Published : 21 Dec 2017 02:26 PM
Last Updated : 21 Dec 2017 02:26 PM
'இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்று பராசக்தி படத்தில் வசனம் இடம்பெறும். கிட்டத்தட்ட... அது திமுகவுக்குப் பொருந்துவதாக அமைந்துவிட்டது.
'2ஜி வழக்கில் விடுதலைதான் கிடைச்சாச்சே...’ என்று கேட்கலாம். இது மக்கள் நீதிமன்றம்.
கடந்த 2011ல், தேர்தலின் போது 2ஜி எனும் அலை அடித்த புயல், 2016 தேர்தல் வரை ஓயவே இல்லை. 2011ல் 2ஜி விஷயத்தை வைத்துக் கொண்டே, ஜெயலலிதா சிக்ஸராக விளாசித் தள்ளினார். திமுக மேல் விழுந்த அடியில்... தேமுதிக முதலான கட்சிகளுக்குக்கூட கொண்டாட்டம்தான். காரணம்... அதிமுக ஆட்சியைப் பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது திமுக.
தோல்வியொன்றும் திமுகவுக்குப் புதிதில்லைதான் என்றாலும் இந்த முறை நிகழ்ந்த 2ஜி ஊழல் எனும் வழக்கு, மக்களிடையே பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருந்தது.
அதிமுகவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கும் திமுகவுக்கு 2ஜி வழக்கும் என சரிசமமாகப் பங்கு போட்டுக் கொண்டு, நீதிமன்றங்களின் பக்கம் போய்க் கொண்டிருக்க, செய்வதறியாமல் கைபிசைந்து தவித்துக் கொண்டிருந்தது தமிழகம்.
இந்தியாவில், எந்த மாநிலத்திலாவது இப்படியொரு களங்கம், அவமானம் வந்திருக்குமா. தெரியவில்லை. தமிழகத்தில் அப்படியொரு நிகழ்வு... சோகக்கறை. கரையேற முடியாமல் பல வருடங்களாகவே தத்தளித்து, முகம் கவிழ்த்துக் கொண்டிருந்தது தமிழகம்!
அறுபதுகளில் இருந்து திமுக - அதிமுக என மாறி மாறி தேர்ந்தெடுத்த தமிழக மக்கள், இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என கச்சைகட்டிப் பிரிந்து நின்று ஆதரவளித்த மக்கள், எந்தப் பக்கம் போவதென்றும் தெரியாமல், எவரை ஆதரிப்பது சரியென்றும் புரியாமல், குழம்பித் தவித்துத்தான் போனார்கள்.
ஆனால் என்ன... சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பு வந்ததை அடுத்து சில மாதங்களில் குமாரசாமி தீர்ப்பு வர... அதையடுத்து வந்த தேர்தலில், மக்களும் தீர்ப்பளித்தனர்... வாக்களித்தனர் அதிமுகவுக்கு. ஆனாலும் கிட்டத்தட்ட திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. அதாவது வெற்றியிலும் தோல்வி... தோல்வியிலும் வெற்றி.
அதேபோல், 2006- 2011 வரை நடந்த திமுக ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கிண்டலடித்தார் ஜெயலலிதா. இந்த முறை, 2016ல் மெஜாரிட்டி எதிர்க்கட்சி எனும் கவுரவம் கிடைத்தது தி.மு.க.வுக்கு!
இங்கே... இன்னொரு விஷயம். திமுக, அடுத்து அதிமுக, அதன் பிறகு திமுக என்று மக்கள் மாறிமாறி கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆனால் 2011ல் தொடங்கிய ஜெயலலிதாவின் ஆட்சி 2016 தேர்தலிலும் வென்றது. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதுவொரு சாதனையாகப் பார்க்கப்பட்டது. இப்படியான சரித்திர மாற்றத்துக்குக் காரணமாகவும் அமைந்திருந்தது 2ஜி தாக்கம்!
இந்த முறையும் அதிமுகவுக்கு ஆட்சியை மக்கள் கொடுக்க... அதன் பிறகு தடதடவென நடந்த அவருக்கான சிகிச்சைகளும் அதைத் தொடர்ந்த மரணமும் சொல்ல முடியாத சோகப் பக்கங்கள். ஓ.பி.எஸ். ராஜினாமா, சசிகலா ஆட்சியில் அமர ஆசைப்பட்டது, கூவத்தூர் கலாட்டாக்கள், 'ஆமாம். குற்றம் உறுதிதான். தண்டனை அவசியம்தான்' என்று சுப்ரீம் கோர்ட், குன்ஹாவின் தீர்ப்பை உறுதிப்படுத்த, அதிமுக இரண்டானது. தினகரன் மீண்டும் நிர்வாகத்துக்குள் நுழைந்தார்.
ஓ.பி.எஸ். இடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வர, அதன் பிறகு இரட்டை இலை முடக்கம், ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி இணைந்த கைகளாக..., தினகரன் தனித்துவிடப்பட, மீண்டும் இரட்டை இலை கிடைக்க... என அதிமுகவின் அடுத்தடுத்த திடுக்திடுக் சம்பவங்கள் ஒருபக்கம் இருக்க... அதிமுகவுடன் தானே திமுக மல்லுக்கட்டியாக வேண்டும். எப்போதும் போலவே இப்போதும்!
'ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, இந்நேரம் பரப்பன அக்ரஹாராவில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்திருப்பார்' என்று உடன்பிறப்புகள் பந்தைப் போட, 'பின்னாலேயே வருகிறது 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு' என்று ரத்தத்தின் ரத்தங்கள், பந்தை இவர்கள் பக்கம் பார்த்து எகிறியடிக்க, தமிழக மக்கள்தான் பரிதாபமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதனிடையே, கட்சிக்குள்ளேயே பல புகைச்சல்களையும் எரிச்சல்களையும் சந்தித்தார் ஸ்டாலின்.
'என்னதான் இருந்தாலும் தலைவர் கருணாநிதி மாதிரி வராதுப்பா. அப்பா வேற, பையன் வேற' என்றார்கள் கட்சிக்காரர்கள்.
'நமக்கு நாமேன்னு ஸ்டாலின் போயும் போன தேர்தல்ல கதைக்கு ஆகலையேப்பா' என்று புலம்பினார்கள் உடன்பிறப்புகள்.
அதேசமயம், 'என்னப்பா ஸ்டாலினைப் பத்தி இப்படிச் சொல்லிட்டே. அவர் மேயரா இருக்கும்போது எப்படிலாம் செயல்பட்டாரு. வாய்ப்புக் கிடைச்சா, நல்லா செயல்படுவாருப்பா’ என்று ஸ்டாலினை ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு.
ஆனால் என்ன... திமுகவினர் என்றாலே செயல்வீரர்கள் என்றொரு பேச்சு, அந்தக் காலத்தில் எல்லாக் கட்சியினராலும் சொல்லப்பட்ட ஒன்று. ஆனால் கடந்த பத்து வருடங்களில், குறிப்பாக, 2ஜி வழக்குப் பேச்சுகளில்,செயல்வீரர்களின் செயல்கள் கொஞ்சம் முடங்கத்தான் செய்தன.
ஜெயலலிதா இருந்த போதான அதிமுகவையும் சரி... இப்போதைய அதிமுக ஆட்சியையும் சரி... போதுமான முறையில் செயலாடவில்லை ஸ்டாலின் என்றொரு குற்றச்சாட்டும் இருந்தன... இருந்துகொண்டிருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.
இந்தநிலையில்தான் இன்றைக்கு வந்திருக்கிறது 2ஜியின் விடுதலைத் தீர்ப்பு. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி, ஸ்டாலின் மற்றும் திமுகவின் தலைவர்கள் அனைவருமே கொஞ்சம் உற்சாகக் களிப்புடன் தான் இருக்கிறார்கள். கொஞ்சமென்ன கொஞ்சம்... நிறையவே தொற்றிக் கொண்டிருக்கின்றன கொண்டாட்டக் குதூகலம்!
முக்கியமாக, திமுக தொண்டர்கள் வெடி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். ‘பல வருஷங்கள் கழிச்சு, பழைய உற்சாகத்தோட இருக்கோம். இனிமே பாருங்க’ என்கிறார்கள் விடுதலை கிடைத்த வெற்றித் தித்திப்பில்!
’இதையெல்லாம் மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும். ஒற்றை அறிக்கைல, பத்துநிமிஷப் பேட்டில மக்கள்கிட்ட இதைக் கொண்டுபோய் சேர்த்திருவாரு கருணாநிதி. ஆனா முதுமை காரணமா அவரால செயல்பட முடியலை. கட்சியைக் காபந்து பண்ணி, ஜெயலலிதாங்கற ஆளுமை இல்லாத அதிமுகவுக்கான ஓட்டு வங்கியை தன்பக்கம் இழுத்துக்கற சாமர்த்தியத்தோட ஸ்டாலின் களமிறங்கணும். இப்படி ஏதாவது ஸ்டாலின் செய்வாரா... செய்ய முடியுமா’ என்பதே உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பு.
தஞ்சாவூர் இடைத்தேர்தல் என்று ஞாபகம். அதில் திமுக தோற்றுப் போனது. எம்.ஜி.ஆர். இருந்த காலகட்டம் அது. தோல்வி அறிவிப்பு வந்த மறுநாள் திருவாரூரில், ஆசிரியர்கள் நடத்தும் பள்ளிவிழாவில் தலைமை தாங்கினார் கருணாநிதி. அவருக்கு சிறிய அளவிலான தஞ்சாவூர்த் தட்டு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
எல்லோரும் பேசி முடித்த பிறகு நிறைவாகப் பேச வந்தார் கருணாநிதி. ‘சின்னத் தட்டுதான்...’ என்று சொல்லி நிறுத்த, தஞ்சாவூர்த் தேர்தல் தோல்வியை சூசகமாகச் சொல்வதை அறிந்து அங்கிருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள். பிறகு தனக்கு வழங்கிய தட்டினைத் தூக்கிக் காட்டியபடி... ‘சின்னத் தட்டுதான்...’ என்று விழா நடத்தியவர்களைப் பார்த்துச் சொல்ல... மீண்டும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள் எல்லோருமே!
2ஜி எனும் அலைக்கற்றை, கடந்த பல வருடங்களாகவே தி.மு.க.வை சுழற்றித் தள்ளியதை இப்போது வந்திருக்கிற தீர்ப்பையும் விடுதலையையும் கொண்டு, ‘சின்னத் தட்டு’தான் என நினைத்து உத்வேகத்துடன் களமிறங்குவாரா ஸ்டாலின்? செயல்தலைவரின் செயல்பாடுகள், அலைவேகத்தில் இருக்குமா?
உடன்பிறப்பின் எதிர்பார்ப்பு இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT