Published : 24 Sep 2017 10:38 AM
Last Updated : 24 Sep 2017 10:38 AM
கு
ழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்குகிறது நம் வாழ்க்கைப் பயணம். முன்பு கூட்டுக் குடும்பத்தில் வாழப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஓடியாடி விளையாட அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், விடுமுறைக்கு வரும் அத்தை, மாமன் குழந்தைகள் என துள்ளித் திரிந்து, தங்களை அறியாமல் உடலுக்கு நல்லதொரு உறுதி யைப் பெற்றார்கள். மன ஆரோக்கியத்துக்கு தாத்தா பாட்டிகள் கூறும் கதைகள் என அற்புதமான காலகட்டம்.
ஆனால், இப்போது பல குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அப்பா, அம்மாவைத் தாண்டி வேறொரு முகமே பார்த்தறியாமல் வளர்கின்றனர். பெற்றோரும் குழந்தைகளை பந்தயக் குதிரைகளாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். போட்டி நிறைந்த உலகில், கரும் பின் சக்கையாகப் பிழியப்படுகிறார்கள் குழந்தைகள். இதோ இன்னும் சில மாதங்களில் 10, 12-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கடும் நெருக்கடி தொடங்கிவிடும்.
அளவுக்கு அதிகமாக அவர்களது மூளையில் திணிக்கப்படும் பாரங்களால் நிறைய குழந்தைகள் இப்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்களுக்கு யோகாப் பயிற்சிகளைப் பயிற்றுவிப்பது நலம் தரும்.
படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பலரும் சொல்லும் ஒரே விஷயம் இதுதான்.. ‘‘பிள்ளைகளுக்குப் படிப்பில் கவனம் செல்வதில்லை!’’
அதற்கு எந்தவிதமான பயிற்சிகள் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
இந்தப் பயிற்சிகளுக்கு அவர்களை நாம் எப்படி தயார்படுத்துவது? முதலில், குழந்தைகளுக்கு இரவில் சீக்கிரம் படுக்கச் சென்று, காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் உறங்கி, உரிய நேரத்தில் எழுந்தாலே பல நன்மைகள் உண்டாகும் என்பது நாம் அறிந்ததே. 6 மணி நேர நல்ல தூக்கத்துக்குப் பிறகு எழும் குழந்தையின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியோடு இருக்கும். அந்த நேரத்தில் சுற்றுப்புறச் சூழலின் எந்த இடையூறும் இல்லாமல், நிசப்தமான, சாத்வீக மான சூழலில் படிக்கும் எந்த ஒரு விஷயமும் மனதில் நன்கு பதியும்.
தியான முத்திரை
அதிகாலையில் குழந்தைகள் எழுந்தவுடன் குளிக்க முடிந்தால் நன்று. இல்லாவிட்டால், முகத்தை மட்டுமாவது கழுவி, கை கால்களை சுத்தப்படுத்திக் கொண்டு சூடாக ஏதாவது குடிப்பது நலம். பின்னர் அவர்கள் சுகாசனத்தில் அமரட்டும். கால்களை சாதாரணமாக வைத்துக்கொண்டு, சம்மணமிட்டு அமர் வதுதான் சுகாசனம். ஆள்காட்டி விரல் - கட்டை விரல் நுனியை மட்டும் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டியவாறு தியான முத்திரை யில் கைகளை வைத்துக் கொள்ளவும். கண்களை மூடி, 15 முறை சுவாசத்தை நன்றாக இழுத்துவிட வேண்டும்.
இதனால் அவர்களது சுவாசம், ரத்த ஓட்டம் சீராகும். மூளையும் புத்துணர்ச்சி பெறும்.
சிந்தனை நன்றாக இருந்தால் சொல்லும், செயலும் நன்றாக அமையும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது, மனதை நன்கு ஆரோக்கியப்படுத்தும். ‘தேர்வுக்கு நான் நன்றாகப் படித்திருக்கிறேன். எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை தெரியும். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெறுவேன்’ என்று 10-15 முறை நினைத்துக்கொள்ள வேண்டும். இந்த நினைப்பே உடல் முழுவதும் நேர்மறையான எண்ண அலைகளைத் தோற்றுவிக்கும்.
நன்கு படித்ததோடு, நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் இணையும்போது, நல்ல புத்துணர்ச்சி, தெளிவு கிடைக்கும். பதற்றம், பரபரப்பு குறையும். நிதானமாக யோசித்து, விடை எழுத இயலும்.
கவனச் சிதறல்கள் இல்லாமல், படிப்பில் முழுக் கவனம் செலுத்த குழந்தைகள் எந்தவிதமான ஆசனங்கள் செய்யலாம் என்பதை, அடுத்து பார்க்கலாம்.
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT