Published : 21 Nov 2017 09:33 AM
Last Updated : 21 Nov 2017 09:33 AM

காளி - காவல்துறைக்கு இப்படியும் ஒரு நண்பன்!

வா

ழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்பவர்கள் எளிய மனிதர்கள். இவர்களில் பலருக்கு வீடு வாசல்கூட இருக்காது; சொல்லிக் கொள்ள உறவுகளும் இருக்காது. பெரும்பாலும் நடைபாதைகள் தான் இவர்களின் வீடாக இருக்கும். ஆனாலும், இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் இவர்கள் உதவியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் வயது ஐம்பத்தைந்து கடந்துவிட்ட, மதுரை டவுன்ஹால் ரோடு காளி.

ரயில் தண்டவாளங்களில் ரயிலில் விழுந்தும், விபத்தில் அடிபட்டும் சிதறும் மனித உடல்களை அள்ளிக் கட்டுவது காளியின் பிரதானத் தொழில். இப்படி, கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இவற்றில், அடையாளம் தெரியாத சுமார் 300 பேரின் உடல்களை, தானே மயானத்தில் கொண்டு போய் புதைத்தும் இருக்கிறார் காளி.

சோகம் நிறைந்த வாழ்க்கை

விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்களில் ரயில் மோதி சிதறி இறப்பது துயரத்திலும் பெரும் துயரம். இப்படிச் சிதைந்து கிடக்கும் உடல்களைப் பார்த்து உச் கொட்டிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவரவர் வேலை யைப் பார்க்கப் போய்விடுவோம். சிதறிக் கிடக்கும் அந்த உடல்களைத் தேடிப்பிடித்து அள்ளுபவரின் துயரமும் சோகமும் யாருக்கும் தெரியாது. காளியின் வாழ்க்கை ரயில் தண்டவாளத்தில் சிதைந்து போகிறவர்களின் வாழ்க்கையைவிட சோகமானது; துயரமானது. சொந்த வீடுகூட இல்லாத இவருக்கு மதுரை டவுன்ஹால் ரோடு நடைபாதை தான் வீடு, வாசல் எல்லாமே.

விருநகர் - மதுரை - திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில் மாதம் தோறும் சுமார் 15 பேராவது ரயில் மோதியும், தவறி விழுந்தும் இறக்கின்றனர். அவர்களின் உடல்களை அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போவதற்கு ரயில்வே போலீஸார் காளியைத்தான் நாடுகிறார்கள். காளிக்கு ‘டவுன் ஹால் ரோடு’தான் அடையாளம். என்பதால் போலீஸார் இவரை ‘டவுன் ஹால் ரோடு காளி’ என்றே அழைக்கிறார்கள்.

யாராவது ரயிலில் அடிப்பட்டு இறந்தால், சம்பவம் நடந்த இடத்தில் தண்டவாளத்திலும் முட்புதர்களுக்குள்ளும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் உடல் துண்டுகளை ஒன்று விடாமல் சேகரிக்கிறார் காளி. ரத்தம் ஒழுகினாலும் அதைப் பொருட்படுத்தாமல், இறந்தவர் உடலைத் தோளில் தூக்கிப் போடுகிறார். கடைசியில், சேகரித்த அனைத்தையும் ஒரு சாக்குப் பையில் சுருட்டி வேனில் கொண்டு சென்று மருத்துவமனையில் ஒப்படைக்கிறார்.

இந்த வயதிலும்..

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகும் உறவுகள் யாரும் வரவில்லை என்றால், தங்களது சடங்கு சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு காளியை அழைத்து அவரிடமே அந்த உடலை ஒப்படைத்து விடுகிறது போலீஸ். அவரும் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிடுகிறார்.

தனக்குள்ளே ஆயிரம் சோகம் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, போலீஸ் அழைத்ததும் ஓடிவருகிறார் காளி. தனது தேவைகளுக்காக யாரிடமும் யாசகம் கேட்காமல் இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடுகிறார். நாம் இவரைத் தேடிச் சென்றபோதுகூட, ‘டவுன் ஹால் ரோட்ல போய் பாருங்க’ என்றுதான் நமக்கு வழி காட்டி விட்டார்கள் போலீஸார்.

துரத்திய சொந்தங்கள்

அதுபோலவே, டவுன் ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த காளியைச் சந்தித்து மெல்லப் பேச்சுக் கொடுத்தோம். ‘‘ராம்நாட்டுல இருக்கிற சூரங்கோட்டை தான் நமக்குச் சொந்த ஊரு. அங்க எங்களோட பூர்வீகச் சொத்தா வீட்டோட சேர்த்து 20 சென்ட் இடம் இருந்துச்சு. அப்பா, அம்மா இறந்ததும், சொந்தக்காரங்க அதையெல்லாம் பிடுங்கிட்டு என்னையும் எங்க அக்காவையும் துரத்தி விட்டுட்டாங்க.

அது எங்களோட சொத்துன்னு சொல்லி எங்களுக்கு வாங்கிக் குடுக்க யாரும் இல்லை. சொந்தக்காரங்கள எதிர்த்து போராட எங்களுக்கும் தெம்பு இல்லை. அதனால, முப்பது வருசத்துக்கு முந்தி மதுரைப் பக்கம் வந்துட்டோம். காலு நல்லாருந்தப்பா ரிக்ஷா மிதிச்சேன். எவ்வி, எவ்வி ரிக்ஷா மிதிக்குறதுக்குள்ள தன்னால தொடை செத்துரும்; குடலோடு வயிறு ஓட்டிக்கிடும். நல்லா ஓடுனா ஒரு நாளைக்கு 400, 500 ரூபாய் கிடைக்கும். நானும் அக்காவும் சோத்துக்குச் சிரமம் இல் லாம காலத்த ஓட்டுனோம்.” என்றார் காளி.

கால் போச்சு

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தவர், “எட்டு வருஷத்துக்கு முந்தி, திடீர்னு ஒரு நாள் நைட்டுல இந்த டவுன் ஹால் ரோட்டுல படுத்துருந்தப்ப யாரோ ஒரு புண்ணியவான் ஓட்டிட்டு வந்த ஜீப்பை எம்மேல ஏத்திட்டுப் போயிட்டார். அதுல எனக்கு கால் எலும்பு ஒடைஞ்சிருச்சு. அப்ப, எங்க அக்காதான் மதுரை பெரியாஸ்பத்திரியில கொண்டு போய் போட்டு என்னைய காப்பாத்துச்சு. ஆனாலும், இப்ப வரைக்கும் காலை சரிபண்ண முடியல.

இப்ப, ரயில்ல அடிபட்டுச் சாகுறவங்களோட உடல்களைப் பொறக்கிக் குடுத்து அதுக்காக போலீஸ்காரங்க கொடுக்குற காசுல நானும் அக்காவும் வயித்தைக் கழுவுறோம். வீடு, வாசல் இருக்கவனுக்கே பொண்ணு தர யோசிப்பாங்க. இதுல, நமக்கு எங்க கலயாணம் ஆகுறது? அதனால, கல்யாண ஆசையை விட்டாச்சு. எங்க அக்கா ‘ஞாயித்துக்கிழமை சந்தை’யில கிடக்கும். நான் இந்த டவுன் ஹால் ரோட்டுல கிடப்பேன்.

திருமங்கலத்துல இருந்து திண்டுக்கல் வரைக்கும் யாராச்சும் ரயிலுல அடிப்பட்டா போலீஸ்காரங்க வந்து கூட்டிட்டுப் போவாங்க. பாடி 50 துண்டமா கிடந்தாலும் எல்லாத்தையும் அள்ளிப்போட்டுக்கிட்டு த்துரூவா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுவேன். அங்க, பிரேதப் பரிசோதனை முடிஞ்ச பின்னாடியும் உறவினர்கள் யாரும் வராட்டிப் போனா அந்த உடல்களை புதைக்கிறதும் நான் தான். இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி அள்ளிக் கட்டுற வேலையச் செய்யணும்னு நம்ம தலையில விதிச்சிருக்கோ தெரியல” என்றபடி நகர்ந்தார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x