Published : 30 May 2017 10:33 AM
Last Updated : 30 May 2017 10:33 AM
வள்ளலார் சத்திய தரும சாலை தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் கட்டுரை சிறப்பானது. ஆனால், அக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள வள்ளலாரின் புகைப்படத்தில் சிறு குறை உள்ளது. அப்புகைப்படத்தில், வள்ளலார் திருநீறு அணிந்து இருப்பதே அக்குறை.
முதல் ஐந்து திருமுறை பாடல்கள் பாடிய காலத்தில், அவர் சைவ சமயத்தின்பால் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பது உண்மையே. ஆனால், பின்னர் சத்திய சன்மார்க்கம் கண்டபொழுது, அவர் சாதி, சமய, மத, ஆச்சாரங்களை விட்டொழித்தார். சைவத்தின் அடையாளமான விபூதி அணிவதையும் நிறுத்திவிட்டார்.
சாதி, சமய, மத, ஆசாரங்களை எதிர்த்த முதல் கலகக் குரல் வள்ளலார் குரலே. அதன் பின்னர் தமிழகத்தில் அயோத்திதாசரும், தந்தை பெரியாரும் அக்குரலை ஒலித்தனர். அதனால்தான் அவரின் ஆறாம் திருமுறையைத் தந்தை பெரியார், ‘குடியரசு’ இதழில் பலமுறை பிரசுரம் செய்தார். திருநீறு அணியாத வள்ளலாரின் புகைப்படம் அந்தக் கட்டுரைக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பை அளித்திருக்கும்.
- து.அரிபரந்தாமன், நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம். சென்னை.
நேருவின் மகத்துவம்!
மே26-ல் வெளியான நேரு பற்றிய கட்டுரையை வாசித்தேன். சந்தேகத்துக்கிடமின்றி நேரு ஒரு சகாப்தமே. குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்த ராஜேந்திர பிரசாத் பூரி ஜெகந்நாதர் கோவில் உற்சவத்தில் கலந்துகொள்ள விரும்பியபோது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் மத மாச்சர்யங்களைக் கடந்தோராய் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தியவர் நேரு. இன்றைய ஆட்சியாளர்கள் கற்க வேண்டிய முதல் படிப்பினை இது. அடிப்படையில் கடவுள் மறுப்பாளராக இருப்பினும் பிறர் நம்பிக்கைகளை நேரு புண்படுத்தியதில்லை. நாடு விடுதலை பெற்ற பின் அமைந்த அமைச்சரவையில் அரசியல் கருத்து மாறுபாடு கொண்ட அம்பேத்கரை இணைத்துக்கொண்டு மக்களாட்சித் தத்துவத்திற்கு உண்மையாக அடிகோலியவர்.
சாலையில் செல்லும் இளைஞன்கூடக் கேள்வி கேட்க வல்ல அளவுக்கு ஜனநாயகத்தினைக் கட்டமைத்திருந்தார் நேரு. இவர் ஆண்ட இதே தேசத்தில் இன்றைய பிரதமர், தலைநகரில் உழவர்கள் தம் ஆடைகளைக் களைந்து தன்மானமிழந்தும்கூடச் செவி மடுக்க மறுத்தது வேதனைக்குரிய ஒன்றே. நேரு காலம் தொட்டு நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறும் பாஜகவின் இன்றைய ஆட்சிக் காலத்தில் நேரு ஆட்சியில் எட்டப்பட்ட சராசரிப் பொருளாதார வளர்ச்சியைக்கூட எட்டவில்லை. இந்தியாவின் பன்மைத்தன்மையினை ஏற்று ஆளும் பரந்த மனப்பான்மை கொண்டவர் நேரு. நாட்டினை வளர்ச்சிப் பாதையில் செலுத்த நேருவின் கொள்கைகளை மீட்டுருவாக்கம் செய்தாலே போதுமானது
-செ.த.ஆகாஷ்,மாணவர், தஞ்சாவூர்.
அரசின் நோக்கம் என்ன?
இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கவோ, வாங்குவதோ கூடாது என்பதன் உள்நோக்கம் மாட்டு இறைச்சியை உண்பதைத் தடைசெய்வதே. மாடு புனிதம், மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்றால் பெரும் பிரச்சினை வரும் என்பதால் பின்வாசல் வழியாக இந்தப் புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் ‘சிறுதெய்வ வழிபாட்டில் இருந்து பிரிக்கவே முடியாத ரத்த பலி’ (மே 28) என்ற கட்டுரை சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. தமிழகம் மட்டுமில்லாது, உலகம் முழுக்க வழிபாடு மற்றும் மக்களின் அன்றாட வாழ்வோடு மாமிச உணவு நெருங்கிய தொடர்புடையது. இவ்வாறு இருக்க இந்த மாமிசத்தை நீ சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. கால்நடைகள் மீது உண்மையான அக்கறை இருக்கும்பட்சத்தில் மாமன்னர் அசோகர் செய்தது போல் விலங்கு வதை குறித்த ஒரு பிரச்சாரத்தை அரசு செய்ய முயற்சிக்கலாம். அதை விடுத்து, தனது கருத்தியலை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தால் எதிர்ப்புப் பிரச்சாரம் தமிழகத்திலிருந்தே கிளம்பும்.
- செ.சேவியர், பெரியார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT