Published : 03 Oct 2017 09:39 AM
Last Updated : 03 Oct 2017 09:39 AM
காந்தியின் அடையாளம் எது?
கா
ந்தி பிறந்த தினம் அன்று வெளியான ‘காந்தியின் தூய்மை இந்தியா எப்படி இருக்க வேண்டும்?’ என்ற தலையங்கம் மிக அருமை. இன்றைய தினம் நாடு மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து வெகு தூரம் விலகிப்போய்க்கொண்டிருப்பது வருத்தமான உண்மை. காந்தியின் கோட்பாடுகளான மதச்சார்பின்மை, அறவழிகள் மற்றும் சுயசார்பு சிந்தனை போன்றவை காற்றில் பறக்கவிடப்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த விதமான அதிகாரமும் வழங்கப்படாமல் உள்ள சூழ்நிலை நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்பதை தற்போதைய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாநிலங்களின் அதிகாரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுவது கவலையளிக்கிறது. சமத்துவமான இந்தியாவை ஏற்படுத்துவதே நாம் காந்திக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.
-ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.
இதுதான் நினைவைப் போற்றுவதா?
நி
னைவுச்சின்னம், சிலை இவற்றை அமைப்பதில் எந்தவித அழகுணர்வும் இல்லாமல் கடமைக்குச் செய்வதற்கு நம்மை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது என்பதற்குச் சமீபத்திய உதாரணம், சிவாஜி கணேசனுக்காக அமைக்கப்பட்ட மணிமண்டபம். மணிமண்டபத்தின் உட்புறத்தில் திருவிழாக்களில் செய்தித் துறை சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி போன்று புகைப்படங்களை மாட்டியுள்ளார்கள். ஆங்காங்கே சிவாஜி நடித்துச் சிறப்பித்த நாயகர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., அப்பர் என்ற நூற்றுக்கணக்கான வேடங்களில் சிலவற்றை சிலையாக வடித்திருக்கலாம். நடிப்புக்கலை பற்றிய புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றை உள்ளே நிறுவியிருக்கலாம். ஒளி, ஒலிக்காட்சி அமைத்திருக்கலாம். அவர் நடித்த திரைப்படங்களின் முக்கியக் காட்சிகளை அன்றாடம் திரையிட ஒரு சிறு திரையரங்கம் அமைத்திருக்கலாம். நாடக அரங்கம் ஒன்று அமைத்துக் குறைந்த வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருக்கலாம். இப்படி சிவாஜியின் நினைவைப் போற்றும் எந்த ஒரு விஷயமும் அங்கு அமைக்கப்படாதது மிகுந்த வருத்தத்தைத் தருவதாக உள்ளது. கடற்கரையிலிருந்து அகற்றிய சிலையை இங்கே நிறுவியதுதான் ஒரே ஆறுதல்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
பெயர்ப் பட்டியல் அவசியம்
ர
யில் பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பட்டியலை (கன்பர்மேஷன் சாட்) ஒட்டும் நடைமுறையைக் கைவிடும் முடிவுக்கு இந்திய ரயில்வே வாரியம் வந்திருக்கிறது. சோதனை அடிப்படையில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து புறப்படும் ரயில்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள். காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்கு உதவி புரியவே இத்திட்டம் என்கிறார்கள். நோக்கம் நல்லதுதான் என்றாலும், இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். ரயிலில் பயணிப்பவர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு, கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு பயணச்சீட்டுப் பரிசோதகர் வரும் வரையில் கொஞ்சம்கூட நிம்மதியே இருக்காது. பேருந்தைப் போல நினைத்த இடத்தில் இறங்கி, வேறு வண்டியில் பயணிக்க முடியாதது ரயில் பயணம். என்னைப் போன்ற முதியவர்களின் மனநிலையைக் கவனத்தில்கொண்டு இந்த முடிவை ரயில்வே கைவிட வேண்டும்.
- கு.கணேசன், மதுரை.
யோசிக்க வேண்டிய விஷயங்கள்
க
டந்த ஐந்து ஆண்டுகளில் 21, 622 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை (செப்.27) வாசித்தேன். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் தொடங்கி, தேசியக் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் வரையில் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் குழந்தைத் தொழிலாளர்கள் முறை தொடர்கிறது என்றால், பிரச்சினைக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்பதே பொருள். பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் சென்று நாடோடி வாழ்க்கை நடத்துவோரின் குழந்தைகள் ஒரே வருடத்தில் வெவ்வேறு ஊர்களில் படிப்பைத் தொடர இங்கே வாய்ப்பு இருக்கிறதா? இதுபோன்ற குழந்தைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான தொழிலைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புடன் கூடிய எளிய கல்வியை நாம் வழங்குகிறோமா?
- எஸ்.பரமசிவம், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT