Published : 31 Oct 2017 09:57 AM
Last Updated : 31 Oct 2017 09:57 AM
நடுநிலைமைக்கு மறுபெயர் ‘தி இந்து’
தி
ராவிட இயக்கம் பற்றியும் திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் அவர்களுடைய பங்களிப்பின் பொருட்டுப் பேசும் கட்டுரைகளும் பேட்டிகளும் ‘தி இந்து’வில் வெளிவருவது நல்ல விஷயம். ஒரு பக்கத்தில் யோகேந்திர யாதவ் எழுதிய ‘கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி’ (அக்.30) எனும் கட்டுரை வெளியாகியிருக்கும் நிலையில், அதே நாளில் இன்னொரு பக்கம் மணா எழுதிய ‘டெங்கு மரணங்கள்: மறைக்கப்படும் உண்மைகள்!’ கட்டுரை, கடந்த காலத்தில் தமிழகத்தின் பல நகரங்களிலும் ‘லெப்டோபைரோசிஸ்’ என்கிற எலிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருந்த சமயத்தில் உண்மையான தகவல்களைத் திமுக அரசு மறைத்தது பற்றிப் பேசுகிறது. இவற்றைப் படித்தபோது, ‘தி இந்து’ வுக்கு நிகர் ‘தி இந்து’தான் என்பது நிரூபணமானது. தட்டிக்கேட்கும் கைகள்தான் தட்டிக்கொடுக்கவும் வேண்டும். திராவிட இயக்கம் என்னவெல்லாம் செய்தது என்பதைப் படிக்கையில் பல விஷயங்கள் பழைய பார்வையை மாற்றுகின்றன. தொடரட்டும் இந்தப் பணி!
- மா.இசக்கிகுமார், பல்லடம்.
ஜனநாயக நாடுதானே?
ஊ
ழலுக்கு எதிராக நாடு முழுவதும் இயக்கங் கள் நடைபெறும் நேரம் இது. மோடி ஊழலுக்கு எதிராகப் பேசாத நாளே கிடையாது. இந்நிலையில், ஊழல் செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அரசின் அனுமதி தேவை என்றும் ஊழல் செய்பவர்கள் பெயரை வெளியிட்டால் சிறை என்றும், ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்றப் போகிறது. இது தற்போதைய ஊழலுக்கு எதிரான போரை எள்ளி நகையாடுவதைப் போல் உள்ளது என்ற உணர் வைத் தலையங்கம் உண்டாக்கியது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் பல ஊழல் வழக்குகள் நடந்து வருவதை முதல்வர் வசுந்தரா காணத் தவறிவிட்டாரா? ராஜவம்சத்து வாரிசான வசுந்தரா ஜனநாயக நாட்டில் முதல்வராக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
பத்திரிகையே இயக்கம்
மி
கப் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர் பிட்டி.தியாகராயர். சென்னை கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிக்காக அக்காலத்தில் 5,000 ரூபாய் நன்கொடை வழங்கிய தியாகராயர், விழா நாளன்று கோபுரத்தைப் பார்வையிடச் செல்லும்போது, அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தாவாலேயே தடுத்து நிறுத்தப்படுவதுடன் ‘சூத்திரர்கள் கோபுரத்தில் ஏறக் கூடாது’ என்றார்கள். இந்தப் புறக்கணிப்புதான் ‘நான் - பிராமின்’ (Non Brahmin) என்கிற ஆங்கில வார இதழ் துவங்கக் காரணமாக அமைந்தது. இதன் ஆசிரியராக இருந்து சமூக நீதிக்கான அவசியத்தை வலியுறுத்தி எழுதிவந்தார் தியாகராயர். மேலும், பிராமணரல்லாதவரின் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து எழுதி பிராமணர் அல்லாதோர் இயக்கத்தைத் தொடங்கினார் அவர். பின்பு இதுவே தென்னிந்திய நலச் சங்கமாக உருவெடுத்தது. இச்சங்கத்தின் கொடியைத் தராசு படத்துடன் தயாரித்தவர் டாக்டர் டி.எம்.நாயர். இந்த அமைப்பின் சார்பில் உருவானதுதான் ஜஸ்டிஸ் (நீதி) என்ற பெயர் கொண்ட ஆங்கில நாளிதழ். இப்பத்திரிகையின் பெயரில்தான் ஜஸ்டிஸ் கட்சி உருவானது. முதலில் பத்திரிகை தொடங்கப்பட்டு, பின்னர் அதே பெயரில் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது வரலாற்றில் இதுவே முதல் முறை.
- நீ.சு.பெருமாள், எமனேஸ்வரம்.
அதிகாரப் பரவல் அவசியம்!
அக். 29-ல் வெளியான ‘ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்பச் சட்டம் இயற்றுவது சரியா.. புதிய ஆட்சி முறைக்கு மாறுமா இந்தியா?’ கட்டுரை படித்தேன். நமது இன்றைய ஆட்சி நிர்வாக முறை சந்தித்து வரும் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது அதிகாரப் பரவல். குறிப்பாக, மக்கள் நேரடியாக நிர்வாகத்தில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கின்றன கிராம சபைகள். இதன் மூலம், ‘மக்கள் பிரதிநிதி’களை நம்பியிருக்கும் நம் ஜனநாயகம், மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்பளிக்கும் ஜனநாயகமாக உருவெடுத்துள்ளது. மேலும், முறையான கிராமசபைக் கூட்டங்கள் வெளிப்படையான பஞ்சாயத்து நிர்வாகத்தை உறுதிப்படுத்தும். ஆட்சி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அதிகாரப் பரவல் அவசியம்.
- நந்தகுமார், மின்னஞ்சல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT