Published : 13 Sep 2017 09:07 AM
Last Updated : 13 Sep 2017 09:07 AM
பாரதியின் பத்தி எழுத்துகள்
பா
ரதியாரை மகாகவியாய்க் கொண்டாடிக்கொண்டிருக்கும் நமக்கு இதழியலில் அவர் செய்த சாதனைகளின் வீச்சு இன்னும் ஆழமாகப் புலப்படாதது வருத்தம்தான். பாரதி சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராக (1904-1906, மீண்டும் ஆகஸ்ட் 1920 செப்டம்பர் 1920) இருந்தார். ‘பாலபாரதம்’, ‘இந்தியா’ முதலிய இதழ்களை அவரே நடத்தினார். ‘சக்ரவர்த்தினி’ இதழில் ஓராண்டு பணியாற்றினார். ‘சூர்யோதயம்’, ‘கர்மயோகி’, ‘யங் இந்தியா’, ‘தர்மம்’ ஆகிய இதழ்களில் பணியாற்றினார். அவர் எழுதிய இதழ்களின் பல மூலப் பிரதிகள் கிடைக்காமல் போய்விட்டன. சுப்பிரமணிய பாரதி என்கிற பெயரில் எழுதியதோடு மட்டுமல்லாமல் காளிதாசன் உள்ளிட்ட பல புனைபெயர்களிலும் பாரதி எழுதினார். அவற்றுள் இன்னும் கண்டறியவேண்டிய பொக்கிஷங்கள் ஏராளமாய் உண்டு. அந்த வகையில் பாரதியின் ‘பீரங்கி சிப்பாய்’ தேடல் குறித்த ய.மணிகண்டனின் கட்டுரை (செப்-11) பாரதி ஆய்வாளர்களுக்கு இன்னும் புத்தூக்கம் தரும். பாரதியின் மாயத்தராசு குறித்த தேடல் கட்டுரைகள் தமிழில் குறைவு. பாரதியின் பத்தி எழுத்துகள் தனியே ஆராயப்பட வேண்டும்!
-சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
வாழ்வே வெற்றிதான்!
இள.சிவபாலன் எழுதிய 'தற்கொலைகளை ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை?' என்ற கட்டுரையில் (செப்12) பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்க ஆள் இல்லாமையால்தான் பல பேர் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தோல்வி காரணமாகத் தற்கொலை செய்திருந்தால் உலகில் ஒருவர்கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். நாம் பிறக்கும்போது உயிரை விடாமல்,நோயில் வீழாமல், விபத்தில் போகாமல் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்திருக்கிறோம் என்றால் நமக்குள்ள கடமையை நிறைவேற்றத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். வாழ்க்கையின் லட்சியம் என்பது வெற்றி பெறுவதல்ல. சவால்களை எதிர்கொள்வதே வெற்றிதான்!
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
கருத்துச் சித்திரம்
ஒரு நல்ல கருத்துச் சித்திரம் என்பது ஒரு கட்டுரை சொல்லும் செய்தியை எளிமையாகச் சொல்லிவிடக்கூடியது. வாசகர் யுதீஷின் கருத்தில் உருவாகியிருந்த கருத்துச் சித்திரம் (செப்-12) அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது. வரி ஏய்ப்பாளர்கள் மீது பாரபட்சமின்றியும் அரசியல் தலையீடுகளின்றியும் சுதந்திரமாக நடவடிக்கை மேற்கொள்ள அனுமதித்தாலே போதுமானது. அதை விடுத்து சமூக வலைதளங்களை உதவிக்கு அழைப்பதன் அவசியம் என்ன எனும் கேள்வியை நகைச்சுவை உணர்வுடன் எழுப்பியது அந்தக் கருத்துச் சித்திரம்!
சேகரன், பெரணமல்லூர்.
நீதி கோரும் நெஞ்சுறுதி
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளின் தொகுப்பாக, திங்கள் அன்று வெளியான ‘போராட்டக் களம்’ மிக அருமை. அரியலூர் அனிதா உட்பட தமிழகத்தில் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கனவை இழந்த மாணவர்கள் பலர். இந்தப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் மாணவர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். இந்தப் பதிவுகள் இவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் போராட்டத்தை, சீனாவின் தியானென்மென் சதுக்கப் போராட்டத்துக்கு இணையாகச் சித்தரித்த படங்கள் சிந்திக்க வைத்தன.
- விஜயகுமார், சென்னை.
எது புரட்சி?
திங்கள் அன்று வெளியான ‘மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் சமூகப் புரட்சியா?’ கட்டுரை அருமை. மத்திய அரசின் திட்டங்களில் பெரும்பாலானவை மக்களைப் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ‘ஜாம்' திட்டம் என்பதுகூட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியே தவிர முழுமையானது அல்ல. கடந்த ஐந்து காலாண்டுகளாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்துகொண்டே வருவது மத்திய நிதியமைச்சருக்குத் தெரியாமலாப் போனது? ‘தேன்' என்று சொன்னால் மட்டும் வெறும் வாய் இனித்துவிடாது ஜேட்லி அவர்களே!
- வி.பாஸ்கர், அலங்காநல்லூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT