Published : 24 Jul 2014 11:51 AM
Last Updated : 24 Jul 2014 11:51 AM
சிவராமன் - இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 36 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இங்குள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 169. அத்தனையும் சிவராமன் வழிகாட்டுதலில் இந்தப் பள்ளி மாணவர்கள் பார்த்துப் பார்த்து நட்டு வளர்த்தவை.
சிட்டம்பட்டிக்கு 7 கிலோ மீட்டரில் மருதூர் கிராமம். இங்கிருந்து 60 குழந்தைகள் சிட்டம்பட்டிக்கு படிக்க வருகிறார்கள். காலை ஏழு மணி பேருந்தை விட்டுவிட்டால் பள்ளிக்கு இவர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் ஆறரை மணிக்குத்தான் மருதூருக்கு செல்லும் பேருந்து வரும். அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் மாலையிலும் இந்தக் குழந்தைகள் நடந்துதான் வீடு திரும்ப வேண்டும்.
ஊர் செல்லும் வரை சாலையில் இரண்டு பக்கமும் நிழலுக்கு ஒதுங்கக் கூட மரம் இல்லாத நிலை முதலில் இருந்தது. ஆனால், இப்போது இந்தச் சாலையில் ஐம்பது மரக் கன்றுகள் இடுப்பளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. இது எப்படி? விளக்குகிறார் சிவராமன்.
‘‘மருதூர் சாலையில் இரண்டு பக்கமும் மரங்களை நட்டு வளர்ப்பதற்காக, ‘ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி’ என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்காக 6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மட்டுமே பயன்படுத்தினோம். இதன்படி மருதூரைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஐம்பது செடிகளை ஒரு வருடத்துக்கு முன்பு கொடுத்தோம். அதை அவர்களே மருதூர் சாலையில் தங்களுக்குப் பிடித்தமான இடத்தில் நட்டார்கள்.
ஒவ்வொரு மாணவனும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வந்து, தாங்கள் நட்டு வைத்த மரக் கன்றுக்கு ஊற்ற வேண்டும். அதேபோல் மாலையில் வீடு திரும்பும்போதும் பள்ளியிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய் ஊற்ற வேண்டும். மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிந்ததும் அவர்கள் பராமரித்து வந்த கன்றுகளை அடுத்து வரும் மாணவர்கள் பராமரிக்க வேண்டும். காட்டுக் கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பூமியை வெப்பமடையச் செய்கின்றன. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக காட்டுக் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியிலும் எங்களது மாணவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தினத்தையொட்டி ஜூன் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் எங்கள் மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தோம். யார் அதிகமான காட்டுக் கருவேல மரச் செடிகளை வேருடன் பிடுங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு கொடுப்பதாக அறிவித்திருந்தோம். 3 நாட்களில் 23 மாணவர்கள் சேர்ந்து 1,54,031 கருவேல மரக் கன்றுகளை வேருடன் பிடுங்கிக் கொண்டு வந்தார்கள். பழத்திலிருந்து நேரடியாக நாம் எடுக்கும் விதைகளை விடவும் பறவைகள் தின்று போடும் விதைகளுக்கு வீரியம் அதிகம்.
அதனால், எங்கள் பள்ளிக்கு பறவைகளை வரவைப்பதற்காக பள்ளியின் மேல் கூரையில் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்திருக்கிறோம். மாணவர்கள் கொடுக்கும் சிறுசேமிப்புக் காசிலிருந்து தானிய வகைகளை வாங்கி வந்து மேல் கூரையில் போட்டு வைப்போம். பறவைகள் வந்து போகும் இடத்தில் வேப்பம் பழம் உள்ளிட்ட பழங்களை நாங்களே போட்டு வைப்போம்.
புளி, வேம்பு விதைகளை சேமித்து வைத்திருந்து மழைக் காலங்களில் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு புறம்போக்கு நிலங்களில் தூவச் சொல்லுவோம். பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள் அந்த நாளில் இனிப்புக்குப் பதிலாக மரக்கன்றுகளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
எங்கள் பள்ளிக்குள் இனி மரங்கள் வைக்க இடமில்லை. அதனால், சிட்டம்பட்டி கிராமத்துக்குள் மரங்களை நட தீர்மானித் திருக்கிறோம். அங்கே புதர் மண்டிக் கிடக்கும் தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்து குளக்கரையில் பனைக் கன்றுகளை நடப்போகிறோம்.
பனை மரங்கள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளுக்கு இணையானவை. தெப்பக் குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் எங்கள் பள்ளிக்கு குடி தண்ணீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் இருக்கும். ஆக, தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்வதில் பொதுநலம் கலந்த எங்கள் சுயநலமும் இருக்கிறது’’ சிரித்தபடி சொன்னார் சிவராமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT