Published : 17 Dec 2017 10:14 AM
Last Updated : 17 Dec 2017 10:14 AM

நேர் பதினாறு நிரை பதினேழு

வைக்கப்போரு, அக்கப்போரு என்று இயைபுத் தொடைகள் உச்சம்தொட்ட ‘அடி ராக்கம்மா’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். அதனிடையே ஒலிக்கும் ‘குனித்த புருவமும்’ என்ற பாடல், நாவுக்கரசரின் தேவாரம் என்பதையும் அறிவீர்கள். கோவை, கலம்பகம் முதலான சிற்றிலக்கியங்களில் கையாளப்பட்ட கட்டளைக் கலித்துறை எனும் பாவினத்தில் அமைந்த பாடல் அது. அந்தப் பாவினத்தில் பெரிதும் அறியப்பட்ட பாடலும் அதுவே. எழுத்தெண்ணிப் பாடுவது, நேரசையில் தொடங்கினால் பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் பதினேழு எழுத்து என்று பயமுறுத்துபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

வெண்டளையில் எழுதிப் பழகியோர் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் கூடுதலாய் ஒரு கூவிளங்காயையோ கருவிளங்காயையோ சேர்த்துக்கொண்டால் கட்டளைக் கலித்துறை தயார். முதற்சீர் அளவொத்து அமைவதும் ஏகாரத்தில் முடிவதும் இன்னோரன்ன தொடையணிகளும் ஏலக்காய் முந்திரி போல மேலாகத் தூவிக்கொள்வதே.

கட்டளைக் கலித்துறையில் முயற்சி செய்யும் பலரும் தளைகளில் தளைப்பட்டு நிற்போரே. யாப்பமைதியுடன் ஓசை இனிமையும் உடையதாக இருப்பதே கட்டளைக் கலித்துறைக்கு அழகு. அதைத் தெளிவுபடுத்தி இளங்கவிகளுக்கு உதவும் வகையில் சி.வை.தாமோதரம் பிள்ளை 1872-ல் எழுதிய ‘கட்டளைக் கலித்துறை’ எனும் சிறுநூலை பேரா. ய.மணிகண்டன் ஆய்வுப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறார் (பாரதி புத்தகாலயம் வெளியீடு). இந்நூலின் விரிவான பிற்சேர்க்கைகளில் ‘காலம்தோறும் கட்டளைக் கலித்துறை’ என்ற தேர்ந்தெடுத்த தொகுப்பும் ஒன்று.

இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவற்றில் பாரதியும் பாரதிதாசனும் பெருஞ்சித்திரனாரும் ச.பாலசுந்தரமும் முயன்று பார்த்தவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. தளைப்பட்டு நிற்போரில் பாரதியும் விலக்கல்ல. பாரதிதாசனை அடியொற்றி வந்த கவிமரபு விருத்தத்தோடே மனநிறைவை எய்திவிட்டது. அதன் காரணமாகவே கலித்துறை விதந்தோதப்படுவதும் நிகழ்ந்தது. எனினும் விருத்தப் பாவலர்களின் முழுத்தொகைகளிலும் கவனமாகத் தேடிப் பார்த்தால் ஒன்றிரண்டு கலித்துறைகளேனும் ஓசை இனிமையும் கொண்டதாய் அமைந்திருக்கக் கூடும்.

- செல்வ புவியரசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x