Published : 19 Jul 2014 09:19 AM
Last Updated : 19 Jul 2014 09:19 AM
‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் பாம்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார் மணிமேகலை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜசிங்கமங்களத்தைச் சேர்ந்த விவசாயி புஷ்பநாதன். இவரது இளைய மகள்தான் மணிமேகலை. சிறுவயதிலேயே தந்தையுடன் சேர்ந்து வேட்டைக்குப் போய் பழக்கப் பட்டவர். ஒருகட்டத்தில் யாரும் துணை இல்லாமல் தனியாகவே வேட்டைக்குப் போகுமளவுக்கு துணிச்சலை வளர்த்துக் கொண்டார்.
ஒருநாள், வேட்டைக்குச் சென்று முயலோடு வீடு திரும்பிய மகளைப் பார்த்த புஷ்பநாதன், ‘‘ஏம்மா.. இந்த முயலை நீ வேட்டையாடி தூக்கிட்டு வந்துட்டியே.. இந்நேரம் தாயைக் காணாம இந்த முயலோட குட்டிங்க என்ன தவிப்பு தவிச்சிட்டு இருக்கும்?’’ என்று கேட்டார். அந்தக் கேள்விதான் மணிமேகலையை இன்று பாம்பு நேசராக மாற்றி இருக்கிறது. அது குறித்து நம்மிடம் பேசினார் மணிமேகலை.
‘எனக்கு வேட்டையை கத்துக் கொடுத்த அப்பாவே அப்படி கேட்டபோது உயிரே போனமாதிரி இருந்துச்சு. வேட்டையாடி பல உயிர்களை கொன்றோமே, அந்தப் பாவத்துக்கெல்லாம் பரிகாரம் தேடணும். முடிந்தவரை வன உயிரினங்களை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன். அந்த சமயத்துல, ஊட்டியில் இருக்கிற தமிழ்நாடு பசுமை இயக்கத்தைச் சேர்ந்த சாதிக் அறிமுகம் கிடைச்சுது. அவர்தான் வன உயிரினங்களைப் பற்றி எனக்கு பயிற்சி கொடுத்தார்.
மற்ற எந்தப் பிராணியைப் பார்த்தாலும் உடனடியா அடிச்சுக் கொல்லணும்கிற எண்ணம் வராது. ஆனா, பாம்பைக் கண்டால் மட்டும் அடிச்சுக் கொல்லத்தான் துடிப்பாங்க. அதனால, பாம்புகளை பாதுகாக்கணும்னு முடிவெடுத்து அதுக்கான முயற்சியில் இறங்கினேன். மதுரை மாவட்டத்துல இருக்கிற தீயணைப்பு நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள், குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், தன்னார்வு அமைப்புகள் இவங்களுக்கு எல்லாம் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘‘எங்காவது பாம்பு புகுந்துட்டா என்னைக் கூப்பிடுங்க. நான் வந்து பிடிச்சிக்கிட்டு போறேன்’’ என்று சொல்ல ஆரம்பித்தேன். பயணங்களின்போது, நான் சந்திக்கும் மனிதர்களிடமும் குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறேன்.
தமிழகத்தில் மொத்தம் 65 வகையான பாம்புகள் இருந்தாலும் அதில் ஐந்து வகையான பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கு. பாம்புகள் தங்களுக்கான இரையை வீழ்த்துவதற்கு மட்டுமே விஷத்தை பயன்படுத்தும். அதனால் விஷத்தை ஒருபோதும் அவை வீணடிக்க விரும்புவதில்லை.
நல்ல பாம்பு, பெயருக் கேற்றபடி உண்மையிலேயே நல்ல பாம்புதான். நான் கடித்தால் விஷம் என்று நம்மை எச்சரிப்பதற்காகவே அவை படமெடுக்கின்றன. இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் பாம்புகளை கண்மூடித்தனமாக அடித்துக் கொல்கிறார்கள். ஒரு கட்டிடத்துக்குள் பாம்பு புகுந்துவிட்டால் நாம் எதுவும் செய்யாதவரை அதிகபட்சம் பத்து மணி நேரம் வரை அது அதே இடத்திலேயே இருக்கும். பயப்படாமல், அதிர்வுகளை கொடுக்காமல் நாம் நமது வேலைகளைப் பார்க்கலாம். எங்காவது பாம்பு இருக்குன்னு தகவல் வந்தால் உடனடியாக அங்கே போய் பாம்பைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைச்சிருவேன்.
இப்பெல்லாம் பாம்புகளுக்கு தேவையான இரை எங்கே இருக்கிறதோ அந்த வனத்தில் கொண்டுபோய் நானே விட்டுட்டு வந்திருவேன். காயம்பட்ட பாம்புகளை எடுத்துட்டு வந்து முறையாக சிகிச்சையளித்து அவற்றுக்கு இரை கொடுத்து காப்பாத்துவேன். அதுகளா இரை எடுக்குமளவுக்கு தேறினபிறகுதான் காட்டில் கொண்டுபோய் விடுவேன். கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 250 பாம்புகளை பிடித்துக் காட்டில் விட்டிருப்பேன்.
எனது வருமானத்துக்காக கருவாடு வியாபாரம் பார்த்துக் கொண்டே இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன். பாம்புகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ஸ்நேக் டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் உருவாக்கி இருக்கிறேன். இதன் மூலம் அரிய வகை பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.
காயம்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்ற வனம் சார்ந்த ஒரு காப்பகத்தை உருவாக்கணும். நமது வனங்களிலேயே பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவை இன்னும் நம் மக்களுக்குத் தெரியவில்லை. அவற்றைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக தொலைக்காட்சி சேனல் ஒன்று உருவாக்கணும். இவை இரண்டும்தான் எனது எதிர்காலத் திட்டம்’’ என்கிறார் மணிமேகலை (தொடர்புக்கு 96880 71822)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT