Published : 27 Sep 2017 09:37 AM
Last Updated : 27 Sep 2017 09:37 AM
டெங்கு எனும் எமன்
செ
ப்.25 அன்று வெளியான ‘மர்மக் காய்ச்சலை ஏன் துப்பறியக் கூடாது?’ கட்டுரை மூலம், டெங்கு காய்ச்சல் குறித்த இன்றைய நிலையை எழுத்தாளர் அழகிய பெரியவன் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். எங்கள் பெண்ணுக்கு டெங்கு வந்து நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வசதி இருப்பவர்களால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்குச் சென்று ஓரளவிற்கு நோயைச் சமாளிக்க முடிகிறது. வசதியற்றவர்களும் விழிப்புணர்வற்றவர்களும் இறுதிக்கட்ட நிலையில் சிகிச்சை பெற மருத்துவமனை மனைக்கு வந்து உயிரைக் காப்பாற்றப் போராடுவது எத்தனை வேதனையானது? நிலவேம்பு கஷாயம் கொடுப்பதோடு நில்லாமல் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், கொசுவை விரட்டி டெங்குவை விரட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
-யசோதா பழனிசாமி, ஈரோடு.
என்ன தண்டனை?
செ
ப்.26-ல் வெளியான, ‘கோரக்பூர் சம்பவம் கற்றுத்தரும் பாடம்’ கட்டுரை வாசித்தேன். கோரக்பூரில் நடந்தது கோரமான சம்பவம். 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு என்பது இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காலத்தில் நடந்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. ஆனால், ஆட்சியாளர்கள் இது பற்றி கவலையோ வெட்கமோ படுபவர்களாகத் தெரியவில்லை. இத்தனை பெரிய சம்பவத்துக்குப் பிறகும் குழந்தைகள் இறப்பு தொடர்ந்துகொண்டே இருப்பது அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.
-கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
இதுதான் புனிதமா?
எ
ந்தப் புனித தீர்த்தத்தில் நீராடினாலும், தாங்கள் உடுத்தியிருந்த ஆடைகள் சிலவற்றை அப்படியே கழற்றி நீர்நிலைக்குள் விடுவதை ஒரு பழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள் சிலர். சமீபத்தில் மயிலாடு துறையில் நடந்த காவிரி மஹா புஷ்கர விழாவில்கூட இதைப் பார்க்க முடிந்தது. இதேபோல தமிழகத்தின் முக்கிய தீர்த்தங்கள் எல்லாம் தொடர்ந்து மாசுபடுத்தப்படுகின்றன. நீர்நிலைகளை மாசுபடுத்துவது பாவச்செயல் என்பதை பக்தர்கள் உணர வேண்டும், கோயில் நிர்வாகிகளும், விழாக் குழுவினரும் இவ்விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
-அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.
எப்போது விடியும்?
செ
ப்.26-ல் வெளியான, ‘இவ்வளவுதான் தரம் தாழ முடியுமா? இன்னும் இருக்கிறதா?’ எனும் தலையங்கமும், ‘முடங்கிய தமிழகம்’ எனும் கட்டுரைத் தொடரும் இன்றைய அரசியல் சூழலை அப்படியே பிரதிபலிக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் தமிழக அரசு கோட்டை விட்டுவிட்டு, தினந்தோறும் எண்ணற்ற காகிதத் திட்டங்களை அறிவித்து மக்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. ஊராட்சிகளே செயலற்று, பயனற்று கிடக்கும் நிலையில் இந்தத் திட்டங்களை யார் செயல்படுத்தப் போகிறார்கள்?
- எஸ்.எஸ்.ரவிக்குமார், கிருஷ்ணகிரி.
மாற்றம் வரட்டும்
செ
ப்.25-ல் வெளியான, ‘சாதி மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா?’ கட்டுரை முக்கியமானது. தான் முதல்வராக முடியாது என திருமாவளவன் கூறியது ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடு. தமிழர்களைக் காக்கவும், தமிழ் அடையாள அரசியலை முன்னுக்குக் கொண்டு வரவும் முன்னுதாரணமாக தமிழகத்தில் அடுத்து ஆளும் வாய்ப்பைப் பெறும் கட்சிகள், கூட்டணி ஆட்சி என்பதோடு நின்றுவிடாமல் ஆட்சியிலும் பங்கு என்னும் நிலையை எடுத்தால் இந்தப் பிரச்சினைகளைக் களைவதற்கான தொடக்கமாக அது அமையும்.
-நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT