Published : 23 Jan 2018 11:12 AM
Last Updated : 23 Jan 2018 11:12 AM
பு
துச்சேரி மாநிலம் திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். பட்டதாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, இலுப்பம்பூ சம்பா, பாசுமதி, ராஜபோகம், துளசி வாசனை சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா, சேலம் சன்னா, காட்டுயானம் என 9 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், வாழை போன்றவற்றை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.
இயற்கை உரத் தேவைக்காக மாடுகளை வளர்த்து வருகிறார். அறுவடையாகும் நெல்லை விற்காமல், அரிசியாக மாற்றி குறைந்த விலைக்கு விற்கிறார். பாரம்பரிய நெல் விதைக்க விரும்புவோருக்கு விதை நெல்லும் வழங்குகிறார்.
“டிப்ளமா (இ.இ.இ) மற்றும் பி.ஏ. வரலாறு முடிச்சுட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்ப, இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்தது. வேலையை விட்டுட்டு, இயற்கை விவசாய முறை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். நம்மாழ்வார் புத்தகங்களைப் படிச்சேன். 100 முதல் 180 நாட்களில் விளையக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களை கொஞ்சமா சாகுபடி செஞ்சேன். நல்ல விளைச்சல் கிடைத்ததும், ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செஞ்சேன்.
செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன். இயற்கை உரத்துக்காக 4 மாடுகளை வளர்க்கிறேன். அதுக போடும் சாணம், கோமியத்தை சேகரித்து பஞ்சகவ்யம், அமுத கரைசல், ஜீவஅமிர்தம் உரமாக மாற்றி நிலத்தில் போட்டு விவசாயம் செய்றேன். இத னால மண்வளம் நல்லா இருக்கு. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து போட்டு பண்ற விவசாயத்தைவிட விளைச்சலும் அதிகமாவே இருக்கு. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை லாபம் கிடைக்குது. எல்லோரும் ரசாயன உரங்களை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும்’’ என்று கூறும் வீரப்பன், அடர்நடவு முறையில் வாழைகளையும் வளர்க்கிறார்.
இவர் உட்பட 5 பேர் சேர்ந்து ‘வேம்பு இயற்கை வேளாண்மை குழு’ என்ற குழுவை தொடங்கியுள்ளனர். விரும்பி வருகிறவர்களுக்கு இந்தக் குழு சார்பில் இயற்கை விவசாயம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் வீரப்பன் கூறினார். இயற்கை விவசாய முறை சாகுபடிக்காக மத்திய அரசு மூலம் வழங்கப்படும் பங்கேற்பாளர் உத்தரவாத சான்றிதழ் இவருக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT