Published : 07 Sep 2017 09:57 AM
Last Updated : 07 Sep 2017 09:57 AM
‘தி
இந்து’ தமிழ் நாளிதழில் ‘வைஷாலி மறுபிறவி எடுத்த உண்மைக் கதை’ தொடரைப் படித்தேன். மொழி, இனம், மதம் கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது என்பதை இந்தத் தொடர் உறுதிப்படுத்துகிறது! வைஷாலி மறுபிறவி எடுப்பதற்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கரீம் பாய், மருத்துவர் பாலாஜி, சென்னை ‘ஸ்ரீ குஜராத்தி மண்ட’லின் நரேந்திரா, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், நிதியுதவி அளித்த வாசகர்கள், இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பையும் வாழ்த்துகளையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
எந்தெந்த மாநிலங்களுக்கோ சென்றுவிட்டு, வைஷாலியின் குடும்பத்தினர் இறுதியில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையைத் தமிழகம் உண்மையாக்கியிருப்பதை நினைத்துப் பெருமிதம் ஏற்படுகிறது. நம்பிக்கையும் நெகிழ்வும் அளித்த வைஷாலியின் உண்மைக் கதையை அருகிலிருந்து பார்த்ததுபோல் விவரித்தது கட்டுரைத் தொடர்!
- தரணி வீரமணி, தஞ்சாவூர்.
குறிப்பு: வைஷாலியின் நம்பிக்கைக் கதையைக் காணொலி வடிவத்திலும் காணலாம் (https://goo.gl/8qvrCD). அல்லது அருகில் உள்ள QR Code - ஐ பயன்படுத்தி செல்பேசியில் பார்த்து நெகிழுங்கள்!
மாநில உரிமையை மீட்போம்!
செ
ப்.5-ம் தேதி வெளியான ‘அனிதாவின் மரணத் துக்கு யார் பொறுப்பேற்பது அரசே?’ தலையங் கம் படித்தேன். தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும், 37 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டும் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழ்கிற அதிமுக, நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம். ஆனால், இப்பிரச்சினைக்கு மாநில அரசு மட்டுமே காரணமல்ல. மாநில அரசின் கையாலாகாத்தனம் இதில் இருப்பினும் மத்திய அரசின் சூழ்ச்சி, தனியார்மயக் கொள்கை, தமிழக மருத்துவ படிப்புக்கான இடங்களை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் தந்திரம் இவையும் சேர்ந்தே இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த அளவில், மாநில அரசுகளைவிட மத்திய அரசுகளிடம்தான் அதிகாரம் குவிந்திருக்கிறது. இதற்கொரு முடிவுகட்டவில்லை என்றால், மாநில உரிமைகள் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.
- செந்தில்குமார், சிவகங்கை.
நூல் வடிவம் பெறுமா வரலாறு?
ஆ
க.31-ம் தேதி வெளியான, ‘நீதிபதி சதாசிவா ஆணைய அறிக்கையின் பத்தாண்டுகள்’ கட்டுரை படித்தேன். வீரப்பன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமின்றி, இந்தச் சம்பவங்களைப் பற்றி படிப்பவர்களையும் குலைநடுங்க வைக்கும் அளவுக்கு அதிரடிப்படையினரின் அத்துமீறல் கள் இருந்திருக்கின்றன. இந்த மாபாதகச் செயலை விசாரித்த நீதிபதி சதாசிவா ஆணையத்தின் அறிக்கையை, தமிழக - கர்நாடக அரசுகள் இதுவரையில் முழுமையாக நிறைவேற்றவில்லை. தவறு செய்தவர்களைக் காவல் துறை பாதுகாக்கிறது. நீதிபதியின் அறிக்கையை நூல் வடிவில் தமிழில் வெளியிட வேண்டுமென்ற இக்கட்டுரையாளரின் கோரிக்கையினை, அவருடைய தனிப்பட்ட கோரிக்கையாக மட்டுமல்லாது, மனிதநேயம் போற்றும் மானுடர்கள் அத்தனை பேரின் ஒட்டுமொத்த கோரிக்கையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வி.பாலாஜி, அலங்காநல்லூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT