Published : 27 Sep 2017 10:08 AM
Last Updated : 27 Sep 2017 10:08 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 12: மகளிரின் வலி தீர்க்கும் மகராசனம்

ஒரு வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், ஒன்பது வயதை தாண்டும்போது, அவள் எப்போது பெரியவள் ஆவாள் என்பதுதான் அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். பெண் பூப்படைந்த பிறகு, மாதவிடாய் என்பது, அடுத்த மாதமோ அல்லது அதற்கு அடுத்த மாதமோ வரும்.

அதற்குப் பிறகு அவளது உடல் 28 நாட்களுக்கு ஒருமுறை என மாதவிடாய்க்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதனால் அந்தப் பெண்ணின் கருப்பை மற்றும் கருக் குழாய் தயார் நிலைக்கு வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்த சுழற்சி சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருக்கும். இது ஆரோக்கியமானது அல்ல. அத்தகைய பெண்களின் கருக்குழாயில் அடைப்போ, அல்லது சினைமுட்டை, சினைப் பையில் ஏதாவது கோளாறு இருக்கவோ வாய்ப்பு உண்டு. இப்பிரச்சினை தன்னால் சரியாகிவிடும் என்றோ, திருமணம் ஆனால் சரியாகிவிடும் என்றோ அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் விட்டால், பின்னாளில் குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கும் வழி வகுத்துவிடும்.

ஒரு பெண் குழந்தை பெரியவளானதும் மாதாமாதம் அவளுக்கு முறையாக மாதவிடாய் வருகிறதா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, அக்குழந்தையின் தாய்க்கு இருக்கிறது. ஒரு பெண் பூப்படைந்ததில் இருந்து 23 வயதுக்குள், அதாவது அப்பெண்ணின் திருமண வயதுக்குள் மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்துவிட வேண்டும். சிலருக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியும் பாடாய்ப் படுத்தும்.

இதற்கு யோகாசனத்தில் தீர்வு இருக்கிறது. வயிற்று பகுதிக்கேற்ற பயிற்சிகளைச் செய்தால், மருந்து, மாத்திரைகள் இல்லாமலே சரிசெய்து விடலாம். வயிற்றுக்குத் தேவையான ஆசனம், ப்ராணாயாமம், முத்திரை பயிற்சிகளை செய்யும்போது வயிற்றுப் பகுதிக்கு அதிக அளவில் ரத்த ஓட்டம் சென்று அடைப்புகளைச் சரிசெய்து, மாதாந்திர சுழற்சிக்கு வழிவகுக்கும். மகராசனம், புஜங்காசனம், சஷங்காசனம், உஷ்ட்ராசனம் என்ற 4 ஆசனங்களை முறையாகச் செய்தால், மாதவிடாய் கால வயிற்று வலியைத் தடுக்கலாம்.

மகராசனம் எப்படி செய்வது?

மகரம் என்றால் முதலை. குப்புறப் படுத்துக்கொண்டு, சிறிய தலையணையை வயிற்றுப் பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை தலைக்கு முன்பு வைத்துக்கொண்டு இரு கால்களையும் நீட்டவும். பின்பு ஒவ்வொரு காலாக மடக்கி நீட்ட வேண்டும். பிறகு, குப்புறப்படுத்த நிலையிலேயே, இரு கைகளையும் தலைக்கு முன்பு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொண்டு, இரு கால்களையும் அகலமாக வைத்துக்கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். இதை செய்வதன் மூலம், முதலில் வலியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும். முடியாதவர்கள், தலையணை மேல் கால்களை வைத்துக்கொள்ளலாம். மூச்சை நன்றாக உள்இழுத்துவிட்டு, இரு கைகளையும் தொடைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். மூச்சைப் பொறுமையாக இழுத்து விட்டு, தலையை மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டே மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக குனிந்து மூக்கு, இரு முட்டிகளுக்கும் நடுவே இருப்பதுபோல வைக்க வேண்டும். இப்படி குனியும்போது வயிற்றுக்குள் இருக்கும் ஜீரண உறுப்புகள் கொஞ்சம் விலகி, கருப்பைக்கு ரத்த ஓட்டம் நன்றாக அதிகரித்து, வலி படிப் படியாக குறைவதை நன்றாக உணர முடியும்.

இந்த நிலையில் 10 விநாடிகள் அல்லது 2-3 முறை நன்றாக மூச்சை இழுத்துவிட்டு மெதுவாக நிமிர வேண்டும். இவ்வாறு 3-5 முறை செய்யலாம்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x