Published : 01 Nov 2017 10:41 AM
Last Updated : 01 Nov 2017 10:41 AM
‘ஊ
ட்டியைச் சேர்ந்த பிரகாஷ் 5 டிகிரி படித்து, 16 பட்டயப் படிப்புகளையும் முடித்திருக்கிறார். அத்துடன் 18 இசைக் கருவிகளையும் இசைக்கத் தெரிந்திருக்கிறார். இத்தனையும் கற்ற இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர்!’ வாசகர் ஒருவர் ‘தி இந்து - இங்கே.. இவர்கள்..இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படியொரு தவலை பதிவு செய்திருந்தார்.
ஆர்வக் கோளாறு
உதகை அருகே கடநாடு கிராமம் பிரகாஷின் சொந்த ஊர். தற்போது உதகையில் வசிக்கும் இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தின் உதகை கிளை 1-ல் நடத்துநராக பணியாற்றுகிறார். இவரது வீட்டுக்குள் நுழைந்ததுமே ஏதோ ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழைந்துவிட்ட பிரம்மை ஏற்படுகிறது. வீட்டின் ஒரு பக்கத்தை இசைக் கருவிகள், ஒலிவாங்கி மற்றும் ஒலிபரப்பு கருவிகள் ஆக்கிரமித்திருக்க.. இன்னொரு பக்கம், பழுதுநீக்க வந்திருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் குவிந்து கிடக்கின்றன.
இதையெல்லாம் பார்த்து பிரம்மித்து நின்ற நம்மை சிரித்துக் கொண்டே வரவேற்ற பிரகாஷ், “ரொம்பப் பயந்துடாதீங்க. நடத்துநர் பணியும் எலெக்ட்ரானிக் சாதனங்களை ரிப்பேர் பண்றதும் தான் நம்ம தொழில். இசையும், கூடுதலா படிச்ச படிப்புகளும் ஆர்வக் கோளாறு!” என்றார்.
தபேலா, மிருதங்கம், டிரம்ஸ், புல்லாங்குழல், செனாய், கிளாரிநெட், டிரம்பெட், வயலின், கீ போர்ட்டு, புல்புல்தாரா, என 18 வகையான இசைக் கருவிகளை அநாயசமாக வாசித்து வியக்க வைக்கிறார் பிரகாஷ். 2010-ல், தமிழக அரசு கலைச்சுடர்மணி விருது வழங்கி இவரை கவுரவித்திருக்கிறது. இவரது தந்தை கிருஷ்ணன் தலைமை ஆசிரியராக இருந்தவர். வாசிப்புப் பிரியரான தந்தையார் தந்த ஊக்கமும் ஆக்கமுமே படிப்பின் மீதான தனது ஆர்வத்தை அதிகப்படுத்தியது என்று சொல்லும் பிரகாஷ், இளங்கலையில் இரண்டு, முதுகலையில் மூன்று என மொத்தம் ஐந்து பட்டங்களை பெற்றிருக்கிறார். அத்துடன், இசை, ஓவியம், கணினி, ஹார்டுவேர், நகை வடிவமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட 16 துறைசார்ந்த படிப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயங்களையும் பெற்றிருக்கிறார்.
ஓய்வு நேரத்தில் இசை மற்றும் ஓவியப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தும் பிரகாஷிடம், “இவ்வளவும் படித்துவிட்டு எதற்காக நடத்துநர் பணியைத் தேர்வு செய்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “படிப்புக்கு வயதும் இல்லை; எல்லையும் இல்லை. படிக்க ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து படித்தேன். முடிந்தவரை எல்லாத் துறைகளையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். அதுதான் நான் படித்துப்பெற்ற பட்டயங்கள். நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் தாமதமாகக் கிடைத்ததால் அரசுப் பணிக்கான வாய்ப்புகள் சிலவற்றை தவறவிட்டேன். கடைசியில், நமக்கு அமைந்தது நடத்துநர் பணிதான். இதையும் ஆத்ம திருப்தியுடன் செய்கிறேன்” என்றார் பிரகாஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT