Published : 31 May 2017 10:42 AM
Last Updated : 31 May 2017 10:42 AM
கோத்தாரி கல்விக் குழு, மேனிலைக் கல்விக்கு மூன்று நோக்கங்கள் வைத்தது. உயர் கல்விக்கு ஆயத்தப்படுத்தல், வேலைக்குச் செல்லுதல், சுய தொழில் தொடங்கல். குறைந்தது 25% மாணவர் உயர் கல்வியிலிருந்து திருப்பப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 1978-ல் தமிழ்நாட்டில் மேனிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது ஒரு தொழில் படிப்பாவது அளிக்க வகை செய்யப்பட நிர்ப்பந்திக்கப்பட்டது. மிகச் சில பள்ளிகள் தவிர, பெரும்பாலும் இத்திட்டம் ஏனோ தானோவென்றே இயங்கியது.
வா.செ.குழந்தைசாமி, மால்கம் ஆதிசேஷையா, எச்.எஸ்.எஸ். இலாரன்சு ஆகியோர் தலைமையில் அமைந்த குழுக்கள் தொழில்பிரிவு சீராக இயங்கப் பல கருத்துரைகள் அளித்தன. பொருளாதார வசதி அற்றவர்களுக்கான படிப்பாகக் கருதப்பட்டதாலும், அரசின் அக்கறையின்மையின் காரணமாகவும் தொழில்பிரிவு பொலிவிழந்துவிட்டது. வேலைவாய்ப்பில்லாமல் இளைஞர்கள் அலைமோதும் சூழலில் தொழில்கல்வியை மீட்பது அவசியம்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
போய் வருக கவிஞரே!
கலைஞாயிறு பகுதியில் நா.காமராசன் குறித்து யுகபாரதி எழுதிய (வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர்) கட்டுரை நா.காமராசனின் படைப்புலகச் சுவடுகளை ஆழமாக வாசகர் மனதில் பதித்தது. நா.காமராசன், தனது தாக்கமில்லாமல் கவிதை எழுதிவிட முடியாது என்ற அளவு அழுத்தமாகத் தடம்பதித்த வானம்பாடிக் கவிஞர். மரபில் தொடங்கி நவீனக் கவியுலகில் தடம்பதித்த நா.காமராசன் படைத்த ‘பெரியார் காவியம்’ இன்றும் மாணவர்களுக்குப் பாடநூல். மிகக் கூர்மையான சொல்லாடலும் தமிழ் மொழிமீதான பற்றும் அவர் படைப்புகளின் ஊற்றுக்கண். யாராலும் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மாந்தர்கள் இவரின் பாட்டுடைத் தலைவர்கள். திருநங்கையர் குறித்து அப்போதே காகிதப் பூக்கள் என்று கறுப்பு மலர்களில் பதிவுசெய்த படைப்பாளர் நா.காமராசன். தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், வானம்பாடிக் கவிஞர், மொழிப் போராட்ட வீரர், திரைப் பாடலாசிரியர் என்று பல பரிமாணங்கள் கொண்டிருந்தாலும், அனைத்திலும் தனிமுத்திரை பதித்தவர். போய்வருக கவிஞரே.. ஆழ்ந்த இரங்கல்கள்!
- பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
வாழ்வும் பணியும்
மதத்தை வெறிகொண்டு பரப்பும் ஆபத்தான இன்றைய சூழலில், ஆன்மிகப் புரட்சியாளரான ஸ்ரீராமானுஜர் பற்றி 1964-ல் எழுதி சாகித்ய அகாதடமி விருது பெற்ற பி.ஸ்ரீநிவாச்சாரியின் ஆன்மிக நம்பிக்கைகள், நட்புகள் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தவர். பக்தி எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு மூட நம்பிக்கை ஒழிப்பும் முக்கியம் எனப் பெரியாருக்கு ஆதரவாக இருந்தது என்ற அவரின் வாழ்வும் பணியும் இன்றும்கூட அதி அவசியமான ஒன்றே.
- ரா.பிரசன்னா, ஜெய்ஹிந்துபுரம்.
நூலும் பதிப்பும்
மே 27-ல் வெளியான, ‘மறுபதிப்பு நூல்கள்: அவசியமும் அலட்சியமும்!’ எனும் தலையங்கம் மிகவும் அவசியமானது. பல நல்ல, அவசியமான நூல்கள் மறுபதிப்பு செய்யப்படாமலே போய்விடுகின்றன. இதனால் மக்களுக்கு அவை கிடைக்காமலே போய்விடுகின்றன. மறு பதிப்பு செய்யப்பட்டாலும் முதல் பதிப்புக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. முதல் பதிப்பு விவரங்களும் மறு பதிப்பில் அவசியமாகின்றன. முதல் பதிப்பு நூல்களையே நூலகம் வாங்குவதால் இவ்வாறு செய்யப்படுகின்றன என பதிப்பகங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களிடம் இல்லாத நல்ல நூல்கள் என்றால், எத்தனையாவது பதிப்பாக இருந்தாலும் அதனை நூலகங்கள் வாங்க வேண்டும்.
- பொன்.குமார், சேலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT