Published : 21 Dec 2016 10:18 AM
Last Updated : 21 Dec 2016 10:18 AM
வீ.பா.கணேசனின், ‘கிழக்கு நோக்கிய பார்வையில் துல்லியம் இருக்கிறதா?’ கட்டுரை (டிச.15) வலியுறுத்துவதுபோல, அம்மாநிலங்களின் அபிவிருத்திக்கான சகல அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய, தரைவழிப் போக்குவரத்து வசதியை மத்திய அரசு செய்துதர வேண்டும். இதனால், இந்தியா மட்டுமின்றி, அதை ஒட்டியுள்ள நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளின் வளர்ச்சியும் இதில் அடங்கும். ஏற்கெனவே வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளை இணைக்கும் சாலைவழித் திட்டத்தை இந்தியா உருவாக்கியது. இத்திட்டத்துக்கு இதர நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தியாவின் நெருங்கிய நட்புநாடான பூட்டான் மட்டும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களைக் கூறி, ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்தியா எதிர்பாராத ஒன்றாகக் கருதப்படுகிறது. எப்படியிருப்பினும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் நமது வீட்டின் கொல்லைப்புற மதில்சுவர் போன்றது. அது நமது பாதுகாப்பு அரண். அதை கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும்.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
கிராமங்களையும் கவனியுங்கள்!
டி.தர்மராஜ் எழுதிய, ‘கிராமம் எனும் கொடுங்கனவு’ (டிச.14) கட்டுரை படித்தேன். கிராமங்களிலிருந்து வெளியேறும் மனிதர்களின் துயரம் வலி மிக்கது. வார்த்தைகளில் வடிக்க இயலாதது. அரசின் கொள்கைகள் மிகச்சில பெருமுதலாளிகளின் நலனை முன்னிறுத்தியே இருக்கின்றன. ஒரு முதலாளியின் நலனுக்காக இரையான தனிநபர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அது கண்டனத்துக்குரியது. கிராமப்புறப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தவும், விவசாயத்தை மேம்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டால் மட்டுமே தேசம் விடிவு பெறும்.
- ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக.
கருத்துச் சித்திரம்
டிசம்பர் 16ல் வெளியான கருத்துச் சித்திரம் காலத்தே வந்த அற்புதம். மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, சாதாரண மக்களை அன்றாட வாழ்க்கைக்கான பணத்துக்கே திண்டாடும் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. தனது கணக்கிலுள்ள பணத்தை எடுக்க இயலாததால், 122 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இல்லாத ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில்விடக் கோரியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர். “குதிரைகள் பறந்த பின் லாயம் பூட்டுகிறார். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார் மோடி” என்று சீதாராம் யெச்சூரி கூறியது நினைவுக்கு வருகிறது.
- பெரணமல்லூர் சேகரன், சென்னை.
முதல் கட்டுடைப்பு!
பேரியக்கத்தின் தலைவர், ஆட்சியில் உள்ள முதல்வர், அதிலும் பெண் முதல்வர் என ஜெயலலிதாவின் மரணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பரிதாப உணர்வை முன்னிறுத்தி விமர்சனங்களற்று வந்த ஊடகக் கட்டுரைகள் ஜெயலலிதாவை பிம்ப வழிபாட்டு உருவகமாக்கிவிட்டன. இந்த நிலையில் டிச.16ல் வெளியான, ‘சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?’ எனும் கட்டுரை, இந்த பிம்பத்தில் முதல் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். கட்சியிலோ ஆட்சியிலோ தனிநபர் அதிகாரக் குவிப்பு ஆபத்தானது. ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமானது என்பதைக் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உணர வேண்டிய தருணமிது என்பதை இக்கட்டுரை நன்கு உணர்த்துகிறது.
- உதயபாரதி, மதுரை.
ஆழமான கட்டுரை
ஷங்கர்ராமசுப்பிரமணியனின், ‘ஷ்ரோடிங்கரின் பூனை நகுலனைத் திறக்கிறது’ (டிச.16) கட்டுரையின் பொருளும் அதை வெளியிட்டுள்ள அழகும் பாராட்டத்தக்கது. நாளிதழ் ஒன்றில் இப்படியொரு நுட்பமான குவாண்டம் இயற்பியலின் கோட்பாடு பொருத்தமாக வெளிவருவது தமிழில் ‘தி இந்து’ நாளிதழின் வருகையாலேயே சாத்தியமாகியிருக்கிறது. அக்கோட்பாட்டுடன் நகுலனின் கவிதையைக் கொண்டுவந்து இணைத்திருப்பது ஷங்கர்ராமசுப்பிரமணியனின் இலக்கிய வாசிப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
- க.பஞ்சாங்கம், எழுத்தாளர், புதுச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT