Published : 10 Oct 2017 09:07 AM
Last Updated : 10 Oct 2017 09:07 AM
விவசாயிகளுக்கு உதவுங்கள்!
அ
க்.5 அன்று வெளியான ‘வெறும் எண் விளையாட்டா வானிலை அறிக்கை?’ தலையங்கம் அதிகம் பேசப்படாத பிரச்சினையை அலசியிருக்கிறது. விவசாயக் காப்பீட்டுத்திட்டம் நடைமுறையில் இருப்பதால், இந்த ஆண்டு மழை எப்படி, எவ்வளவு பெய்யும் என்பதை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது அவசியம். மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட சரியாகச் சொல்ல வேண்டும். இதைத் தலையங்கம் வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை மையம் என்றே அழைக்கப்படுகிறது. அதன் செயல்பாடும் அப்படித்தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று மிகப்பெரிய நிலப்பரப்பிற்கு தோராயமான வானிலை முன் அறிவிப்பைச் சொல்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், சென்னையில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று துல்லிய அறிவிப்பு தருகிறார்கள். இந்த மனப்போக்கு மாறாதவரையில், ‘சூரக் கணினிகளே’ (சூப்பர் கம்ப்யூட்டர்) வந்தாலும் விவசாயிகளுக்குப் பயன் இருக்காது.
-ரோஸ்லின், தேவகோட்டை.
டெங்குவும் உள்ளாட்சியும்
டெ
ங்கு குறித்த மருத்துவர் கு.கணேசனின் பேட்டி அருமை. டெங்குக்கு என்று தனி சிகிச்சை இல்லை என்ற உண்மையை கூறியிருப்பதோடு, டெங்கு பரவுவதற்கு முக்கியமான காரணம் திடக்கழிவு மேலாண்மை சரியில்லாததே என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நான் பேரூராட்சி உறுப்ப்ராக பணியாற்றியவன். அப்போது திடக்கழிவு மேலாண்மை குறித்து அன்றாடம் துப்புரவுப் பணியாளர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. துரிதமாகவும் செயல்பட்டார்கள். ஆனால் இன்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு குறித்து கவலை இல்லை. பல ஊர்களில் தெருஓரங்களில் குப்பைகள் அங்காங்கே குவிந்து வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, டெங்கு கொசுகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
-எம்.கபார், பேரூராட்சி உறுப்பினர், மதுக்கூர்.
வாய்ஜாலமும் பொருளாதாரமும்
அ
க். 9 அன்று வெளியான 'பண மதிப்பு நீக்கம் எனும் பாவச்செயல்' கட்டுரை படித்தேன். பல உயிர்களை பலி வாங்கி, பசி பட்டினியில் பலரை பரிதவிக்க வைத்த காரணத்தால் இதை பாவச்செயல் என கட்டுரையாளர் வர்ணிப்பது சரியே. 'மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்துவது' என்று கிராமங்களில் கூறுவார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அப்படித்தான் சொல்ல வேண்டும். பண மதிப்பு நீக்கத்தால் கள்ளப்பணம், கறுப்புப்பணம் ஒழியாதது மட்டுமல்ல, புதிய நோட்டுகளை அச்சடித்ததால் ரூ.8,000 கோடி கூடுதல் செலவானது எனும் தகவல் போதும் இந்த நடவடிக்கையின் தோல்வியைச் சொல்ல!
-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்
உடல் உறுப்பு தானம்
ம
ருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்தவர்களால் தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள், பெரும்பாலும் பணக்கார நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்குமே சென்றுசேர்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர் கிறது. பணக்காரர்களோ, ஏழைகளோ அனைவரின் உயிருக்கும் மதிப்பு ஒன்றுதான். காத்திருப்போர் பட்டிலில் முன்னிருப்பவர்களுக்கு உறுப்புகளை வழங்குவதுதானே சரியான நடைமுறை?
-தீனதயாளன், திருப்பரங்குன்றம்.
வரலாற்றின் இழப்பு
அ
க்.9-ல் வெளியான, ‘என்றென்றும் நாயகன் சே குவாரா’ கட்டுரை படித்தேன். அவர் நினைத்திருந்தால் கியூபாவிலேயே ஒரு தலைவராக வாழ்ந்தருக்க முடியும். ஆனால், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பொலிவியா சென்றார். சுட்டுக்கொல்லப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் ஏகாதிபத்தியங்களுக்கெதிரான பேருரையை அவர் நிகழ்த்தியிருப்பார். வரலாறு அந்த வாய்ப்பை இழந்துவிட்டது.
-என்.பகத்சிங், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT