Published : 16 Oct 2017 11:17 AM
Last Updated : 16 Oct 2017 11:17 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 28: தலைசுற்றலை போக்கும் யோகா பயிற்சிகள்

இதயத்தைவிட கூடுதலான பொறுப்புகள் கொண்ட உறுப்பு. இதைத்தான் நம் முன்னோர்கள் மிக எளிமையாக ‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்றார்கள். நம் உடலின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் உத்தரவிட்டு செயல்படுத்துவது மூளைதான். அதில் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செல்கள் இருக்கின்றன. இயற்கையின் படைப்பில் அதிநவீன கம்ப்யூட்டராக விளங்கும் மூளையில் ஏதேனும் பிரச்சினை கள் ஏற்பட்டால் வெர்டிகோ (தலை சுற்றல்), அம்னீஷியா (மறதி), பார்க்கின்சன், பக்கவாதம், எபிலப்ஸி (வலிப்பு நோய்) போன்ற பாதிப்புகள் ஏற்படு கின்றன.

இதில், வெர்டிகோ என்பது ஒருவிதமான தலைசுற்றல். மூளையில் இருந்து உடலின் பல பாகங்களுக்கும் எல்லாவிதமான உணர்வு அலைகளும் தண்டுவடம் வழியாக கட்டளைகளாகப் பிறப்பிக்கப்படுகின்றன. இப்படி உணர்வு அலைகள் கடத்தப்படும் போது ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், அது தலைசுற்றலாக மாறுகிறது. குறிப்பாக, தூங்கி எழும் போது அந்த அறையே சுற்றுவதுபோன்ற உணர்வும், நடக்கும் போது கை, கால்கள் எங்கோ இழுத்துக்கொண்டு செல்வது போல பேலன்ஸ் இல்லாமல் விழுந்து விடுவோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படும். சில சமயங்களில் இது சட்டென்று தானே சரியாகிவிடும். ஒரு சிலருக்கு அடிக்கடி, நீண்ட காலத்துக்கு இந்த பிரச்சினைகள் நீடிக்கும்.

பொதுவாக நடுத்தர வயதினருக்கு வெர்டிகோ வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் வெர்டிகோ பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பொறுமை அவசியம்

வெர்டிகோ சிக்கலைத் தீர்க்க சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. எழுந்து உட்காரும்போது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். தலையணையில் தலையை நன்கு உயர்த்தி வைத்துக்கொண்டு, காலுக்கு பக்கத்திலும் ஒரு தலையணையை வைத்து தூங்கலாம். குனிந்து பாத்திரங்களை எடுப்பது, வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, மிக உயரத்தில் நின்றுகொண்டு கீழே பார்ப்பது, அதிக அளவில் உடற்பயிற்சி என தலைக்கு அதிக சிரமம் தரும் செயல்களை வெர்டிகோ உள்ளவர்கள் செய்யவே கூடாது. வாகனம் ஓட்டுவதையும் தவிர்ப்பது நல்லது.

வெர்டிகோ பிரச்சினையை சரிசெய்துகொள்ள பல ஆசனங்கள் இருந்தாலும், தேர்ந்த யோகா பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர்களது மேற்பார்வை யில் செய்வதுதான் நல்லது. எழுந்து நின்று பயிற்சிகளைச் செய்தால் தலை சுற்றும் என்பதால், படுத்தபடி செய்யும் பயிற்சிகளை மட்டும் பின்பற்றலாம்.

எளிய பயிற்சிகள்

வெர்டிகோ பாதிப்பு உள்ளவர்கள் முதலில் சவாசனத்தில் படுத்து 15 - 20 முறை மூச்சை நன்றாக இழுத்து விடவேண்டும். தியானம், ஆதம் பிராணாயாமம், மத்தியம் பிராணாயாமம், ஆதியம் பிராணாயாமம், சுகப் பிராணாயாமம், நாடிசுத்தி பிராணாயாமம் ஆகியவற்றை அவசி யம் செய்ய வேண்டும். கபாலபாதி, தலைகீழ் ஆசனங்கள், சூர்ய நமஸ்காரம் செய்யக்கூடாது. தலைக்கு சிரமம் தராமல், படுத்துக்கொண்டு கை கால்களை மட்டும் அசைத்து செய்யும் வியாயமாஸ் என்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.

ரிலாக்ஸாக படுத்துக்கொண்டு இரு கால்களையும் அகலமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை உடலைவிட்டு தள்ளி வைத்து சவாசனத்தில் இருந்துவிட்டு, பிறகு இரு கால்களையும், கைளையும் சேர்த்து வைக்க வேண்டும். மெல்ல மூச்சை இழுக்கும் போது, வலது கையை தலைக்குப் பின்னால் எடுத்துச்செல்ல வேண்டும். பிறகு மூச்சை விடும்போது, கையை கீழே எடுத்துவர வேண்டும். இவ்வாறு இடது, வலது கைகளை 5 முறை மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

அடுத்து, வலது காலை பொறுமையாக மடித்து முழங்காலை மார்புக்கு அருகே கொண்டுவந்து, பிறகு பொறுமையாக நீட்ட வேண்டும். மூச்சை இழுக்கும்போது காலை மடக்க வேண்டும், மூச்சை விடும்போது காலை நீட்ட வேண்டும். இதேபோல, இடது காலை மடக்கி நீட்ட வேண்டும். இதை 5 முறை செய்ய வேண்டும்.

அடுத்ததாக, மூச்சை இழுக்கும் போது இரு கைகளை யும் தலைக்குப் பின் னால் எடுத்துச்சென்று தரையை தொட்டுவிட்டு, மூச்சை விடும்போது கீழே எடுத்துவர வேண்டும். இதுபோல 3 முறை செய்ய வேண்டும். பிறகு இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக தரையில் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை இழுக்கும்போது பொறுமையாக கைகளை மடக்காமல் நமஸ்கார முத்திரையில் நெஞ்சுக்கு நேராக வைக்க வேண்டும். மூச்சை விடும்போது கைகளைக் கீழே எடுத்துவர வேண்டும். இதை 3-5 முறை செய்யலாம்.

அடுத்து கைகளைப் பக்கவாட்டில் இருந்து அரைவட்டம் போட்டதுபோல எடுத்துச்சென்று தலைக்குப் பின்னால் நன்றாக strech செய்ய வேண்டும். பிறகு பொறுமையாக கையை கீழே இறக்க வேண்டும். பிறகு தலையை பொறுமையாக வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் என்று படுத்துக்கொண்டே 3 முறை திருப்ப வேண்டும். பிறகு, பொறுமையாக தலையை மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக 3 முறை செய்ய வேண்டும். பிறகு கால்களை மடக்கி, பிறகு மெதுவாக நீட்டவும். இப்பயிற்சிகளைத் தினமும் செய்தால் வெர்டிகோவை விரட்டலாம்.

- யோகம் வரும்...

எழுத்து: ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x