Published : 25 Sep 2017 09:28 AM
Last Updated : 25 Sep 2017 09:28 AM
ஆசிரியர்களே வெளியே வாருங்கள்!
ச
மீபத்தில் மாலை ‘நீட்’ தேர்விற்கு எதிரான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அரங்கு நிரம்பி வழிந்தது. தமிழக மாணவர் நலன் சார்ந்த, கல்வி சார்ந்த ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்ட கருத்தரங்கு அது. ஆனால் ஆசிரியர்களின் தலைகளைவிட, மாணவர்களின் தலைகளே அதிகமாக தென்பட்டன. பண்பாடு, மக்கள் உரிமை, கல்வி உரிமை என்று எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பொதுவெளியில் போராட்ட மாணவர்கள் தயங்குவதேயில்லை. ஆசிரியர்கள் ஏன் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை? ‘அறம் செய்ய விரும்பு’ என்று ஆசிரியர்களின் போதித்ததை உணர்ந்து அறம் காக்க களத்தில் நிற்கிறார்கள் மாணவர்கள். அவர்களை ஆசிரியர்கள் ஆதரிக்க வேண்டும் அல்லவா? பொதுப் பிரச்சினைகளில் மாணவர்களுடன் கரம் கோர்த்தால், ஆசிரியர்களின் உரிமைப் போராட்டங்களில் அவர்களும் கலந்துகொள்வார்களே!?
-துளிர், மதுரை.
அடைக்கலம் தருமா இந்தியா?
செ
ப். 22-ல் வெளியான ‘அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பலாமா?’ தலையங்கம் வாசித்தேன். 1971-ல் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வரவேற்று வாழ்வு கொடுத்தவர் இந்திரா காந்தி. ‘பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு/ இறைஒருங்கு நேர்வது நாடு’ என்ற குறளில், பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன் நாட்டைத் தேடி வரும்போது அவற்றைத் தாங்கி தன் நாட்டுக்கு மேலும் பொருள் கொடுத்து உதவக்கூடியதே நாடு என்று சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. இன்றைய நிலை வருத்தம் தருகிறது.
-இரா.தீத்தாரப்பன், மேலகரம், தென்காசி.
பெரிய அணை பெருமையல்ல!
செ
ப் 21-ல் வெளியான ‘நர்மதை அணைத் திட்டம் அர்ப்பணிப்பா, அபகரிப்பா?’ கட்டுரை மிக முக்கியமானது. பெரிய அணைகளால் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. பெரிய அணைகளால் பெருமை அல்ல. இதற்குப் பதிலாக நதிகளில் சிறிய தடுப்பணைகளைக் கட்டி நதியின் நீரோட்டத்தை தடை செய்யாமல் இருந்தால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம். மண் அரிப்பைத் தடுக்கலாம், ஒருவேளை இயற்கைச் சீற்றங்களால் இந்த அணைகள் பாதிக்கப்பட்டால் எண்ணற்ற இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். இயற்கை வளங்களை அழித்து அதன் மூலம் வளர்ச்சி என்பது எந்த வகையில் நியாயம்?
- இராஜஇந்திரன், காரைக்கால்.
பதவி சுகமும் பிரச்சினையும்
க
ருத்துப் பேழையில் 'தீவிர சிகிச்சைப்பிரிவில் ஓராண்டாகத் தமிழகம்!' கட்டுரை (செப் 22) தமிழக மக்களின் ‘மன் கீ பாத்' என்றால் அது மிகையில்லை. தமிழக நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்த மத்திய அரசின் ஒற்றையாட்சிக்கு ஒத்தாசையாக இருக்கும் திட்டங்கள் எல்லாம் எதிர்ப்பின்றி இப்போதிருக்கும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தமிழக அரசு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக அரசையும் உச்ச நீதி மன்றத்தையும் ஒரு சேர ஏமாற்றி வருகிறது மத்திய அரசு. நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் கண்ணீர் தமிழக ஆட்சியாளர்களின் மனசாட்சியை உறுத்தவில்லை. பதவி சுகத்திற்காகப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் இப்போதைய அரசு மக்களால் புறக்கணிக்கப்படும் என்பது உறுதி.
-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
திருத்தம்
செ
ப்.24 அன்று ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘பாரிஸில் மௌனி’ கட்டுரையின் புகைப்படத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இலக்கிய ஆசிரியை லெட்டீஷியாவுடன் இருப்பவர் சமஸ்கிருத ஆய்வில் ஈடுபட்டுள்ள அவரது சக ஆராய்ச்சியாளர். தவறுக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT