Published : 16 Jan 2018 10:34 AM
Last Updated : 16 Jan 2018 10:34 AM

பூப்பெய்தும் தென்னைக்கு பூஜை..!

லையாளிகள் எனும் பழங்குடியின மக்கள் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் மலைக்கிராமம்தான் வத்தல்மலை. தருமபுரி மாவட்டத்தில் உள்ளது. இந்த மலையின் மேலே சின்னாங்காட்டூர், பெரியூர், பால்சிலம்பு, மண்ணாங்குழி, ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, நாயக்கனூர், கருங்கல்லூர் உட்பட 8-க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன.

மலை மீது பயணிக்கும்போதே தென்னை மரங்கள் சிலவற்றுக்கு வேட்டி அணிவிக்கப்பட்டிருந்தது. ‘இதென்ன தென்னைக்கு வேட்டி..?’ என்று கேள்விக்கு கருங்கல்லூரைச் சேர்ந்த மாது, “நம் வீட்டுப் பெண் குழந்தைகள் வளர்ந்து பூப்படைந் தால் அந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகிறோம். அதைப்போலவேதான் வத்தல்மலையில் தென்னை மரங்கள் முதல் பாளை விட்டாலும் அதை நாங்கள் பூஜை, விருந்துடன் கொண்டாடுகிறோம். ஒரு வீட்டருகே ஒன்றுக்கு மேற்பட்ட தென்னைகள் இருந்தாலும், முதல் தென்னையின் முதல் பாளைக்குத்தான் இந்த மரியாதை யெல்லாம்.

தென்னையில் பாளை வெளியேறிவிட்டாலே பூஜைக்கான ஏற்பாடுகளில் இறங்கி விடுவோம். பூஜைக்கு தேதி குறிப்பதற்குள் பாளை வெடித்துவிடும். புதுவேட்டி வாங்கிவந்து நல்ல நாள் பார்த்து ‘பாளை பூஜை’ நடத்தப்படும். பாளை விட்ட தென்னையை நீராட்டி புதுவேட்டியை உடுத்தி மஞ்சள், குங்குமம், மலர்களிட்டு அர்ச்சனைகள் செய்து பூஜை நடத்துவோம்.

பூஜை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு, கிடா வெட்டி விருந்து படைத்து உண்டு மகிழ்வோம். சிலர், பொருளாதார சூழல் காரணமாக சிலர் கோழி அடித்து விருந்து வைப்பார்கள். ‘பாளை பூஜை’ விருந்துக்கு வருபவர்களில் விருப்பம் உள்ள சிலர் மொய் வழங்கிச் செல்வது உண்டு. மனித உயிர்களை மையப்படுத்தி வீடுகளில் நடைபெறும் வைபவங்களைப் போலவே, தென்னை முதல் பாளை விடும் நிகழ்வையும் இங்கே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வத்தல்மலைக்கு சாலை வசதியே இல்லை. மலை கிராம மக்கள் தாங்களே அமைத்துக்கொண்ட கரடுமுரடான சாலையில் நடந்தும், இருசக்கர வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டும்தான் மலைக்குச் செல்ல முடியும். மலையில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில் வானம்பார்த்த விவசாயம். உணவுக்கு சிறுதானியங்களும், சிறு செலவுகளுக்கு மல்லிகை, சம்பங்கி போன்ற பூ வகைகளையும் பயிரிடுகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்புதான் வனத்துறை சார்பில் பூமரத்தூர் அடிவாரம் முதல் வத்தல்மலை சின்னாங்காட்டூர் வரை 7 கிலோ மீட்டர் சாலை அமைத்துத் தரப்பட்டது. 23 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த சாலையில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாத சில மேடுகள் இருப்பதால் அரசு சார்பில் இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.

வத்தல்மலை வீடுகளில் இதுவரை சமையலுக்கு விறகு அடுப்புதான். காஸ் சிலிண்டர் பயன்பாடு போன்ற சில நவீனங்கள் இதுவரை இந்த மலையை எட்டவில்லை. சிறுதானியங்கள், பூ வகைகள், கடுகு, பலா போன்றவற்றை விளைவித்து வந்தவர்கள் தற்போது காஃபி, மிளகு சாகுபடிகளில் நுழைந்துள்ளனர்.

இயற்கையுடன் நெருங்கி, இயற்கையை வணங்கிடும் வாழ்க்கை வத்தல்மலை மக்களிடம் இன்னும் நிலைத்திருக்கிறது. இயற்கையை காப்பதற்கான வழிகாட்டுதலை பழங்குடிமக்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x