Published : 05 Oct 2017 10:49 AM
Last Updated : 05 Oct 2017 10:49 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 19:உடலுக்கு வலிமை தரும் ஹலாசனம்

குழந்தைப் பேறு இல்லாமல் பல்வேறு சிகிச்சை முறைகள், செயற்கை கருவூட்டல் போன்றவற்றை நாடும் தம்பதியர் பலரைக் காணமுடிகிறது. குழந்தைப் பேறு என்பது பெண்ணை மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. இயற்கையாகவே ஓர் ஆண், நல்ல ஆரோக்கியமான குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்றால், அவருக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொடர்ச்சியாக 10-12 மணி நேரம் ஏசி அறையில் வேலை செய்வது, சத்துக் குறைபாடு, மைதா சேர்க்கப்பட வெளிநாட்டு உணவு வகைகளை அதிகம் உண்பது, வண்டியில் அதிக தொலைவு சுற்றுவது போன்றவை முக்கிய காரணங்கள். புகை, மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் இத்தகைய குறைபாடுகள் நேரலாம். யோகாப் பயிற்சியின் மூலம் இதற்கு தீர்வு காண முடியும்.

இத்தகைய குறைபாடுகள் வராமல் இருக்க, முதலில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியம். நல்ல ஆரோக்கியத்துக்கு முதலில் தேவைப்படுவது 6-8 மணி நேரத் தூக்கம். இரவில் கண் விழித்து டிவி பார்ப்பது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இரவு 10.30 மணிக்குள் படுத்து, அதிகாலை 4.30 மணிக்கு எழுவதற்குப் பழக வேண்டும். அதிகாலையில் எழுந்து ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஆரோக்கியமான, சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். ஆணின் வாழ்க்கையில் 25-40 வயது முக்கியமான காலக்கட்டம். அப்போது, உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்டப் பயிற்சிக்குப் பிறகு, யோகாப் பயிற்சியில் சூர்ய நமஸ்காரம் செய்யலாம். மத்ஸ்யாசனம், கந்தராசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், பவன முக்தாசனம் போன்ற ஆசனங்களும் நல்லது.

பிராணாயாமத்தில் நாடி சுத்தி, பஸ்திரிகா, உஜ்ஜயி போன்றவை நல்லது. பந்தாக்களில் மூலாதார பந்தாவும், முத்திரையில் வஜ்ரொளி முத்ரா, அஸ்வினி முத்ரா ஆகியவை சிறந்த பலனைக் கொடுக்கும். பொதுவாக, ஆசனங்கள் செய்யும்போது, மூச்சுப்பயிற்சி மற்றும் முத்ராக்கள் என கைகளால் செய்யக்கூடிய, பலவித சக்திகளைக் கொடுக்கக்கூடிய பயிற்சிகளையும் செய்ய வேண்டும். பந்தாக்களைச் செய்யும்போது, உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதால், உடல் புத்துணர்ச்சி யோடு இருக்கும்.ஹலாசனம், கந்தராசனம், அர்த்த சந்த்ராசனம், திரிகோணாசனம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில், ஹலாசனம்.

ஹலாசனம்

‘ஹலா’ என்றால் ஏர் கலப்பை என்று பொருள். ஏர் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த ஆசனத்துக்கு ஹலாசனம் என்று பெயர். எப்படி செய்வது ?

முந்தைய தொடர்களில் பார்த்தது போல முதலில் விபரீதகரணி, பிறகு சர்வாங்காசனம் செய்துவிட்டு, தொடர்ந்து ஹலாசனம் செய்ய வேண்டும்.

நேராக படுத்துக்கொண்டு கை, கால்களை அகன்ற நிலையில் வைக்க வேண்டும். மூச்சை 9-15 முறை நன்றாக இழுத்து விடவேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைத்து, கைகளைத் தொடைக்கு அடியில் கொண்டுவந்து, இரு கால்களையும் 90 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும். பாதங்கள் கூரையை பார்த்தபடி இருக்க வேண்டும்.

இரு கால்களையும் மெதுமெது வாக உயர்த்த, இடுப்பு பகுதியும் தானாக மேலே உயரும். இரு கைகளால் இடுப்பு பகுதியை நன்றாக பிடித்துக் கொண்டு, கால்களையும், இடுப்பையும் நன்றாக உயர்த்தி, சர்வாங்காசனத்துக்கு வர வேண்டும். உடலை நன்கு உறுதியாக வைத்துக்கொண்டு, பொறுமையாக கால்களை மெதுவாக பின்பக்கமாக இறக்கி, (படத்தில் காட்டியவாறு) தலைக்குப் பின்னால் கொண்டுவர வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக இரு கால்களையும் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த நிலையில் 3-5 முறை மூச்சை இழுத்துவிட்டு, அல்லது 10 எண்ணிக்கை முடித்து விட்டு பொறுமையாக கைகளையும் இடுப்பையும் கீழே இறக்கிவிட்டு, பொறுமையாக கால்களையும் கீழே இறக்க வேண்டும். பின் கைகளையும் கால்களையும் தளர்வாக வைத்து ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம்.

கால்களைப் பின்பக்கமாக கொண்டுவந்து, தரையைத் தொட இயலாவிட்டால், இன் னொரு படத்தில் காட்டியுள்ளதுபோல, தலையை ஒட்டியவாறு கொண்டுவந்து மடித்து வைத்துக் கொள்லாம்.

ஹலாசனத்தை யாரெல்லாம் செய்யக்கூடாது? எந்த விதமான வழிமுறைகள் அவசியம் என்பதை நாளை பார்க்கலாம்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x