Last Updated : 16 Dec, 2017 10:09 AM

 

Published : 16 Dec 2017 10:09 AM
Last Updated : 16 Dec 2017 10:09 AM

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை

“கட்டை வண்டி கஷ்டமா இருக்குன்னு டயர் (மாட்டு) வண்டிகள் வந்துச்சு. இப்ப, குட்டி யானை (டாடா ஏஸ்) வண்டிகளால அந்த டயர் வண்டிகளுக்கும் பஞ்சம் வந்துருச்சு. அதனால, எங்க பொழப்பும் பரிதாபமாகிட்டு..” தஞ்சாவூர் பக்கம் டயர் வண்டிகள் பூட்டும் தொழிலில் இருப்பவர்களின் வயித்துப் பாட்டுப் புலம்பல் இது!

காத்திருந்து வாங்கினார்கள்

30 வருடங்களுக்கு முன்பு, திருக்கானூர்பட்டிதான் தஞ்சைப் பகுதிக்கு டயர் வண்டிகளை அறிமுகம் செய்த ஊர். அதிலிருந்து இன்று வரை டயர் வண்டிகள் பூட்டுவதில் தொழில் சுத்தமான ஊர் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கிறது இந்த கிராமம். ஆனால், தொழில்தான் முன்னைப் போல பிரகாசமாய் இல்லை. அந்தக் காலத்தில் இந்த ஊரில் பெரிய அளவில் இரும்புப் பட்டறைகள் அமைத்து டயர் வண்டிகளை பூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வருடத்துக்கு குறைந்தது 200 வண்டிகளாவது இந்த ஊரிலிருந்து டெலிவரி ஆகும். சில நேரங்களில், (பிரிமியம் செலுத்தி!) வண்டிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதுண்டு. இதனால், இந்தத் தொழிலை நம்பி அப்போது இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்போட்டினார்கள்.

ஆனால், இப்போது நிலைமை படுமோசம். இப்போது ஆண்டுக்கு இரண்டு வண்டிகளுக்கு ஆர்டர் கிடைத்தாலே அபூர்வம் என்கிறார்கள். அதனால், பழைய வண்டிகளை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலையை மட்டும் இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திருக்கானூர்பட்டி எஸ்.சவரிமுத்து, “அப்ப, திருச்சி மாவட்டம் வெள்ளனூருல தான் டயர் வண்டிகளைப் பூட்டுவாங்க. நாங்க அங்க போயி தங்கி தொழில் கத்துக்கிட்டு வந்துதான் இங்க தொழில் செய்ய ஆரம்பிச்சோம்.

10 டன் கரும்பு ஏற்றலாம்

இங்க இருக்கிற சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏத்துறதுக்காக விவசாயிகள் விரும்பி டயர் மாட்டு வண்டி களை வாங்க ஆரம்பிச்சாங்க. டயர் வண்டிகள்ல கரும்பு கொண்டு போனா கரும்பு ஆலைகள்ல க்யூவூல நிற்காம, போனதும் லோடை இறக்கிட்டு வந்துடலாம். டயர் வண்டிகள விரும்பிப் பூட்டுனதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். நம்பர் ஒன் டயர் வண்டிகள்ல பத்து டன் வரைக்கும் கரும்பு லோடு ஏத்தமுடியும்.

டயர் வண்டிகள் அதிகமா புழக்கத்துல இருந்ததுக்கு இந்தப் பகுதியில அப்ப மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டதும் ஒரு காரணம். ஒருகட்டத்துல, மாடுகளோட எண்ணிக்கை வெகுவா குறைஞ்சிருச்சு. அதனால, டயர் வண்டிகள டிராக்டர்களோட இணைச்சு ஓட்ட ஆரம்பிச்சாங்க. இப்ப அதுவும் போயி எல்லாரும் குட்டி யானையை நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் இந்தப் பகுதிகள்ல இன்னமும் ஐயாயிரம் டயர் வண்டிகளுக்கும் மேல இப்பவோ அப்பவோன்னு ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா, புதுசா யாரும் டயர் வண்டிகள பூட்ட வர்றதில்லை. இருக்கிற வண்டிகள பழுது பார்த்து ஓட்டிட்டு இருக்காங்க. இதுவும் எத்தனை நாளைக்கோ!

பேங்க் லோன் தருவதில்லை

முன்னயெல்லாம் டயர் வண்டிகளுக்கு பேங்குகள்ல மானியத்தோட கடன் குடுத்தாங்க. இப்ப அதையும் குட்டி யானை பக்கம் திருப்பிட்டாங்க; டயர் வண்டிக்கு தர்றதில்ல. இரும்பு, மரமெல்லாம் விலை எகிறிட்டதால, முன்பு ஏழாயிரத்துக்கு பூட்டுன டயர் வண்டிக்கு இப்ப 60 ஆயிரம் செலவாகுது. அதனால, தொழில் சுத்தமா படுத்துட்டதால, நாங்களும் இந்த வண்டிகள கட்டி இழுக்கிறத மறந்துட்டு வெல்டிங் வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்” என்றார்.

டயர் மாட்டு வண்டிகள் - நம்மைவிட்டு மெல்லக் காணாமல் போகும் இன்னொரு பழமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x