Published : 27 Jan 2018 10:41 AM
Last Updated : 27 Jan 2018 10:41 AM

‘வாங்க வாங்க’ ஸ்டேஷன்... விளையாட்டு ஸ்டேஷன்

தேசிய அளவில் ‘காவல் நிலையங்களில் முதலிடம்’ என்ற பாராட்டை பெற்றிருக்கிறது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம். இதனால், பலதரப்பில் இருந்தும் ஆய்வாளர் ஜோதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வழக்கமாக கம்பீரத்தை நினைவூட்டும் காவல் நிலையத்துக்கு, கனிவு என்ற முகத்தைக் காட்டியிருக்கும் இந்த முயற்சி குறித்து அவர் கூறியதாவது:

ஓராண்டு காலத்தில் பெறப்பட்ட புகார்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், மக்களை அணுகும்விதம், சட்டம் ஒழுங்கு மற்றும் ஆவணங் கள் பராமரிப்பு, குற்றவாளிகள் மீதான நடவடிக்கை, முதியோர், பெண்களை கண்ணியமாக நடத்தும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, எங்களது காவல் நிலையத்துக்கு தேசிய விருது அளித்துள் ளனர். குற்றங்களைத் தடுப்பதுடன், குற்றங்கள் நிகழா மல் தடுப்பதும் முக்கியம். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களது புகாரைக் கேட்க வரவேற்பறை அமைத்துள்ளோம். 24 மணி நேரமும் அங்கு காவலர்கள் பணியில் இருப்பார்கள். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அல்லது காவலர்கள் அந்தப் புகாரை விசாரித்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரே நேரத்தில் பலர் புகார் அளிக்க வந்தால், அவர்கள் காத்திருக்க தனி அறை உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தூய்மையான கழிப்பிடங்கள், புகார் அளிக்க வருவோரின் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கணவன் - மனைவி தகராறு, குடும்ப பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வருபவர்கள் தங்களுடன் குழந்தைகளையும் அழைத்து வருவர். குழந்தைகள் முன்னிலையில் புகாரை விசாரிக்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ மாட்டோம். முதலில், காவல் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு குழந்தைகளை அனுப்பிவிடுவோம். அங்கு குழந்தைகளை பெண் போலீஸார் பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகள் விளையாட அங்கு விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகளை வைத்துள்ளோம். ஏற்கெனவே, பிரச்சினையில் இருக்கும் மக்கள் நல்ல தீர்வு தேடி இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல தொரு சூழலை ஏற்படுத்தித் தருவது நம் கடமை இல்லையா!’’ என்கிறார் ஆய்வாளர் ஜோதி.

கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா கூறும்போது, ‘‘காவல் துறை சிறப்பாகச் செயல்பட, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம். இந்த விருது கோவை போலீஸாரை இன்னும் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும்.கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களில், மண்டலத்துக்கு ஒரு காவல் நிலை யம் என 4 காவல் நிலையங்களை முதல்கட்டமாக தேர்வு செய்து, அவற்றை மேம்படுத்த உள்ளோம். காவல் நிலையம் வரும் மக்களை கனிவாக வரவேற்று, அவர்களை கண்ணியமாக நடத்தி புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்’’ என்றார்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x