Published : 06 Sep 2017 09:02 AM
Last Updated : 06 Sep 2017 09:02 AM

இப்படிக்கு இவர்கள்: கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்!

தன்னலமற்ற பால்ராஜ் புரி

தேச பக்திக்கும் தீவிர தேசியவாதத்துக்கும் என்ன வேறுபாடு? (செப். 4-ல்) என்று கேள்வி கேட்டு, அதற்கான விடையை அப்பழுக்கற்ற, தன்னலமில்லாத பத்மபூஷண் பால்ராஜ் புரி என்ற தேச பக்தரை வைத்து நமக்கு அருமை யாக விளக்கம் அளித்த ராமசந்திர குஹாவுக்குப் பாராட்டுகள். அதி தீவிர தேச பக்தர்களைவிட விளம்பரமில்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே நேர்மறையான சிந்தனையை விதைத்து சமாதானத்தின் வலிமையை அனைவருக்கும் உணர்த்திய ஒரு மாபெரும் தேசபக்தர் புரியைப் போல் தேச பக்தியுடைய பத்திரிகையாளர்கள் பலர் உருவாக வேண்டும்.

- புவனகிரி. ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.

கைத்தட்டலும் வெளிச்சமும்

‘தேவை, தலைகீழ் வகுப்பறை’ கல்வியாளர் ச.மாடசாமி யின் கட்டுரை (செப். 5) படித்தேன். வகுப்பறைக்குள் ஓர் ஆசிரியர் நுழையும்போது, மாணவர்கள் இருட்டில் இருக்கும் ஒரு வகுப்பறைக்குள் வெளிச்சம் வருவதைப் போல் உணர வேண்டும். கற்றல் என்பது மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் குறைவற்றதாக, கைத்தட்டல்கள் வகுப்பறை சுவர்களைப் பதம்பார்ப்பவையாக இருக்க வேண்டும். மாறாக, இன்று வகுப்பறைகள் எப்படி இருக் கின்றன? வகுப்பறை என்பது மயான அமைதி கொண்டதாக சில ஆசிரியர்கள் தங்களை அறியாமலேயே செய்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, ‘வாயைப் பொத்து.. கையைக் கட்டு!’ என்று கட்டளைகளைப் பிறப்பித்து, சர்வாதிகாரிகளாகிவிடுகிறார்கள். புத்தகத்தில் உள்ள தைப் படிக்கச் செய்து, விளக்கம் சொல்லும் உரைகாரர்களாக ஆகிவிடுகிறார்கள் ஆசிரியர்கள். இது போன்ற பல ஆதங்கங்களைப் பேச வைத்தது கட்டுரை. நானும் ஓர் ஆசிரியரே. எனக்குள்ளும் புதிய மாற்றங்கள் விளையக் காரணமாக இருந்த கட்டுரையாளர் ச. மாடசாமிக்கும் ‘தி இந்து’ நாளிதழுக்கும் நன்றி!

கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்!

‘அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது அரசே?’ என்று மக்கள் சார்பில் நீங்கள் கேட்ட கேள்வி மத்திய - மாநில அரசுகளுக்கும் பொருந்தும். ஆனால், தற்போது நாம் போராட வேண்டியது நீட்டை எதிர்த்து அல்ல.. நீட் தமிழகத்துக்கு வர அடிப்படைக் காரணமாக இருந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துதான் போராட வேண்டும். ஆம், மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்தும் அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரவும் நாம் மத்திய அரசிடம் போராட வேண்டும். இன்றைக்கு மருத்துவப் படிப்புக்கான நீட்டை எதிர்த்து நாம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அலோபதி மற்றும் பல் மருத்துவத்துக்கு மட்டும் இருக்கும் நீட் தேர்வை மற்ற மருத்துவப் படிப்புகளுக்கும் (ஹோமியோபதி, சித்தா, நேச்ரோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேதா) கொண்டுவரப் போகிறார்கள். அதோடு, கால்நடை மருத்துவத்துக்கும் ஏன் பொறியியல் படிப்புகளுக்கும் நீட்டைக் கொண்டுவந்துவிடுவார்கள். எனவே, தற்போதைய போராட்டங்கள் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப் போராட வேண்டுமே தவிர, மருத்துவத்துக்கு நீட் வேண்டாம் என்று போராடுவது நிரந்தரத் தீர்வாக அமையாது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

- கோமல் தமிழமுதன், திருவாரூர்.

பெரியவர்களுக்குத்தான் கவுன்சலிங்

இப்போதெல்லாம் வாழ்க்கை பற்றிய புரிதல் இளைஞர்களை விட பெரியவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது. பிள்ளைகளை எல்கேஜியில் சேர்த்ததுமே அவனுக்கு எல்லா விவரமும் வந்துவிட்டது என்று அந்தக் குழந்தைகளுக்கு உணவு, உடை, படிப்பு இவற்றை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இந்த உலகில் பல்வேறு விஷயங்களால் இளம் வயதினர் அலைக்கழிக்கப்படுவதை அவர்கள் உணராமலேயிருந்து தற்கொலை நிலைக்கு வரும்போதுதான் விழித்துக்கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே குழந்தைகளின் மன நலனைக் கண்காணித்தால் விபரீதங்கள் தடுக்கப்படும். இளம் உள்ளங்களைவிடப் பெரியவர்களுக்கே அதிக கவுன்சிலிங் தேவைப்படும் காலகட்டம் இது.

- ஜே.லூர்து, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x