Published : 16 Oct 2017 10:58 AM
Last Updated : 16 Oct 2017 10:58 AM
ப
ஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே உலகை இயக்குகின்றன. இவற்றில் மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது காற்று. உடல் இயக்க அசைவை உறுதி செய்வதே சுவாசம். பிராணன் எனப்படும் மூச்சுதான் நம் உடம்பின் பிரதானம். மூச்சுக் காற்றை நாம் மூக்கால் இழுத்து, அது நுரையீரலுக்குச் சென்று அங்கு சுத்தமான ஆக்சிஜன் பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலந்து உடல் முழுக்க பரவுகிறது. மூக்கில் உள்ள சைனஸ் என்ற அறைக்குச் செல்லும் காற்று அங்கு கொஞ்சம் ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்த செயல்பாட்டில் காற்றின் சுத்தமான ஆக்சிஜன், ரத்தத்தில் கலக்கிறது. அதற்கு ஈடான கரிய மில வாயு மூக்கினால் வெளியேற்றப்படுகிறது.
நாம் சராசரியாக ஒருநாளுக்கு 21,600 தடவை மூச்சை இழுத்து விடுகிறோம். இது இயல்பாக, சீராகச் செல்லும்வரை சிக்கல் இல்லை. சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டால், சுவாசப் பிரச்சினையாக (wheezing) மாறி ஆஸ்துமாவில் கொண்டுவிடுகிறது. கிரேக்க மொழி வார்த்தையான Aazein என்ற சொல்லே ஆஸ்துமா என மருவியது. ‘ஆஸ்துமா’ என்றால் மூச்சு வாங்குதல் என்று அர்த்தம். “ மூச்சுக் குழாயில் மூச்சை இழுக்கும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, மூச்சை இழுக்க முடியாமல் அவஸ்தைப்பட்டாலோ, மூச்சு உள்ளே சென்று அது சரியான விகிதத்தில் ரத்தத்தில் கலக்கவில்லை என்றாலோ வரும் பிரச்சினை தான் ஆஸ்துமா” என்கிறார் நவீன மருத்துவத்தின் பிதாமகன் என போற்றப்படும் ஹிப்போகிரேட்டஸ்.
ஏன் வருகிறது? யாருக்கு வரும்?
நாம் உள் இழுக்கும் மூச்சில் தூசு அதிகம் கலந்து சுவாசம் தடைபடுவது அல்லது, மூக்கில் சரியாக வடிகட்டப்படாமல் மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணமாக மூக்கால் சுவாசிக்க முடியாமல் வாயால் சுவாசிக்கும் நிலை ஏற்படுவதே ஆஸ்துமாவுக்கான அடிப்படை.
தூசு, குப்பைக்கூளம், வாகனப் புகை ஆகியவற்றுக்கு மத்தியில் வெகுநேரம் இருப்பவர்கள், சுகாதாரமற்ற சூழலில் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம். மரபணு வழியாகவும் ஆஸ்துமா பரவுகிறது. நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்துகொள்வதை தவிர்ப்பது அவசியம். வீடு, அலுவலகம் என சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை உறை ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை துவைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏசி, ஃபேன் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். உணவு ஒவ்வாமையாலும் ஆஸ்துமா வரும்.
குளிர்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் இயல்பாக சுவாசிக்க முடியாமல் திணறுவார்கள். மார்பை யாரோ அழுத்திப் பிடிப்பதைப் போன்ற உணர்வு உண்டாகும். தொடர் தும்மல், மூச்சு இரைப்பு, இருமல் ஏற்படும். ஆஸ்துமா பிரச்சினை வந்தால், அதற்கான தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, நெபுலைசர் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தியே வாழ்க்கையைக் கடத்துவது ஆபத்தானது. தொடர்ந்து எடுக்கப்படும் மருந்துகள் உடலில் வேறு விதமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
மருந்து, மாத்திரைகள் இல்லாமலேயே யோகாசனங்களால் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் காலை நேரத்தில் மூக்கையும், வாயை யும் நல்ல துணியால் கட்டிக்கொண்டு ஓட்டப் பயிற்சியும், பின்னர் யோகாப் பயிற்சிகளும் செய்யலாம்.
சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டும் 7,000 ஆசனங்களை தந்துள்ளார் பதஞ்சலி முனிவர். கபாலபாதி, நாடிசுத்தி ஆகியவை மிகுந்த பயன் தரக்கூடியவை. யோகாசனங்களில் மத்ஸ்யாசனம், தனுராசனம், புஜங்காசனம், அர்த்த சலபாசனம், சலபாசனம் சிறப்பானவை.
கபாலபாதி எப்படி செய்வது?
முதலில் நேராக நிமிர்ந்து சுகாசனத்தில் அமரவேண்டும். மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து 3-5 முறை வெளியே விடவேண்டும். பின்னர், வாயை மூடிக்கொண்டு மூக்கால் வேகமாக மூச்சை வெளியே விடவேண்டும். அதாவது, நமக்கு எதிரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரே மூச்சில் அதை அணைக்க வேண்டும் என்றால், வேகமாக வாயால் ஊதி அணைப்போம். அதேபோல, வாயை மூடிக்கொண்டு மூக்கால் வேகமாக மூச்சை வெளியே விடுவதுதான் கபாலபாதி. ஒருமுறை நன்றாக மூச்சை இழுத்துக்கொண்டு 10-15 முறை மூச்சை வேகமாக விட வேண்டும். முகத்தை சுழிப்பது, உடம்பு அதிர்வது ஆகியவை இல்லாமல், வேகமாக மூச்சை வெளியே விடுவது முக்கியம்.
நாடி சுத்தி பிராணாயாமம்
நம் உடலில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. அவற்றை சுத்தம் செய்வதே நாடி சுத்தி பிராணாயாமம். முதலில் சுகாசனம், அர்த்த பத்மாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவேண்டும். இடது கை தியான முத்திரையில் (கட்டை விரலை ஆள்காட்டி விரல் தொட்டிருக்கும். மற்ற விரல்கள் நீட்டியிருக்கும்.) வைத்துக்கொள்ள வேண்டும். வலது கை விஷ்ணு முத்திரையில் (ஆள்காட்டி விரல், நடு விரலை மட்டும் மடித்து வைத்து, மற்ற விரல்கள் நீட்டியிருக்கும். வலது மூக்கை மூடி, இடது மூக்கால் மூச்சை இழுத்து வெளியில் விட வேண்டும். இதை வலது இடது என்று மாற்றி மாற்றி 6 முறை செய்ய வேண்டும். இது சுவாசப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைத் தரும்.
- யோகம் வரும்...
எழுத்து: ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT