Published : 29 Jul 2014 02:05 PM
Last Updated : 29 Jul 2014 02:05 PM
துருக்கியை ஐரோப்பாவின் நோயாளி என்று குறிப்பிடுவார்கள். அதுபோல, எனது ராமநாதபுரம் தொகுதியின் நோயாளியாக இருக்கும் தனுஷ்கோடி மற்றும் அங்கு வாழும் கடைக்கோடி தமிழரின் வாழ்நிலை குறித்த அருமையான பதிவுக்காக 'தி இந்து'வுக்குத் தொகுதி மக்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றி.
'நீர்… நிலம்… வனம்!' தொடர் கட்டுரையில், 'தனுஷ்கோடி மக்கள் - ஒரேயொரு குடிநீர்க் குழாய் வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு ஜீப் வசதி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடவே, 'இவற்றையெல்லாம் நிறை வேற்றக்கூடப் பிரதமர் மோடியோ, முதல்வர் ஜெயலலிதா வோதான் வர வேண்டுமா? மாவட்ட ஆட்சியராலும் சட்டப்பேரவை உறுப்பினராலும் முடியாதா?' என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர். 'தி இந்து' கட்டுரையின் தொடர்ச்சியாக ஏராளமானோர் நேரிலும் தொலைபேசியிலும் என்னைத் தொடர்புகொண்டு கேட்கும் நிலையில், தனுஷ்கோடி மக்களுக்காக அவர்களது பிரதிநிதி என்ற முறையில் நான் செய்துள்ள பணிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில், தனுஷ்கோடி அழிவுக்குப் பின் ஐம்பதாண்டு கால வரலாற்றில், மக்கள் பிரதிநிதி ஒருவர் (எம்எல்ஏ அல்லது எம்பி) அங்கு சென்று மக்கள் குறைகளைக் கேட்டறிந்தது, நான்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ்கோடி பள்ளிக்குச் சென்றபோது, அங்குள்ள நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது.
எதிர்காலச் சந்ததியினரின் நலனைக் கருத்தில்கொண்டு முதலில், பள்ளிக்கூடம் பிரச்சினையைக் கையில் எடுத்தேன். தனுஷ்கோடி அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவும் குறைகளைப் பற்றி 2013 பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தேன். அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கினேன்.
பள்ளிக்கூடத்துக்குச் சூரிய சக்தி மின்வசதி, மேற்கூரை சேதம் அடைந்து மோசமான நிலையில் இருந்த பள்ளிக் கட்டிடம் சீரமைப்பு, பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர், கழிப்பறைகள், குடிநீர் வசதி இவ்வளவு வசதிகளும் பள்ளியில் செய்யப்பட்டன. மேலும், பள்ளியின் 7-ம், 8-ம் வகுப்பு மாணவர் களுக்குச் சத்துணவு ஒதுக்கீடு இல் லாத நிலையை அறிந்து, சத்துணவு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன்.
உறுதி அளிக்கிறேன்
இதேபோல, 'தி இந்து' கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதற்கு ஜீப் வசதிக்காக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். இப்போது 'தி இந்து'விடம் மக்கள் வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தே குடிநீர்க் குழாய் வசதியும் செய்துதரப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
அதேசமயம், சாலை - பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷ்கோடிக்குச் சாலை - பஸ் வசதியில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கடந்த ஆண்டே சட்டப்பேரவையில் பேசினேன். அதேபோல, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் தொடர்ந்து அரசை வலியுறுத்துவேன். ஆனால், இந்தக் கோரிக்கைகளையெல்லாம் சட்டமன்ற உறுப்பினரால் பரிந்துரைக் கவும் வலியுறுத்தவும் மட்டுமே முடியும். அரசுதான் நிறைவேற்ற முடியும். ஆகையால், முதல்வர் இந்தக் கோரிக்கைகளை நிறை வேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தனுஷ்கோடி பற்றி 'தி இந்து' தரும் தகவல்களின் அடிப்படையிலும் அப்பகுதியில் வாழும் மக்களின் நலனுக்காக நான் மேலும் உழைப்பேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- எம்.எச். ஜவாஹிருல்லா,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT