Published : 12 May 2017 10:36 AM
Last Updated : 12 May 2017 10:36 AM
அரவிந்தன் எழுதும், ‘அறிவோம் நம்மொழியை..’ தொடர்ந்து படித்துவருகிறேன். என்னைப் போன்ற கல்லூரியில் தமிழ் இலக்கணம் கல்லாதவர்கள், அதே நேரத்தில், தமிழில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் தொடரைப் படித்தால் போதும், இலக்கணச் சுத்தமாக எழுதிவிட முடியும் எனும் நம்பிக்கையைப் பெறுகிறோம். குறிப்பாக, எழுதும்போது எங்கெல்லாம் ஐயம் ஏற்படுகிறதோ அந்த இடங்களில் எவ்வாறு எழுத வேண்டும் என்று எளிமையாகவும் புரிந்துகொள்ளும்படியும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் தருவது பாராட்டும்படியாக இருக்கிறது. ரொம்பவும் இலக்கணம் பேசி அச்சுறுத்தாமல் தேவையானதை மட்டும் குறிப்பிடுவது தொடரை ரசித்துப் படிக்க உதவுகிறது. தொடர் முடிந்த பின் அவசியம் புத்தகமாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியானால், தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவக்கூடிய சிறந்ததொரு வழிகாட்டியாக அது இருக்கும்.
- டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்.
‘சாய்சஸ்’ கட்டுரை நல்ல சாய்ஸ்!
மே-7 அன்று வெளியான சிவசங்கர மேனனின் ‘சாய்சஸ்’ புத்தகத்தைப் பற்றிய கட்டுரை, இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்குத் தேவையான பல்வேறு வெளியுறவுக் கொள்கைகளின் நுணுக்கங்களைப் புரியவைத்தது. பேச்சைவிட செயலே சிறந்தது, பேசாமல் இருப்பது சாலச் சிறந்தது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அருமை!
- சீனி.இராஜகோபால், கோவை.
இறைத் தொண்டு!
ரூ.1,000, 2,000 என்று வசூல் செய்து, 25 முதல் 30 லட்சம் வரை செலவு செய்து கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்வதையே ஆலயப் பணி என்று நினைப்போர் பெரும்பான்மையாக உள்ள சூழலில், ‘படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை’ வழங்கும் கோயிலைப் பற்றிய செய்தியை (மே 6) வாசித்தேன். 1993-94 கல்வியாண்டு முதல் இன்று வரை ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ. 57 லட்சம் வரை வழங்கியுள்ளார்கள் என்பது அவர்களின் பரந்த கருணை உள்ளத்தை நமக்கு உணர்த்துகிறது. எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ என்பதற்கு ஏற்ப, ‘திருச்சி ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர்’ செய்யும் தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற கோயில் நிர்வாகத்தினரும் செயல்படுத்த முன்வர வேண்டும். அதுவே இறைவனுக்கு அவர்கள் செய்யும் பெரும் தொண்டாகும்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
இரண்டாம் படித்துறை!
தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘ஒரு புத்தகத்துக்கு இவை யாவும் முக்கியம்!’ கட்டுரை (மே -6) நேர்த்தியான நெறிமுறைப்படுத்துதலாக அமைந்திருந்தது. அரசு நூலகத் துறையைப் பெரும் பகுதி சார்ந்திருந்த பதிப்பகங்களுக்கு, சென்னைப் புத்தகத் திருவிழா, கரையேற உதவும் இரண்டாவது படித்துறையாக அமைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு ஊர்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் பதிப்பாளர்களுக்குப் பரந்த களத்தையும் வாசகர்களின் நேரடித் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், அவசர அவசரமாக வெளிவரும் புத்தகங்கள், வாசகர்களுக்குப் பெரும்பாலும் தீங்கே செய்கின்றன. தியடோர் பாஸ்கரன் சுட்டும் திசையில் வாசகர் அமைப்புகள் புத்தகங்களை மதிப்பீடு செய்தால், நூல்களின் தகுதி மேலும் மேலும் உயரும்.
- நலந்தா செம்புலிங்கம், தேவகோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT