாலை வேளைகளில் குடும்பத் தலைவிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ‘அதிலும் ஞாயிறன்று வருகை தந்த கூட்டம் சொல்லி மாளாது. ஆயிரக்கணக்கான வாகனங்கள். காங்கயம் சாலையே டிராபிக் ஜாம்!’ என புத்தகக் காட்சியின் முகப்பிலேயே பெருமை பூரிக்க சொன்னார் பாதுகாவலர் ஒருவர்.

‘ப’ வடிவில் ஏற்படுத்தப்பட்ட அரங்குகள். ஒரு பக்கம் உள்ளே நுழைந்தால் அடுத்த பக்கம் வெளியே வந்து விடலாம். நடப்பதற்கு மட்டுமல்ல; கடைகளில் உட்காருவதற்கு கூட வசதிகள். ஒரு நாள் ஒரு வாசலில் விட்டால், அடுத்த நாள் வேறு வாசலில் வாசகர்களை அனுமதிக்கிறார்கள். நுழைவு வாயிலில் நுழையும் வாசகர்கள் ஒரு சில கடைகளை மட்டுமே பார்த்துவிட்டு, மற்ற கடைகளை பார்க்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. நான் கடைகளை சுற்றிப்பார்த்த வேளையில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்கும் பள்ளிக்குழந்தைகள் நிறைய பேரைக் காணமுடிந்தது. அவர்கள் கைகளில் திருக்குறள், பாரதியார், நீதிக்கதைகள் புத்தகங்கள் மட்டுமல்ல, அறிவியல் நூல்களும் தவழ்ந்தன.

வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன் சஞ்சய் கையில் ‘முல்லா கதைகள்’, ‘சக்தி டிக்சனரி’, ‘மேஜிக் மேப்’ காணமுடிந்தது. இதே பள்ளியில் 6வது படிக்கும் தேவதர்ஷினி, கவிகா ஆகியோர் ‘அப்துல்கலாம் பேசுகிறேன்’, ‘அன்றாட வாழ்வில் அனுபவ மருத்துவம்’, ‘கண் பாதுகாப்பு’, ‘காற்றின் மூலம் பரவும் வியாதிகள்’ என பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கியிருந்தனர். புத்தகக் காட்சிக்கு வருவதற்கென்றே பெற்றோர் கொடுக்கும் பணத்தைச் சேர்த்துவைத்து இவற்றை வாங்கியதாகச் சொன்னார்கள்.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரான ஆர்.ஈஸ்வரன் இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்: “2000-ல் சிறிய அளவில் புத்தகக் காட்சியை டவுன்ஹாலில் தொடங்கினோம். இடையில் ஒரு வருடம் மட்டும் தேர்தல் வந்ததால் புத்தகக் காட்சி நடக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் புத்தகக் காட்சியில் நடக்கும் கருத்தரங்கங்களில் பங்கேற்காத பேச்சாளர்கள், கருத்தாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கியிருக்கிறோம். ஒருவரை அழைத்தால் ஆறேழு ஆண்டுகளுக்காவது அவர்களை திரும்ப அழைப்பதில்லை. குழந்தைகளின் பங்கெடுப்பு வருடத்திற்கு வருடம் அதிகரித்துவருகிறது. அவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை என போட்டிகள் வைத்து பரிசுகள் அளிக்கிறோம். தவிர தினந்தோறும் வந்து புத்தகம் வாங்கும் மாணவ-மாணவியரில் 10 பேரை தேர்ந்தெடுத்து தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அளிக்கிறோம்.

சென்ற ஆண்டு குழந்தைகளைக் கவர நடமாடும் கோளரங்கம் வைத்திருந்தோம். இந்த ஆண்டு ‘கதை சொல்லி’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளோம். அறிவியல் தொலைநோக்கியும் வைத்துள்ளோம். அதற்காகவே தினமும் குறைந்தது 10 பேருந்துகள் அளவுக்கு மாணவ-மாணவிகளை தங்கள் பள்ளியிலிருந்து அனுப்பி வருகிறார்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள். ஒவ்வொரு அரங்கத்திலும் புதிய புத்தக வெளியீடுகளும் நடக்கிறது. 2000-ல் நடந்த முதல் புத்தகக் காட்சியில் ரூ.20 லட்சம் அளவிற்கு புத்தகங்கள் விற்றன. சென்ற ஆண்டு ரூ. 1.25 கோடியை எட்டியது. இந்த ஆண்டு, அந்த விற்பனையை கடக்கும் என நம்புகிறோம்!’

பல்வேறு ஊர்களிலிருந்து வந்து திருப்பூரில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள், மாலை நேரங்களில் புத்தகங்களை தேடி வந்து மொய்ப்பதை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

-கா.சு.வேலாயுதன்

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x