Published : 08 Sep 2017 08:20 AM
Last Updated : 08 Sep 2017 08:20 AM
செப்.6-ல் வெளியான சூர்யாவின் கட்டுரை, நீட் தேர்வு பற்றிய ஒரு முழுமையான கட்டுரை. திரைத் துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர், இன்றைய இந்திய தமிழகக் கல்விமுறை பற்றி இவ்வளவு ஆழமான புரிதலோடு இருப்பது, பிரமிப்பாக இருக்கிறது. நீட் தேர்வில் பொதிந்துள்ள அநீதிகள் பற்றியும் பொதுப்பள்ளி முறையின் அவசியம் குறித்தும் பரவலாக எடுத்துச் செல்ல இக்கட்டுரை மிகவும் பயன்படும். நீட் தேர்வு, கல்வியில் நிலவும் அசமத்துவம், பொதுப்பள்ளி, கல்வியில் தனியார்மயம், வர்க்க, சாதி மேலாதிக்கம் எல்லாவற்றையும் இணைத்து எழுதியுள்ள பாங்கும் சிறப்பு. ‘என்ன செய்ய வேண்டும்?’ என்பது குறித்த அவரது பார்வையும் தெளிவானது. பிரபா கல்விமணி தொகுத்து, அகரம் அறக்கட்டளை வெளியிட்ட ‘நீட் தேர்வு வரமா.. சாபமா? என்ற தலைப்பில் வெளிவந்த நூலின் முன்னுரை யில் சூர்யா ஒரு தேர்ந்த கல்விச் சிந்தனை உடையவர் என்பது வெளிப்பட்டது. இந்தக் கட்டுரையின் வழியே அவர் ஒரு நல்ல கல்வியாளர் என்பதும் தெள்ளென விளங்குகிறது.
- நா.மணி, ஈரோடு.
தமிழக அரசும் போராட வேண்டும்
நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க் கட்சிகளும், மாணவர்களும் மட்டும் போராடினால் பலன் தராது. தமிழக அரசும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்த அளவில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண்ணுடன் +2 மதிப்பெண்ணையும் இணைத்து மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும். அதாவது, தமிழகத்தில் முன்பு தொழில்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முறை இருந்த அதே பாணியில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இது ஓரளவுக்கேனும் மாணவர்களுக்குப் பலன் தரக்கூடும். அதேநேரத்தில், நீட்டை ரத்துசெய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
-அ.சுரேஷ், ஆய்க்குடி.
வகுப்பறைச் சடங்குகள்
ஆசிரியர் தினத்தன்று வெளியான, ‘தேவை தலைகீழ் வகுப்பறை’ கட்டுரை இன்றைய ஆசிரியர்கள் தங்கள் செயல்பாட்டை ஒரு முறை பரிசீலித்துப் பார்த்துக்கொள்வதாக அமைந்தது. தற்போதைய கற்பிக்கும் முறையைச் சடங்கு கள் சூழ்ந்த வகுப்பறை என்றும், இம்முறையை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளரும் ஆசிரியருமான ச.மாடசாமி. விவாதங்கள் நிறைந்த வகுப்பறையாக அது மாற வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் நியாயமானது. புதிய புதிய முயற்சிகள் கண்டுபிடிக்கப்படுவதும், செயல்படுத்தப்படுவதும் இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதை எளிய நடையில் தெரிவித்த இக்கட்டுரை, கற்பிப்பதில் புதிய வழி களைக் கண்டறிய வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
-அமலராஜன், தலைமை ஆசிரியர், மணியம்பட்டி.
சின்னமும் தேர்தல் ஆணையமும்
‘இரட்டை இலை: துளிர்த்த கதையும் துவண்ட கதையும்!’(செப்.1) வரலாறும் நடப்பும் பின்னிப்பிணைந்த கட்டுரை. இரட்டை இலை, எம்ஜிஆர் வென்ற சின்னம். ஆனால், அது அவர் கண்ட சின்னம் அல்ல என்பதைத் தெளிவுபடத் தெரிவித்துள்ளார் கட்டுரையாளர் ஆர்.முத்துக்குமார். அதிலும் ஒரு சின்னத் திருத்தம், திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் சிங்கம் சின்னம் கேட்டார். அச்சின்னம் வேறு ஒரு வேட்பாளருக்கு ஒதுக்கப்படவே வேறு வழியில்லாமல் பெற்ற சுயேச்சைச் சின்னம் இரட்டை இலை. பின்னர், அதுவே அதிமுகவின் வெற்றிச் சின்னமாக்கி, இன்று மறுபடியும் தேர்தல் கமிஷன் முன்னிற்கும் நிலைக்கு வந்துள்ளது. அவர் கூறிய ‘டெல்லி தொழில் நுட்பம்’ என்ன என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், முதுகில் குத்துப்படும் வரை புரிய வேண்டியவர்களுக்குப் புரியாதுபோல் இருக்கிறதே.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT