Last Updated : 05 Dec, 2017 11:03 AM

 

Published : 05 Dec 2017 11:03 AM
Last Updated : 05 Dec 2017 11:03 AM

புதியவர்களால்தான் வித்தியாசம் காட்ட முடியும்: சின்னத்திரை நடிகை ஷாமிலி நாயர் நேர்காணல்

ஜீ

தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘தேவதை யைக் கண்டேன்’ தொடரில் ‘லெஷ்மிமா’, ’ஜானகி’ என இரு அவதாரங்கள் எடுத்திருக்கிறார் ஷாமிலி நாயர். சொந்த ஊரான பெங்களூருவில் பிபிஏ முடித்துவிட்டு மாடலிங், விளம்பரப் படங்கள் என்று வட்டமடித்து வந்தவரை தமிழ் சின்னத்திரை உலகம் ஆசையோடு வரவேற்க, தற்போது ஜீ தமிழ் தொடரில் பிஸியாகிவிட்டார். அவருடன் பேசியதில் இருந்து..

இதுதான் உங்களுக்கு முதல் சீரியலா?

சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ தொடர் வழியேதான் தமிழுக்கு அறிமுகம். ‘தேவதையைக் கண்டேன்’ தொடர்போல அதிலும் நாயகிதான். சில மாதங்கள் நடித்தேன். அதில் நடிக்கும்போதுதான், இங்கு உள்ள பண்பாடு, கலாச்சாரத்தோடு, தமிழ் பேசவும் கற்றுக்கொண்டேன். அதுதான் இப்போது என் நடிப்பு பயணத்துக்கு உதவியாக இருக்கிறது.

இந்த நடிப்பு பயணத்தில் உங்கள் இலக்கு?

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மாடலிங் துறையில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். என் ஃபேஸ்புக் பதிவுகள், அதில் பதிவிட்ட என் புகைப்படங்கள் ஆகியவை மூலமாகத்தான் எனக்கு சீரியல் வாய்ப்பு தேடி வந்தது. வீடு, ஆபீஸ் என என் வாழ்க்கை நகரப் போகிறது என்றுதான் அம்மா எதிர்பார்த்தார். நான் நடிக்கப்போவேன்னு வீட்டில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஏன், நானேகூட எதிர்பார்க்கவில்லை. யாருமே எதிர்பாராத வகையில் அமைந்ததுதான் சீரியல் வாய்ப்பு. ‘தேவதையைக் கண்டேன்’ என்பது எவ்வளவு அழகான தலைப்பு! இந்த தலைப்பை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்று ஆரம்பத்தில் பயந்தேன். முதல் எபிஸோட் வந்த பிறகு, கிடைத்த விமர்சனம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. கிடைத்த நல்ல பெயரை தக்கவைக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.

சீனியர் சினிமா நடிகைகளைவிட, தற்போது புதுமுகங்கள் எளிதாக சீரியலில் நாயகியாக முடிகிறதே?

இது நல்ல விஷயம்தானே. முதலில் அதற்கு ‘ஜீ தமிழ்’ சேனலுக்குதான் நன்றி சொல்லணும். கதாபாத்திரத்துக்கு தேவைப்படுகிற சரியான திறமையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களை கதைக்குள் கொண்டு வருகிறார்கள். அதிலும், புதுமுக திறமைசாலிகளுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். புதியவர்கள்தான் ஒரு கதாபாத்திரத்தை புதுமாதிரியான வித்தியாசத்தோடு காட்ட முடியும். இதெல் லாம் ஆரோக்கியமான விஷயம்தானே. சீரியலில் நடிக்கிற நானும் அடுத்து ‘ஜீ தமிழ்’ - ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சிக்குள்ள வரப்போகிறேன். இதுவும் ஒரு புதிய முயற்சிதான். இதெல்லாம் மகிழ்ச்சிதானே!

இரு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் அனுபவம் எப்படி?

கணவன் - மனைவி இடையிலான அன்பு, ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது. அதுதான் இந்த சீரியலின் கதை. மறைந்த பிறகு புகைப்படம் வழியாக பேசுவது போலத்தான் இந்தத் தொடரில் என் அறிமுகமே இருந்தது. இப்போது கதையின்ஃப்ளாஷ்பேக் முடிந்து நிகழ்காலத்துக்கு மாறியிருக்கிறது. லெஷ்மிமா, ஜானகி என்று திருப்பங்கள் நிறைய இருக்கும் கதாபாத்திரங்கள். நடிக்கும்போது திரில்லாக இருக்கிறது. நான் நடித்த காட்சிகளை டிவியில் திரும்ப ஒருமுறை பார்க்கவேண் டும் போல இருக்கிறது.

அடுத்தடுத்த புதிய சீரியல்கள் என்னென்ன?

தெலுங்குல ‘ராமா சீதா எக்கடா’ங்கிற பெயர்ல 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி, ரொம்பவே பேசப்பட்ட தொடரின் ரீமேக்தான் இந்த தொடர். அதன் நாயகியாக பொறுப்பேற்றிருக்கேன். முதலில் இந்த தொடர் வழியாக அழுத்தமான ஒரு அடையாளத்தைப் பெறணும். அப்புறம் புதிய சீரியல்கள் பற்றி யோசிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x