Published : 30 Jan 2018 10:31 AM
Last Updated : 30 Jan 2018 10:31 AM

மதுரையில் நாட்டுப்புற நூலகம்

கா

லசக்கரச் சுழற்சியில் பழைய மரபு, கலாச்சாரம், பண்பாடு, கலை கள் அரிதாகி வருகின்றன. குறிப்பாக பண்டைய காலம்தொட்டு அடித்தட்டு மக்களின் இன்ப துன்பங்களை பிரதிபலித்துவரும் நாட்டுப்புறக் கலைகள் அழியும் தருவாயில் உள்ளன. இக்கலைகளுக்கு கிராம கோயில் திருவிழாக்கள் மட்டுமே பக்கபலமாக இருந்து வந்தன. தற்போது அங்கேயும் இக்கலைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இதனால், நாட்டுப்புற கலைகளும், அதை நிகழ்த்தும் கலைஞர்களின் வாழ்வும் நலிவடையத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்புடைய இந்த பழம்பெரும் கலையை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல அரசே தற்போது முயற்சி எடுத்துள்ளது. அதற்காக அரசு பொதுநூலகத்துறை, மதுரை மாவட்ட மைய நூலகத்தில் ரூ.1 கோடியில் தமிழகத்திலேயே முதல் முறையாக நாட்டுப்புற நூலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மதுரை மாவட்ட மைய நூலகத்தின் இரண்டாவது தளத்தில் நாட்டுப்புற நூலகத்தை அமைப்பதற்கான வரைபடம் தயாரித்து கட்டுமானப் பணியை பொதுப்பணித்துறையினர் ஒருபுறம் தொடங்கியுள்ள நிலையில், மற்றொருபுறம் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய அரிய வகை புத்தகங்கள், ஓலைச்சுவடிகளை சேகரிப்பதும், அந்த கலைஞர்களை சந்திப்பதுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர் மாவட்ட மைய நூலக அலுவலர் எம்.ராமச்சந்திரன், முதல்நிலை நூலக அலுவலர் சி.ஆர்.ரவீந்திரன், நாட்டுப்புற நூலக ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார். அவர்களை சந்தித்து இப்புது முயற்சியின் சிறப்பு அம்சம் குறித்து கேட்டோம்.

28 கலைகள்

மாவட்ட நூலக அலுவலர் எம்.ராமச்சந்திரன் உற்சாகமாக நம்மிடம் பேச ஆரம்பித்தார். அவர் கூறியது: நூலகங்கள் வாசிப்பை தாண்டி, தற்போது மக்களுடன் இரண்டறக் கலந்த கலைகளை யும் வளர்த்தெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. அதன் தொடக்கம்தான் இந்த நாட்டுப்புற நூலகத் திட்டம். தமிழகத்தில் ஒயிலாட்டம், ஆலியாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு, காவடி ஆட்டம், கரகாட்டம், பாவைக் கூத்து, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை என 28-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகள் உள்ளன.

இக்கலைகள் நலிவடைந்து வருவதால், தொழில் முறை கலைஞர்கள் பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மிகவும் சொற்பமானவர்களே தற்போதும் இக்கலைகளை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரமான மதுரை மண், நாட்டுப்புறக் கலைகளுக்கு பெயர்பெற்ற இடம். இங்குள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் சினிமா உள்ளிட்ட காட்சி ஊடகங் கள் வழியாக புகழ்பெற்றுள்ளனர்.

வாடிப்பட்டி மேளம், தப்பாட்டம் மற்றும் மதுரையின் மண் மணம் வீசும் நாட்டுப்புறப் பாடல்கள் மிகப் பிரபலம். அதனால்தான், நாட்டுப்புற நூலகத்தை இங்கே அமைக்க அரசு முடிவெடுத்தது. இந்த நூலகத்துக்காக ரூ.15 லட்சத்துக்கு நூல் கள் வாங்கப்படவுள்ளன. வெறும் வாசிப்புக்கான நூல்களோடு மட்டும் நின்றுவிடாமல், காட்சிக் கூடமாகவும் இந்த நூலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டுப்புறக் கலைகள் பற்றிய அரிய ஓலைச்சுவடிகள், நூல்கள், ஆடியோ, வீடியோ கேசட்டு பாடல்கள், புகைப்படங்கள் நூலகத்தில் ஆவணப்படுத்தப்படும். நாட்டுப்புறக்கலைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளும் வாங்கி வைக்கப்படும். இந்த நாட்டுப்புற நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளை காட்சிப்படுத்த வாரந்தோறும் ஒலி, ஒளி காட்சிகள் காண்பிக்கப்படும். மேலும், நாட்டுப்புற கலைஞர்கள் மேடையற்றப்பட்டு நேரடியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இதன்மூலம் இந்தக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு அழியாமல் எடுத்துச் செல்லவும், ஆவணப்படுத்தவும் இந்த நூல கம் ஒரு கருவியாகப் பயன்படும் என்று கூறி முடித்தார்.

ஒரு தேசத்தின் வரலாற்றை வரலாற்று ஆசிரியன் அல்ல கலைஞன்தான் பதிவு செய்கிறான் என்ற மாக்சிம் கார்க்கியின் வார்த்தை எத்தனை நிஜம். மக்களின் வாழ்வியலோடு இணைந்த நாட்டுப்புறக் கலைகள்தான் அந்தந்த காலகட்டத்தின் வரலாற்றை பதிவு செய்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x