Published : 02 Dec 2016 10:03 AM
Last Updated : 02 Dec 2016 10:03 AM
மகேஷின் ‘எம்.ஜி.ஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது’ (16.11.2016) கட்டுரை வாசித்தேன். போகிறபோக்கில், “எம்ஜிஆரைத் திக கொண்டாட என்ன தேவை இருக்கிறது?” என்று கேட்கிறார் கட்டுரையாளர்.
1. பிற்பட்டோருக்கு வருமான வரம்பை எம்ஜிஆர் கொண்டுவந்தபோது திக மிகக் கடுமையாக அதை எதிர்த்தது. அந்த ஆணையை விலக்கிக்கொண்டு 31% இடஒதுக்கீட்டை 50%-ஆக உயர்த்தியபோது நாடெங்கும் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையும் திக நடத்தியது. திக தன்னுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயே மனிதர்களை அணுகுகிறது.
2. எம்ஜிஆர் கடைசிக் காலத்தில் ஆன்மிகவாதியாக மாறியிருக்கலாம். அதனாலேயே அவர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்வது எப்படிச் சரியாகும்? மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் சென்னை தேனாம்பேட்டையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நடத்திய இந்திய சமயக் கலை விழாவில் அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ்காரர்கள் நடந்துகொண்டதைக் கண்டித்தார் முதல்வர் எம்ஜிஆர்.
சட்டமன்றத்திலும் இந்து முன்னணியின் பெயரால் நடத்தப்பட்ட பேரணியைக் கண்டித்துப் பேசினார் (29.03.1982). “மதவாதிகளின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிரிக்க நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகக் கூறியவர் எம்ஜிஆர். மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, முதல்வர் எம்ஜிஆர் டெல்லி சென்றிருந்தபோது, தமிழ்நாடு மாளிகைக்கு வந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதைச் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தெரிவித்தார் (17.02.1983). “மாநிலச் சுயாட்சிக்காக ராணுவத்தையும் சந்திப்பேன்” என்று அவர் சொன்னதும் இன்று நினைவுகூரப்பட வேண்டியது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘திராவிட மதம்’ என்று குறிப்பிட வேண்டும் என்றவர் அவர்.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இன்றைய தினம் 69% உயர்ந்ததற்கு எம்ஜிஆரும் ஒரு முக்கியக் காரணி என்பதை மறுக்க முடியுமா? திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கை சமூகநீதியல்லவா? இப்படி எம்ஜிஆரை இன்றைக்குத் திக கொண்டாட எவ்வளவோ நியாயமான காரணங்கள் உண்டு. “இந்துவாகப் பிறந்தேன். அதே நேரத்தில் இந்துவாகச் சாக மாட்டேன்” என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களுடன் பௌத்தம் தழுவிய அம்பேத்கருக்கே ஜெயந்தி கொண்டாடி ஒடுக்கப்பட்ட மக்களைத் தன் வசப்படுத்தும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டிருக்கும் காலகட்டம் இது.
தமிழ்நாட்டில் அவர்கள் கடைத்தேற எம்ஜிஆரைச் சுவீகரித்துக்கொள்ள எத்தனிக்கும்போது திக எப்படிக் கைகட்டிக்கொண்டிருக்க முடியும்? ஒருவரைப் பாராட்ட வேண்டும் அல்லது ஒருவருக்காக விழா எடுக்க வேண்டும் என்றால், நூற்றுக்கு நூறு விழுக்காடு எல்லாக் கொள்கைகளிலும் ஒத்துப்போக வேண்டும் என்று கூறினால், யாரையும் யாரும் பாராட்ட முடியாது!
- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
நிபுணர்களைப் பேசவிடுங்கள்
நடிகை ஸ்ரீ ப்ரியா நேர்காணல் (நவ.30) படித்தேன். ‘தொலைக்காட்சிகளில் நடிகைகள் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லலாமா?’ என்னும் கேள்விக்குப் பாரபட்சமின்றி தனது கருத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டிற்குரியது. ஆலோசனை என்கிற பெயரில் கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவது கண்டிக்கத்தக்கது. மனநலக் கல்வி, மனநல ஆலோசனை சிகிச்சை முறைகளைப் பயின்றவர்கள் முறையாக தனிப்பட்ட முறையில் அறிவியல் பூர்வமாக வழங்க வேண்டியதை விளம்பரத்திற்காகச் செய்வது நெறிமுறையான செயல் இல்லை. நடிகைகள் நிபுணர்களிடம் விவாதம் புரியலாம். அவர்களிடம் கேட்டு பதில் அளிக்கலாம். அல்லது நிபுணர்களும் பங்கேற்றுப் பேச வைக்கலாம். நடிகைகளே நிபுணர் அவதாரம் எடுப்பது ஆபத்தான போக்கு.
-டாக்டர் ஜி.ராஜமோகன், உளவியல் சிகிச்சை நிபுணர், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT