Published : 08 Oct 2017 11:00 AM
Last Updated : 08 Oct 2017 11:00 AM
நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் அடிப்படையானது முதுகெலும்பு. முதுகில் உள்ள 33 எலும்புகளும் தனித்தனி எலும்புகளின் கோர்வை. அந்த தனித்தனி எலும்புகளுக்கு நடுவே நார் திசுக்களால் ஆன குஷன் போன்ற ஜவ்வு உள்ளது. இதில் எப்போதுமே ஒருவித ஈரப்பதம் இருக்கும். இந்த ஜவ்வு, முதுகெலும் பில் ஏற்படக்கூடிய அதிர்வுகளை தாங்கக்கூடிய தன்மை உடையது. எலும்புகள் ஒன்றுக்கொன்று உரசாமல் இருக்கவும் இதுதான் உதவுகிறது. இந்த ஜவ்வு தேய்ந்து, எலும்புகளும் உராயத் தொடங்கும்போது, மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இந்த எலும்பு உராய்வுதான் ஸ்பான்டிலோசிஸ். இதற்கு மருந்து என்று எதுவும் கிடையாது. முதுகெலும்பில் மிகவும் தேய்ந்துபோன வட்டை (disc) எடுத்துவிட்டு, வேறு ஒன்றைப் பொருத்துவார்கள். அந்த நிலை வரைக்கும் போகாமல், ஆரம்ப நிலையில் முதுகுவலி வரும்போதே, சரியான பயிற்சி, ஆசனங்கள் மூலம் இதை சரிசெய்யலாம்.
உயரமான தலையணை உபயோகிப்பவர்கள், சமையலறை யில் சற்று உயரமான மேடையை உபயோகிக்கும் பெண்கள், கையைத் தூக்கி உயரத்தில் இருந்து பொருட்களை எடுப்பவர்களுக்கு முதுகுவலி வரும். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், கண்ணுக்கு நேராக இல்லாவிட்டாலும், படுத்துக்கொண்டே புத்தகம் படித்தாலும் கழுத்து, முதுகுவலி வர வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகளுக்கு 4-ம் மாதத்தில் இருந்து உடல் எடை அதிகரிக்கும்போது முதுகுவலி வரக்கூடும். பாலூட்டும்போது குழந்தைகளை சரியான கோணத்தில் வைத்துக்கொள்ளாத தாய்மார்களுக்கும் முதுகுவலி வரலாம்.
கழுத்து, முதுகு வலி இருப்பவர்கள் முதலில் ஒரு மருத்துவரைப் பார்த்து முதுகெலும்பை ஸ்கேன் செய்து, எந்த இடத்தில் வலி அதிகம் இருக்கிறது என்பதை தெளிவாகக் கண்டறிய வேண்டும். பிறகு, நல்ல யோக சிகிச்சை நிபுணரிடம் இதற்கான பிரத்யேகமான ஆசனங்களைக் கற்றுக்கொண்டு, யோகா செய்யலாம். கழுத்து, முதுகு வலிக்கு, ஆசனங்களைவிட கை, கால்களை நீட்டி, மடக்கிச் செய்யும் streching பயிற்சிகள் மிகவும் சிறந்தவை.
நிலை 1: சவாசன நிலையில் படுத்துக்கொண்டு, கால்களை அகலமாக வைத்து, கைகளை உடலைவிட்டு தள்ளிவைத்து, 9-15 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். இப்போது கைகளையும், கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவேண்டும். கண்களை மூடி பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். பிறகு மூச்சை இழுக்கும்போது, வலது காலை மெதுவாக மடக்க வேண்டும். மூச்சை விடும்போது காலை கீழே நீட்ட வேண்டும். இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும்.
நிலை 2: அடுத்து, மூச்சை இழுக்கும்போது வலது காலை பொறுமையாக மடக்க வேண்டும். மூச்சை விடும்போது, படத்தில் இருப்பதுபோல, வலது கால் முட்டி தரையில் இருக்குமாறு காலை கீழே வைக்க வேண்டும். இதே நிலையில் 30 வினாடிகள் இருந்து, மீண்டும் கால் முட்டியை நேராக்க வேண்டும். இடது காலையும் இவ்வாறு செய்ய வேண்டும். இதுபோல 3-5 முறை செய்யலாம்.
நிலை 3: அடுத்து, மூச்சை இழுக்கும்போது இரு கால்களை யும் மடக்க வேண்டும். மூச்சை விடும்போது இரு கால்களையும் விரிந்த நிலையில் வைக்க வேண்டும். முதுகு வலி இருக்கும்போது இப்பயிற்சியைச் செய்தால் 5-10 நிமிடத்தில் வலி குறைவதை நன்கு உணரலாம். தினமும் இப்பயிற்சியைச் செய்யவேண்டும். இதுபோல, முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள 240 வகையான இயக்கங்கள் இருக்கின்றன.
செய்யக் கூடாதவை
முதுகுவலி இருப்பவர்கள் அதிக மேடு, பள்ளங்களில் வண்டி அதிருமாறு இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லக் கூடாது. ஜாகிங், குனிந்து செய்யும் வேலைகள் செய்யக் கூடாது. கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. உயரமான தலையணை வைத்து படுக்கக் கூடாது. அதிக குளிர்ந்த, அதிக சூடான நீரில் குளிக்கக் கூடாது. கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக பல மணி நேரம் அமர்ந்திருக்கக் கூடாது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடந்துவிட்டு பிறகு வேலையைத் தொடரலாம்.
கழுத்து வலி இருந்தால், கழுத்தை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்துக்கும், பிறகு இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்துக்கும் பொறுமையாகத் திருப்பலாம். மேலிருந்து கீழே, கீழிருந்து மேலே பொறுமையாக அசைத்துப் பயிற்சி செய்யலாம். இப்பயிற்சிகள் கழுத்து, முதுகு வலிக்கு மிகவும் ஏற்றவை.
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT