Published : 29 Jul 2014 02:41 PM
Last Updated : 29 Jul 2014 02:41 PM
சென்னை - பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் நகரம். இதனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையிலான 'மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்' என்ற வீடியோ பதிவு, யூடியூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரண்டரை நிமிடமே கொண்ட இந்த வீடியோவை, மெட்ராஸுடன் தங்களை பிணைத்துக்கொண்ட பலர் இணையத்தில் கண்டு ரசித்து வருகின்றனர். இப்போதும் இயங்கும் பழைய கிராமபோன், மெரினா கடற்கரையில் குளிக்கும் சிறுவர்கள், தனது வாழ்நாள் ஆதாயத்துக்காக கடலை நோக்கி புறப்படும் மீனவர், பாரிமுனையில் இருக்கும் கூலி வேலையாட்கள் என தமிழ் மனங்களை தொடும் மெல்லிய வருடலான பிண்ணனி இசையோடு மெட்ராஸின் முகங்களை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.
இதனை பாலாஜி மகேஷ்வர் என்ற 28 வயது மிக்க ஆவணப்பட கலைஞர் உருவாக்கியுள்ளார். இது குறித்து கூறும் பாலாஜி, "மெட்ராஸ் அழகானது என்பதை உணர்த்தும் நிறைய நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அவை அனைத்தும் மெட்ராஸ் எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு உணர்த்தக் கூடியது. இந்த வீடியோ அதனை அப்படியே திரையில் வெளிப்படுத்துகிறது.
சென்னை என்று கூறுவதைவிட மெட்ராஸ் என்று கூறும்போது நாம் மிகவும் இந்த நகரத்தோடு ஒன்றிப்போவதாக உணர்கிறேன். அதனால்தான் இதற்கு 'மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்' என்று பெயர் வைத்தேன்" என்கிறார்.
ஜூலை 25-ஆம் தேதி இரவு 9 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 57,000 பார்வைகளைக் கடந்துள்ளது. பல பின்னூட்டங்களும் தொடர்கின்றன.
பாலாஜி மகேஷ்வர், புகைப்படக் கலை மீது உள்ள ஈடுபாட்டால், மென்பொருள் வேலையை விட்டு வெளியேறி தற்போது ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். பாலாஜியின் இந்த வீடியோவுக்கு சென்னைவாசிகளின் வரவேற்பு இணையத்தில் குவிகிறது.
மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல் வீடியோ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT