Published : 01 Nov 2017 10:43 AM
Last Updated : 01 Nov 2017 10:43 AM
‘எ
த்தனை வயதானாலும் விளையாட பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. சிலருக்கு, விளையாட்டே வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிடும். எங்கள் ஊரிலிருக்கும் கிளப்பும் அப்படித்தான் பலபேரின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தந்து கொண்டிருக்கிறது’ முன்னாள் ராணுவத்தினரான ரவி, ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படியொரு தகவலைச் சொல்லி இருந்தார்.
பரைக்கோடு கிளப்
குமரி மாவட்டத்தின் பரைக்கோடு கிராமத்தில் உள்ள ‘ஃபிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்’ குறித்து தான் ரவி தகவல் தந்திருந்தார். தற்போது 73 வயதைக் கடந்து கொண்டிருக்கும் இவர், இந்த கிளப்பில் விளையாட்டுப் பயிற்சிகள் எடுத்து, விமானப் படையில் பணியில் சேர்ந்தவர். இவரைப் போலவே பலருக்கும் ஏணியாய் இருக்கிறது இந்த பரைக்கோடு கிளப்.
இந்த கிளப் உருவான விதம் குறித்து நம்மிடம் பேசிய ரவி, “1960் காலக்கட்டம்.. நானும், எங்கள் ஊரைச் சேர்ந்த ஆர்.தங்கநாடார், ஜி.தங்கராஜ், ஆர்.முத்தையா ஆசான் எல்லாருமா சேர்ந்து, பரைக்கோட்டில் ஓலைக் கொட்டகையில் கிராம முன்னேற்ற வாசிப்பு சாலை ஒன்றை அமைத்தோம். இதையடுத்து, 1965-ல், எங்கள் ஊரின் டாக்டர் சி.ஜார்ஜ், ஆர்.மோகன்ராஜ், பி.சிம்சன், டி.வேலப்பன், ஏ.சதாசிவன், பி.வின்சென்ட் உள்ளிட்டவங்க சேர்ந்து ‘பரைக்கோடு ஸ்டூடண்ட்ஸ் கிளப்’னு ஒரு கிளப்பை ஆரம்பிச்சாங்க. அடுத்த மூணு வருசத்துல இது, ‘ஸ்டூடண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என பேரு மாறிருச்சு.
எங்களோட வாசிப்பு சாலையும், ஸ்டூடண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் இணைந்து செயல்பட்டதால 1971-ல், ‘பரைக்கோடு ஃபிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்’னு முறைப்படி பதிவு செஞ்சோம். ஓலைக் கொட்டகையில் இருந்த வாசிப்பு சாலை அரசு மற்றும் கிளப் உதவியோட கான்கிரீட் கட்டிடமா மாறுச்சு. வாசக சாலையை பாரதி படிப்பகம்ன்னு பெயர் மாத்துனோம். 1981-ல் கிளப்புக்கு சொந்தமா விளையாட்டு மைதானம் அமைக்க 14 சென்ட் இடம் வாங்கினோம். அதுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அரசு மானியமாவே கிடைச்சுது.” என்று சொன்னார்.
அரசு வேலைவாய்ப்புகள்
தொடர்ந்தும் பேசிய அவர், “எங்க ஊருல அந்தக் காலத்துலயே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னோடிகள் இருந்தாங்க. அதனால் தான் எனக்கும் விமானப் படையில் சேர முடிந்தது. விமானப் படையில் ரேடியோ டெலிஃபோனி ஆபரேட்டராக இருந்த நான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போர்களின் போது களப் பணியில் இருந்தேன். வேலையில் சேர்ந்த பிறகும் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்கு போய் விளையாடவும், படிப்பகம் அமைக்கவுமாக இருந்தேன்.
ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததும் அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். அதேசமயம், சொந்த ஊருக்கு வந்த பிறகு, எங்களது முன்னோடிகள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சியையும் ஊக்கத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்தோம். அதன் பலனாக நிறையப் பேர் விளை யாட்டு வீரர்களாகி, அரசு வேலை வாய்ப்புகளையும் பெற்றனர். இப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமானவர்கள் காவல் துறையில் உள்ளனர்.
ஒவ்வொரு ஊரிலும்..
இந்த கிளப்பில் சதுரங்கம், கேரம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டுக்களுக்கும், கபடி, தடகளம், நீச்சல் உள்ளிட்ட வெளி விளையாட்டுக் களுக்கும் இலவச பயிற்சி கொடுக்கின்றனர். இதில், பல போட்டிகளில் மாநில அளவில் பங்கெடுத்து தகுதிபெற்ற வீரர்கள் இருக்கின்றனர். குமரி மாவட்டத்திலேயே முதன் முதலில் மின்னொளியில் கபடி போட்டிகளை நடத்திய பெருமை யும் இந்த கிளப்புக்கு உண்டு. இங்கு பெண்கள் கபடி அணியும் உண்டு. இங்கு பயிற்சி எடுத்த எனது மகன் விஜின் ரவி ராணுவத்தில் மேஜராக உள்ளான். இதே போல், ஒவ்வொரு ஊரிலும் விளையாட்டு வீரர்கள் கூடி ஒரு கிளப்பை உருவாக்கி, பயிற்சி அளித்தால் ஆரோக்கி யமான அடுத்த தலைமுறையை உருவாக்கலாம். அத்துடன் இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கவும் முடியும்” என்றார்.
அங்கே இளைஞர்களுக்கு கபடி பயிற்சி அளித்துக் கொண்டிருந்த யேசுதாஸ், “ஒவ்வொரு ஆண்டும், இங்கு பயிற்சி எடுப்போரில் சிலர் அரசு வேலை கிடைத்து செல்கின்றனர். கடந்த ஆண்டு நான்கு பேர் ராணுவ பணிக்காகச் சென்றனர். ஒரு கிராமம் என்ற மட்டில் பார்த்தால் இது ஆரோக்கியமான எண்ணிக்கை தான். தினமும் இரவு இங்கு மின்னொளியில் கபடி பயிற்சிகள் நடக்கும். வார நாள்களில் மாலையில் 25 பேர் வரையும், சனி, ஞாயிறுகளில் 50 பேர் வரையிலும் பயிற்சிக்கு வருவார்கள். இந்த கிளப்பை இன்னும் செம்மையாக செயல்பட வைத்து, எங்கள் பகுதியிலிருந்து இன்னும் நூற்றுக் கணக்கான இளைஞர்களை அரசு வேலையில் அமர்த்துவதே எங்களின் இலக்கு” என்று சொன்னார்.
படங்கள் உதவி: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT