Published : 12 Sep 2017 09:45 AM
Last Updated : 12 Sep 2017 09:45 AM
மெளனம் காக்கும் கல்வித் துறை
க
லைத் திட்டம் என்பது நுட்பமானது. கலைத் திட்டத்தின் ஒரு பகுதியே பாடத்திட்டம். பாடநூல்கள், கற்பித்தல் கருவிகள், வகுப்பறைக் கற்பித்தல், தேர்வுகள் ஆகியவை பிற பகுதிகள். கல்வி அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற உதவுவதே கலைத் திட்டமாகும். பாடத்திட்டத்தைப் பற்றிய புரிதல் சிறிதுமின்றி பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை கல்வித் துறைக்கு உண்டு. ஆனால், கல்வி அதிகாரிகள் மௌனம் கடைப்பிடிக்கிறார்கள். மாநிலப் பாடத்திட்டக் குழுக்களில் என்.சி.ஈ.ஆர்.டி. நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர். தேசிய கலைத் திட்டத்துக்கு ஏற்றவாறு உள்ளதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்று மீள மீளக் கூறுவது ஏற்புடையதல்ல. விமர்சிப்பவர்கள் பலருக்கும் உள்நோக்கம் உள்ளதை மறுக்க முடியாது. நீட் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தல் என்ற குறுகிய நோக்கோடு ஒரு கலைத் திட்டம் அமைய முடியாது. மருத்துவக் கல்விக்குச் செல்பவர் சில ஆயிரம் பேரே. மருத்துவம் கற்காதவர் லட்சம் பேர் இருக்கின்றனர்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
பாரதியின் போக்கும் நோக்கும்!
பா
ரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு புதிதாகக் கண்டறியப்பட்ட பாரதியின் ‘பீரங்கி சிப்பாய்’ என்னும் நூலை அறியச் செய்துள்ளார் ய.மணிகண்டன். எல்லாக் கடவுள்களும் ஒன்றுதானே என இளைஞன் ழக்கோலியோ வினவியதற்கு பாரதி ‘சபாஷ்’ என்றது பாரதியின் பரந்துபட்ட மனத்தை அறியமுடிகிறது. அதுபோல ‘பீரங்கி சிப்பாய்’ குறித்து எழுதியதற்கு ஒரு ‘சபாஷ்’ போடலாம். இப்படைப்பின் மூலம் பாரதியின் போக்கும் நோக்கும் மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படுகிறது.
- பொன்.குமார், சேலம்.
பசவண்ணரின் சீர்திருத்தம்
லி
ங்காயத் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவல்ல, அது ஒரு தனி மதம் என்பதைத் தெளிவுபடுத்தும்வகையில் அமைந்திருந்தது ச.சிவலிங்கம் எழுதிய ‘கர்நாடகத்தைச்சுழற்றியடிக்கும் லிங்காயத் அரசியல்’ கட்டுரை (செப்.11) பொதுவாக, சமயச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம் என்ற இரண்டுமே ஒரே பொருளில் எடுத்தாளப்படுகின்றன. கர்நாடகத்தில் சமயச் சீர்திருத்தவாதிகளாகச் சொல்லப்படும் மத்வரும் வல்லபரும் சமயத் துறையில் தமது உரைகளின் வழியாக புதுவிளக்கம் அளித்தவர்கள். எனவே அவர்கள் சமயச் சீர்திருத்தவாதிகள். ஆனால், பசவண்ணரோ சமூகச் சீர்திருத்தவாதியாகவே விளங்கியிருக்கிறார். தமிழ்நாட்டின்ராமானுஜர் சமயச் சீர்திருத்தவாதியாகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் ஒருசேர விளங்கியவர். அவரது விசிஷ்டாத்வைதம் வேதத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அது இந்து மதத்திற்குள் உள்ளடங்கியது. பசவண்ணர் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, லிங்காயத்துகள் எப்படி இந்து மதத்திற்குள் அடங்குவார்கள்? இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் இந்து மதத்திற்குள் உள்ளடக்கம் என்பது தத்துவ அடிப்படையிலேயே தவறானது.
- அ.சாமித்துரை, ஒரத்தநாடு.
மீராவின் பரிமாணங்கள்!
க
விஞர் வியாகுலன் ‘படைப்பாளிகளைக் கொண்டாடிய கவிஞர் மீரா’ (செப்.10) மீராவின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக, பதிப்புத் துறையில் அவர் ஈட்டிய சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். மீராவுக்கு ஆசிரியர் இயக்கத் தலைவர் என்ற பெருமையும் உண்டு. தென் தமிழகத்தின் கல்லூரி ஆசிரியர் சங்கமான மூட்டாவின் ஆரம்பகாலத் தலைவர்களில் மீராவும் ஒருவர். 1970- களில் சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் நடந்த வீரஞ் செறிந்த போராட்டத்தை பேராசிரியர் தர்மராஜனுடன் இணைந்து முன்னின்று நடத்தியவர். போராட்டம் வெற்றி பெற்று 1977-ல் இக்கல்லூரியை அரசே ஏற்றுக்கொண்டது. போராட்ட மையமாகவும், மீரா, தர்மராஜன் போன்ற தலைவர்களின் கூடாரமாகவும் இருந்ததனால் சிவகங்கை, மூட்டாவின் மெக்கா என்றழைக்கப்பட்டது.
- பேரா.பெ.விஜயகுமார், முன்னாள் பொதுச் செயலாளர்,
மூட்டா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT