Published : 31 Jan 2018 11:15 AM
Last Updated : 31 Jan 2018 11:15 AM

காந்திக்கு கோயிலும் பூஜிக்கப்படும் அஸ்தியும்

சு

தந்திரத்துக்கு முன்பே மகாத்மா காந்திக்கும், நீலகிரி மாவட்டத்துக்கும் உயிரோட்டமான தொடர்பு இருந்துள்ளது. குன்னூரில் அயோத்திதாச பண்டிதர் நடத்திய முதல் ஹரிஜன மாநாட்டில் காந்தி பங்கேற்றுள்ளார். அகிம்சை முறையில் போராடுவது குறித்தும், போராட்டங்கள் குறித்தும் சுதந்திரத்துக்கு முன்பு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பேசி வந்தார். அவ்வாறு 1934-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்துக்கு வந்த காந்தி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

உதகையில் உள்ள ராமகிருஷ்ணமடம், காந்தல் துளசி மடம், உதகை நகராட்சி மைதானம் (ஏடிசி சுதந்திர திடல்) ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்துள்ளார். கீழ் கோடப்பமந்து பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த சுந்தர விநாயகர் கோயில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை அறிந்து அந்த கோயிலில் வழிபட்டு, பிற சமுதாய மக்களையும் அழைத்துச் சென்றார். சுந்தர விநாயகர் கோயிலாக இருந்தது இந்த சம்பவத்துக்குப்பிறகு சுந்தர காந்தி விநாயகர் கோயிலாக மாறியது. இங்கு காந்திக்கும் ஒரு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் வழிபட்டு வந்தனர்.

1978-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் மழையால், இக்கோயில் மற்றும் பல வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. காந்தி சிலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. எனினும், அப்பகுதி மக்கள் காந்தியின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வருகின்றனர். காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் சிறப்பு ஆராதனைகள், அர்ச்சனைகள், பூஜை, பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. காந்தி இறப்புக்குப் பின், அவரது அஸ்தி உதகையில் இன்றைய மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி அலுவலகத்திலும், குன்னூர் காங்கிரஸ் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் அஸ்திக்கு பூஜை நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜரத்தினம் கூறும்போது, ‘முதலில் காங்கிரஸ் அலுவலகமாகவே இருந்தது. இந்திரா காந்தி காங்கிரஸில் இருந்து பிரிந்து இந்திரா காங்கிரஸை உருவாக்கியதால், அதிருப்தி காங்கிரஸார் ஜனதா கட்சியில் இணைந்தோம். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள அலுவலகமாக உள்ளது.

காந்தி இறந்ததும், அவரது அஸ்தி சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட அஸ்தி பவானியில் கரைக்கப்பட்டது. 

மீதம் இருந்த அஸ்தி, கலசத்துடன் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இதேபோல, காமராஜரின் அஸ்தியும் கொண்டு வரப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. இரு அஸ்திகளுக்கும் வாரந்தோறும் பூஜை செய்யப்படுகிறது. காந்தி ஜெயந்தி நாளில் காமராஜர் இறந்ததால், அன்றைய தினம் கொண்டாட்டங்கள் இல்லாமல் பூஜை மட்டும் செய்யப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x