Published : 26 Oct 2017 10:28 AM
Last Updated : 26 Oct 2017 10:28 AM
ஒழியட்டும் கந்துவட்டிக் கொடுமை!
க
ந்துவட்டிக் கொடுமை தொடர்பாக வெளியான தலையங்கமும் கட்டுரையும் மிக முக்கியமானவை. வாழ்க்கையில் பணம் முக்கியம்தான். ஆனால், அது வாழ்க்கையையே அழித்துவிடும் அளவுக்கு நமது சமூகச் சூழல் இருக்கிறது என்பது ஜீரணிக்கவே முடியாதது. கந்துவட்டி காரணமாகப் பல குடும்பங்கள் அழிந்திருக்கின்றன. அபாயம் இருக்கிறது என்று தெரிந்தும் வேறு வழியின்றி இதில் சிக்கிக்கொள்கிறார்கள் ஏழை மக்கள். நேர்மையற்ற வழிமுறைகளைப் பின்பற்றி அப்பாவி மக்களை ஏமாற்றும் கும்பல்களுக்கு முடிவு கட்டுவது அரசின் கடமை.
- ராஜா முத்து, மின்னஞ்சல் வழியாக…
‘சின்ன’ நம்பிக்கை
இ
ரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதிமுகவினரின் நம்பிக்கை பொய்யானது. எம்ஜிஆரே அச்சின்னத்தில் போட்டியிட்டு மக்களவைத் தேர்தலில் வெறும் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது.
ஜெயலலிதாவும் இருமுறை தோல்வியைத் தழுவினார். எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் நல்லாட்சியே வெற்றியைத் தரும். இன்று நடைபெறும் ஆட்சி மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவருகிறது. இந்தச் சூழலில் சின்னத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பது அதீத நம்பிக்கை!
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
கட்டிடமும் சாட்சிதானே?
நா
கை மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்து எட்டு தொழிலாளர்கள் மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நீதி விசாரணையோ, நீதிமன்ற வழக்கோ எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவசரம் அவசரமாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் எஞ்சிய பகுதி இடிக்கப்பட்டது சரிதானா? இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கைப்பதிவு செய்துள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது. எட்டு பேர் உயிரைப் பலி வாங்கிய கட்டிடமும் ஒரு சாட்சிதானே?
-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
சீன மாற்றம்
அ
க்.25-ல் வெளியான, மா சே துங் வரிசையில் அரசியலமைப்புச் சட்டத்தில் ஜி ஜின்பிங் பெயரும் சேர்க்கப்பட்டுள்ள செய்தியைக் கண்டேன். சீனாவின் தனிப்பண்புகளை கொண்ட சோஷலிசம் என்ற கொள்கையும் சீன அரசியலைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சீனர்கள் தங்கள் சட்டத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஒற்றைக்கட்சி முறையானது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகப் புரியவைக்கிறது. கடுமையான அரசு நிர்வாகத்தின் மத்தியிலும் சீனர்கள் அதிசயங்களைச் செய்துள்ளனர். ஆயினும், ஜனநாயகத்தை அனுபவிக்கும் சுதந்திர மனிதர்கள் மிகச்சிறந்த பணிகளைச் செய்ய முடியும்.
சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி, தூத்துக்குடி.
நம்பிக்கையளித்த தொடர்!
வ
ணிகப் பக்கங்களில் வெளியாகி அண்மையில் நிறைவு பெற்ற ‘தொழில் முன்னோடிகள்’ தொடர் வர்த்தக உலகத்தின் வெற்றிகள் குறித்து எனக்குள் நல்ல பல புரிதல்களை உருவாக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தியின் எளிமையான எழுத்தும், அவர் எடுத்துச் சொன்ன சாதனையாளர்களின் வரலாறும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கியது. தொழில் துறையில் இருக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேறும் உத்திகள் போன்றவற்றை இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் போலவே முன்னேறத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு இதுபோன்ற தன்னம்பிக்கைத் தொடர்களை ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து அளிக்க வேண்டும்!
-வே. பாண்டுரங்கன், சென்னை - 17
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT