Published : 14 Nov 2017 10:24 AM
Last Updated : 14 Nov 2017 10:24 AM

சிறுமைப்படுத்தப்படும் சின்னாறு நீர்த்தேக்கம்

றண்ட பூமியான பெரம்பலூரை வளப்படுத்த 1958-ல் காமராஜர் தொலைநோக்குடன் உருவாக்கியது சின்னாறு செயற்கை நீர்த்தேக்கத் திட்டம். சுமார் 750 ஏக்கருக்குப் பாசனம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை இப்போது பாழாக்கிப் போட்டிருக்கிறார்கள்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் ஒரு காலத்தில், பாசனத்துக்கு மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களுக்கான சுற்றுலாதலமாகவும் இருந்தது. ஆனால் இன்று, இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் குப்பைகளைக் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது.

கக்கனால் கவனிக்கப்பட்ட திட்டம்

நீர்த்தேக்கத்தின் எதிரில் வசிக்கும் முதியவர் கன்னையன், சின்னாறு நீர்தேக்கம் குறித்த தனது பழைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார். “மழைக் காலத்தில் பச்சைமலையிலிருந்து வரும் காட்டாற்றுத் தண்ணீரை சேமித்து வைத்து பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் காமராஜர் இந்த சின்னாறு நீர்தேக்க திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அமைச்சராக இருந்த கக்கன் அடிக்கடி நேரில் வந்து இங்கேயே நாள் கணக்கில் தங்கியிருந்து நீர்த்தேக்க திட்ட பணிகளை கவனித்தார். திட்டம் பூர்த்தியாகி தொடக்க விழாவுக்கு வந்த காமராஜர் இங்குள்ள பயணியர் மாளிகையில் தங்கிச் சென்றார்.

இந்த பயணியர் மாளிகையைச் சுற்றி நீரூற்றுகள், நமது பாரம்பரிய விவசாய முறைகளை விவரிக்கும் விதவிதமான சிலை வடிவங்கள், பொம்மைகள், ஊஞ்சல்கள், உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பூங்காவும் இருந்தது. இதனால், இந்தப் பூங்காவுக்கு உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகம் வந்தனர். நெடுஞ்சாலை ஓரமாய் அமைந்திருந்ததால் இவ்வழியாகச் செல்லும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த பயணியர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்வார்கள். இப்படியெல்லாம் கொண்டாடப்பட்ட இந்த இடத்தைத்தான் இப்போது சுடுகாடு கணக்காய் போட்டு வைத்திருக்கிறார்கள். காமராஜர் தங்கிய பயணியர் மாளிகை இப்போது சமூக விரோதிகளின் புகலிடமாகி விட்டது” என வேதனைப்பட்டார் கன்னையன்.

புதர் மண்டிக் கிடக்கிறது

சின்னாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் இதுகுறித்துப் பேசுகையில், “இங்கே பூங்கா என்று ஒன்று இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கிருந்த சிலைகள், பொம்மைகள் உள்ளிட்டவை, இருந்த சுவடே தெரியவில்லை. இப்போது இந்த இடத்தை வாகன ஓட்டிகள் வாகனம் நிறுத்துமிடமாக ஆக்கிவிட்டனர். ஊராட்சி நிர்வாகமும் தனது பங்குக்கு குப்பைக் குழியை வைத்து சின்னாறு நீர்தேக்கத்தை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து பெண்ணகோணம் வரை சுமார் 10 கி.மீ தூரத்துக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. இன்னும் சில ஆண் டுகளில் இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என ஆதங்கப்பட்டார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (சின்னாறு நீர்த்தேக்கம்) பிரபாகரனிடம் இந்த அவலம் குறித்துக் கேட்டபோது, “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த நீர்த்தேக்கம் இப்படி ஆகிவிட்டது. இங்கே, 2 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்க (மறுபடியும் முதல்ல இருந்தா!?) திட்டம் தயாரித்து வருகிறோம். மேலும், பொதுப்பணித்துறை அலுவலகத்துடன் கூடிய விருந்தினர் மாளிகை அமைக்கும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ள குப்பை குழியை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x